'அகடு' விமர்சனம்

சந்தோசமாக சுற்றுலா செல்லும் நான்கு இளைஞர்கள் கொடைக்கானலுக்கு வருகின்றனர் .அதே சமயம் ஒரு டாக்டர் தன் மனைவி , 12 வயது மகளுடன் இளைஞர்கள் தங்கும் விடுதிக்கு அருகில் தங்குகிறார் .
இந்நிலையில் டாக்டர் குடும்பத்துடன் ஊரை சுற்றி பார்க்க காரில் செல்லும்போது ,கார் வழியில் நின்று விட ,அவ்வழியே செல்லும் இளைஞர்கள் டாக்டர் குடும்பத்தை அவர்களது காரில் அழைத்து செல்ல , இளைஞர்களும் டாக்டர் குடும்பமும் நட்பாகி விடுகின்றனர்.
இளைஞர்களின் நட்பினால் அன்றிரவு அவர்களுடன் டாக்டர் ஒன்றாக மது அருந்துகிறார் .மறு நாள் காலையில் இளைஞர்களில் ஒருவரும் ,டாக்டர் மகளும் காணாமல் போக ,கொதிப்படைந்த டாக்டர் காணாமல் போன இளைஞன்தான் தன் மகளை கடத்தியிருப்பான் என சந்தேகப்பட்டு போலீசில் புகார் கொடுக்கிறார் .
போலீஸும் இளைஞனின் நண்பர்களை அடித்து விசாரித்து ,டாக்டர் மகளையும் அந்த இளைஞனையும் தேடிக்கொண்டு இருக்கும் நிலையில்,
ஒரு புதரில் கொலை செய்யப்பட்ட இளைஞனின் உடல் கண்டெடுக்கப்படுகிறது .

புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞனை கொலை செய்த கொலையாளி யார் ?
டாக்டரின் மகளை போலீசார் கண்டுபிடித்தார்களா ? என்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் படம்தான் 'அகடு'
இளைஞர்களாக சித்தார்த் ,ஸ்ரீராம் ,கார்த்திக் , டாக்டராக விஜய் ஆனந்த் ,மனைவியாக அஞ்சலி நாயர் என நடிப்பில் அனைவரது பங்களிப்பும் சிறப்பு .
போலீஸ் அதிகாரியாக ஜான் விஜய் கேலி கிண்டல் வசனங்கள் இல்லாமல் கதாபாத்திரத்தின் தன்மையறிந்து மிக சிறப்பாக நடிக்கிறார் .
ஜான் சிவநேசனின் இசையும் , சாம்ராட்டின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .

க்ரைம் திரில்லர் கதையை மையமாக வைத்து , டாக்டர் மகளை கடத்தியவர்கள் வன காவலாளியா , காணாமல் போன இளைஞனா, கஞ்சா விற்கும் கும்பலா என ரசிகர்களை குழப்புவதுடன் ,
இளைஞன் கொலையானவுடன் சீட்டின் நுனிக்கே ரசிகர்கள் வரும் நிலையில் தெளிவான திரைக்கதை அமைப்பில் யாருமே யூகிக்க முடியாத வகையில் எதிர்பாராத கிளைமாக்ஸ் என சிறிய பட்ஜெட்டில் அனைவரது கை தட்டலுடன் மிக திறமையாக இப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் சுரேஷ் குமாரை மனமார பாராட்டலாம் !!