top of page

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை முழுமையாக ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் !!


அ.தி.மு.க.வில் கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த போது அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் கூட்டப்பட்டது. இந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்று முறையிட்டார். ஆனால் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கட்சித் தேர்தலில் பொதுச்செயலாளராக


எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையும் பொதுக்குழு அங்கீகரித்தது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட சட்ட விதிகள் திருத்தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆவணங்களை சமர்ப்பித்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் உடனே எந்த முடிவும் எடுக்காமல் அதை கிடப்பில் போட்டது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் டெல்லி ஐகோர்ட்டில் முறையிட்டனர். அப்போது தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. தொடர்பான ஆவணங்களை சமர்பித்துள்ளதாகவும், ஆனால் தேர்தல் கமிஷன் இதில் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வதால் விரைந்து முடிவெடுக்க உத்தரவு விடுமாறும் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடர்ந்தனர்.


இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் மனு மீது தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பெங்களூர் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை சமர்பித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என்று வலியுறுத்தினார். இந்த நிலையில் டெல்லி கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருந்த போதே அ.தி.மு.க. பொதுச்செயலா ளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. கோர்ட்டும் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தாக்கல் செய்திருந்த ஆவணங்கள் அனைத்தையும் தேர்தல் கமிஷன் இப்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றும், துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. வழக்கறிஞரான முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை கூறுகையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.தான் உண்மையான அ.தி.மு.க. என்று நீண்ட நெடிய சட்ட போராட்டம் நடத்தினோம். கட்சியின் பொதுக்குழு தான் உயர்ந்த அதிகாரம் கொண்டது. அந்த வகையில் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு தான் உள்ளது. அவர் பொதுச்செயலாளராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தேர்தல் கமிஷனில் ஆவணங்களை சமர்ப்பித்திருந்தோம். இதில் எங்களுக்கு அடுத்தடுத்து வெற்றி கிடைத்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் கமிஷன் இப்போது தனது இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது. இதன் மூலம் சட்டம் ஜெயித்துள்ளது. நீதி நியாயம்தான் வென்றுள்ளது என்பது நிரூபணமாகி உள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக ஏற்றுக்கொண்டது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


Comments


bottom of page