top of page

நடிகர் அடிவி சேஷ் நடிக்கும் 'G2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!

mediatalks001

நடிகர் அடிவி சேஷ் நடிக்கும் 'G2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு


தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான அடிவி சேஷ் நடிக்கும் 'G2'எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பான் இந்திய திரைப்படமாக தயாராகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட பார்வையும் வெளியிடப்பட்டிருக்கிறது.


'HIT 2' எனும் திரைப்படத்தின் மூலம் இரட்டை ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்து நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கிறார் நடிகர் அடிவி சேஷ். இவரது நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'G2' ( கூடாச்சாரி 2) என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கூடாச்சாரி படத்தின் முதல் பாகம், இந்திய அளவில் நடைபெறும் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இதன் இரண்டாவது பாகத்தின் கதை சர்வதேச அளவில் நடைபெறுவதாக உருவாக்கப்படுகிறது. இதற்கான கதையை நடிகர் அடிவி சேஷ் எழுதுகிறார்.


இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'மேஜர்' எனும் படத்திற்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய வினய் குமார் சிரிகீனீடி, இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 'காஷ்மீர் ஃபைல்ஸ்', 'கார்த்திகேயா 2', 'மேஜர்' போன்ற அகில இந்திய அளவில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படங்களை வழங்கிய தயாரிப்பாளர்கள் டி. ஜி. விஸ்வபிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆகியோர் பீப்பிள் மீடியா ஃபேக்டரி , அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஏ. கே. என்டர்டெய்ன்மெண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் இந்த படத்தை இணைந்து தயாரிக்கிறார்கள்.


இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழுவினர், 'ப்ரீ விஷன்' எனப்படும் முன்னோட்ட பார்வைக்கான காணொளியையும் வெளியிட்டிருக்கிறார்கள். இதில் நாயகன் சேஷ், சம்பிரதாயமான உடையில் மிடுக்காகவும், ஸ்டைலாகவும் தோன்றி உயர்ந்த கட்டிடத்திலிருந்து கீழே விழும்போது துப்பாக்கியால் சுடுவதை காணலாம். இந்த காட்சிக்காக நடிகர் தன் உடலை வருத்திக் கொண்டு நடித்திருக்கிறார்.


மேலும் இந்த காணொளியில் நடிகர் சேஷ், இந்தியாவிலிருந்து ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள் வரை செல்லும் கூடாச்சாரியின் இறுதி காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதனை தொடர்ந்து அவரது முதல் தோற்றம், கூடாச்சாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகிறது. 'G2' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


கதையின் காலகட்டம், உருவாக்கம், தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, சர்வதேச அளவிலான தொழில்நுட்ப குழுவினரின் திட்டமிடல் ஆகியவற்றின் அடிப்படையில் இப்படத்தின் உருவாக்கம், எதிர்பார்த்ததை விட அதிகமாகவும், பிரம்மாண்டமானதாகவும் இருக்கும் என தெரிய வருகிறது.


தொடர்ந்து வெற்றிகளை அளித்து வரும் நடிகர் அடிவி சேஷ் கதை எழுதி, கதையின் நாயகனாக நடிக்கும் 'G2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்ட பார்வையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை விதைத்திருக்கிறார்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page