'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' விமர்சனம்

தன் அப்பத்தாவுக்கு மஞ்சள் காமாலை நோய் சீராக கிராமத்தில் உள்ள ஒரு வைத்தியரிடம் செல்லும் மிதுன் மாணிக்கம் அங்கு நடக்கும் ஒரு பிரச்சனையில் ஒருவனை அடித்து விட ,அவன் அரிவாளுடன் ரவுடிகளை அழைத்து வர அவர்களுக்கு பயந்து வைத்தியர் வீட்டில் பதுங்கி கொள்கிறார் ,
வைத்தியரின் மகளான ரம்யா பாண்டியனை பார்க்கும் அப்பத்தா
மிதுன் மாணிக்கத்துக்கு நிச்சயம் பேசி திருமணம் செய்து வைக்கிறார்.
ரம்யா பாண்டியன் வளர்த்து வந்த கருப்பன், வெள்ளையன் என
இரண்டு காளை கன்றுகளை வைத்தியரான ரம்யா பாண்டியனின்
தந்தை தன் மகளின் திருமணத்திற்கு சீதனமாக கொடுக்க,
மிதுன் மாணிக்கமும், ரம்யா பாண்டியனும் கருப்பன், வெள்ளையனை குழந்தைகளை போல் பாவித்து வளர்த்து வருகிறார்கள்.
நாளடைவில் காளைகளாக வளர்ந்த இரண்டு மாடுகளும்
ஒரு நாள் காணாமல் போக, காவல் நிலையத்தில் போலிசாரிடம்
புகார் அளிக்க செல்லும் மிதுன் மாணிக்கத்தை
புகாரை ஏற்காமல் தலைமை காவலர் விரட்டுகிறார் .
எங்கு தேடியும் காளைகள் கிடைக்காத ஏக்கத்தில் மிதுன் மாணிக்கமும் ,ரம்யா பாண்டியனும் இருக்கும் நிலையில் ,
மிதுன் மாணிக்கம் வாழும் ஊரை பற்றிய செய்திகளை சேகரிக்க வரும் செய்தியாளர் வாணி போஜன் மிதுன் மாணிக்கம் ரம்யா பாண்டியன் பிரச்னை அறிந்து தனது ஊடக துறை முலம் காணாமல் போன காளை மாடுகளை கண்டுபிடிக்க உதவுகிறார்
காளை மாடுகளை கடத்தியவர்கள் யார் ?
எந்த பிரச்சனையால் காளை மாடுகள் தொலைந்து போனது ?
தொலைந்து போன காளை மாடுகள் வாணி போஜன் உதவியால் கிடைத்ததா?
இதற்கான கேள்விகளுக்கு விடை சொல்லும் படம்தான்'
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்'
கதையின் நாயகனாக நடித்துள்ள மிதுன் மாணிக்கம் மிக சரியான தேர்வு !புதுமுக நடிகர் போல இல்லாமல் அனுபவ நடிகராக குன்னி முத்து கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார் .
நாயகியாக ரம்யா பாண்டியன் தான் வளர்த்த காளைகளுடன் பேசும்போதும் குழந்தைகளாக நினைத்து கொஞ்சும்போதும் இயல்பான நடிப்பில் வீராயியாகவே தெரிகிறார் .
அப்பத்தாவாக வரும் லஷ்மி, மிதுன் மாணிக்கத்தின் நண்பனாக வரும் வடிவேல் முருகன், ஊடக செய்தியாளராக வரும் வாணி போஜன் மற்றும் மனோஜ் தாஸ் ,செல்வேந்திரன் ,பருதி ,சதிஷ் குமார் என அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
ஒளிப்பதிவில் வண்ண மயமான அழகிய கிராமத்தை காட்சிகளில் செதுக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.
இசையில் கிரிஷ் பாடல்களும் , கிராம கதைக்கான பின்னணி இசையும் படத்திற்கான பலம்
கிராமத்தில் வசிப்பவர்கள் கன்றுகள் முதல் காளைகள் வரை தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து பாசமாக வளர்ப்பது இன்றும் நடைமுறையில் உள்ள வழக்கம் .
கிராம பின்னணியில் காளைகள் மேல் பாசம் வைத்த ஒரு குடும்பத்தை மையமாக கொண்டு ,அதில் அரசியல் தலைவர்கள் செய்யும் அட்டூழியங்கள் ,விவசாய தலைவர் என சொல்லி கொள்பவர் செய்யும் ஏமாற்று வேலை , ஊரை வைத்து கொள்ளையடிக்கும் அரசு அதிகாரிகள் என அனைத்து அக்கிரமங்களையும் இந்த கதையுடன் இணைத்து ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் அரிசில் மூர்த்தி