top of page

'பாசக்கார பய' - விமர்சனம்!




கிராமத்தில் உள்ள பணக்கார இளைஞன் பிரதாப், தாயில்லாமல் தந்தையுடன் வசிக்கும் காயத்ரியை விரும்புகிறார். ஆனால் காயத்ரியோ ஜெயிலில் இருக்கும் தனது தாய்மாமன் விக்னேஷை தான் காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறி பிரதாப்பின் காதலை மறுக்கிறார்.


ஜெயிலில் இருந்து திரும்பி வரும் விக்னேஷ் தன் மாமன் மகள் தன் மீது வைத்துள்ள அன்பை உணர்ந்தாலும் காயத்ரியை தன் மனைவியாக ஏற்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் பிரதாப்பிற்கும் காயத்ரிக்கும் தொடர்பு இருப்பதாக கூட அபாண்டமாக பழி சுமத்துகிறார்.


விக்னேஷ் எதற்காக இப்படி செய்கிறார் ? காயத்ரி விக்னேஷை மணந்தாரா ? இல்லை காயத்ரியுடன் பிரதாப்பின் காதல் கை கூடியதா என்பது மீதிக்கதை.


ஒரு கிராமத்தில் நடக்கும் காதல், வட்டிக்கு பணம் கொடுத்து ஏழைகளை துன்புறுத்தும் வில்லன், சகோதரிக்காக ஜெயிலுக்கு சென்ற தம்பி என எதார்த்த மனிதர்களை வைத்து இந்த படத்தை உருவாக்கி உள்ளார்கள்.


நீண்ட நாளைக்கு பிறகு நடிகர் விக்னேஷை ஒரு கிராமத்து கதாபாத்திரத்தில் பார்க்க முடிவது மகிழ்ச்சியைத் தருகிறது. ஜெயிலில் இருக்கும் போதும் சரி, கிராமத்திற்கு வந்த பின்னும் சரி, தாய்மாமன் என்கிற முறையில் அக்கா மகளின் அன்புக்கு பாத்திரமாகவும் சரி, எல்லாவித உணர்வுகளையும் கலவையாக வெளிப்படுத்தியுள்ளார் விக்னேஷ். அவர் எதற்காக காயத்திரி மீது கோபப்படுகிறார் என்கிற விஷயம் தெரிய வரும்போது அவர் மீது நமக்கு மதிப்பு கூடுகிறது.


கிராமத்து இளைஞனாக பிரதாப்.. தன் காதலி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்யும் விஷயங்கள் எல்லாம் சுவரில்லாத சித்திரங்கள் பாக்கியராஜ் பார்த்ததைப் போல மீண்டும் நினைவுபடுத்துகின்றன. பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.


படத்தின் முக்கிய தூண் என்றால் அது இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் நாயகி காயத்ரி தான். அம்மாவாகவும் மகளாகவும் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் நல்ல வித்தியாசம் காட்டி நடித்துள்ளார்.


படத்தில் வில்லனாக நடித்துள்ளவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கஞ்சா கருப்பு தன்னால் முடிந்த அளவிற்கு நகைச்சுவையில் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.


கதை தொண்ணூறுகளின் காலகட்டத்தில் நிகழ்வது போல இருப்பதால் காட்சிகளில் சற்று வேகம், விறுவிறுப்பு குறைவாக இருப்பது போன்று தோன்றுகிறது. குடும்ப உறவுகளின் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக உருவாகியிருக்கும் இந்த பாசக்கார பய நிச்சயம் நம் மனதில் இடம் பிடிப்பான்.



நெடுநீர் ; விமர்சனம்

சிறுவயதிலே நட்பாக பழகும் ஒரு சிறுவனும், சிறுமியும் சூழலால துரத்தப்பட்டு தமது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர். எங்கு செல்வது எப்படி செல்வது என எந்த இலக்குமின்றி பயணிக்கின்றனர். இந்த சூழலில் நள்ளிரவில் நடுவழியில் இருவரும் பிரிய நேர்கிறது.


எட்டு வருடங்கள் கழித்து கடலூரில் இருவரும் சந்திக்க நேர்கிறது. ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக உயிரைக் காப்பாற்றும் இடத்தில் அவள், உள்ளூர் தாதாவின் அடியாளாக உயிரைக் கொல்லும் இடத்தில் அவன்.


காதலுக்காக தாதாவை விட்டு விலகிச்செல்ல நினைக்கையில் தாத்தாவும் கோபப்படுகிறார்.. பழைய பகையும் அவனை துரத்துகிறது. அதிலிருந்து அவன் தப்பினானா ? இல்லை தாதாவின் கோபத்துக்கு ஆளானானா ? காதலர்கள் இணைந்தார்களா என்பதற்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.


நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ராஜ்கிருஷ், சாது மிரண்டால் காடு கொள்ளாது, என்ற பழமொழிக்கு ஏற்றபடி அமைதியான முகமாக இருந்தாலும் ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். முதல் படம் போல் இல்லாமல் காதல் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் அளவாக நடித்து கவர்கிறார்.


நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை இந்துஜா, இயல்பான முகம். எந்தவித சினிமாத்தனமும் இன்றி இயல்பாக நடித்திருக்கிறார்.


அண்ணாச்சியாக நடித்திருக்கும் மா.சத்யா முருகன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, நடிப்பு, சண்டைக்காட்சி என அனைத்திலும் கவனிக்க வைக்கிறார். நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் கோலிவுட்டில் முக்கிய இடம் பிடிப்பார்.


நண்பனின் கொலைக்காக நாயகனை பழி தீர்க்க துடிக்கும் எச்.கே.மின்னல் ராஜா உள்ளிட்ட இளைஞர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள். மற்ற வேடங்களில் நடித்திருக்கும் மதுரை மோகன் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.


லெனின் சந்திரசேகரனின் ஒளிப்பதிவில் கடலூர் அழகையும், கடலின் அழகையும் ரசிக்க முடிகிறது. ஹித்தேஷ் முருகவேல் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.


இந்தப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கும் கு.கி.பத்மநாபன் காதல் கதையை ரவுடிசம் பின்னணியில் நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். புதுமுகங்களை வைத்துக்கொண்டு தான் சொல்ல வந்த கதையை மிக இயல்பாக சொல்லியிருப்பவர், காதல் கடலைப்போன்று பிரமாண்டமானது என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.


எளிமையான பின்னணியில் இப்படி ஒரு தாதாயிச படத்தை கொடுக்க முடியுமா என ஆச்சர்யப்பட வைத்துள்ளார் இயக்குனர் கு.கி.பத்மநாபன்.

bottom of page