top of page

அன்பால் புதியதோர் உலகஞ்செய்வோம்- நாசர்


ஓ என் பாசத்திற்குரியீர் !


அரசியலை வியாபாரமாக்குவதும் வியாபாரத்தை அரசியலாக்குவதும் இந்த ஒரு நிகழ்வோடு நிறுத்தி விடுவீராக! யாரும் தனிமனிதரல்ல இந்த தரணியிலே, அப்படி தனித்தனியா குரல் கொடுப்பதினாலேயே இன்று நாம் தனித்தனி தீவுகளாக மிதந்து கொண்டிருக்கிறோம். ஒன்றுகூடி தீர்க்க வேண்டியவைகளின் பட்டியல் நீண்டு கிடக்கிறது. கூட்டாக உருவாக்கப்படும் திரைப்பட ஊடகத்தில் தனியொரு நபரின் கருத்துக்களாக வெளிவருவதில்லை. சமயத்தில் சொந்தக் கருத்துக்களையும் ஒதுக்கி வைத்து படம் சொல்கின்ற கருத்தினை சொல்ல வேண்டியிருக்கிறது. நம் வரலாற்றில் சோகமும் வலியுமாய் அடங்கி கிடக்கிறது. ஒவ்வொரு கலைக்கும் ஊடகத்திற்கும் அதனதற்கான சமுதாயப் பொறுப்புகள் இருக்க செய்கின்றன. தம்பி சூர்யா அவருக்குக் கொடுத்த பொறுப்பினை செவ்வனே செய்யத்தான் முற்பட்டிருக்கிறார். வேறு உட்காரணங்கள் இருப்பதாக வர்ணம் பூசி, போதுமான அளவிற்கு அறுத்து ஆயப்பட்டு விட்டது. சிலர் மனம் புண்பட்ட அந்த பிம்பம்கள் படத்தினின்று எடுத்தெறியப்பட்டு விட்டதாகவும் அறிகிறேன்.


இந்தச்சூழலில் இதற்கான, விலை பேச முற்படுவது வேதனை. எதிர்காலம் குறித்த கவலையையும், அச்சத்தையும் கொண்டு சேர்க்கிறது. சம்பந்தபட்டவர்கள் இத்தோடு இதனை முடிவுக்கு கொண்டு வருவது பொது சமூகத்திற்கு நன்று.

மேற் சொன்னதுபோல் ஒன்றுகூடி ஆற்ற வேண்டிய கடமைகளும், எடுக்கப்பட வேண்டிய தீர்வுகளும் எண்ணிலடங்கா சிதறிக்கிடக்கின்றன. வன்மமின்றி அன்பால் அதைப் பொறுக்கிச்சேர்ப்போம், புதியதோர் உலகஞ்செய்வோம்.

நன்றி!


- நாசர்,


நடிகர்.

நடிகர், நடிகைகள் சமூகம் சார்பாக.



bottom of page