top of page

திரையரங்குகள் குறைந்து கொண்டிருக்க டாஸ்மாக் கடைகள் கூடுகின்றன : பேரரசு பேச்சு!


சினிமாவில் இன்று பெரிய ஹீரோக்களுக்கும் பேய்களுக்கும் தான் மரியாதை

என்று இயக்குநர் பேரரசு கூறினார்.


இது பற்றிய விவரம் வருமாறு: ஸ்ரீ அங்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,

பிரசாந்த் சீனிவாசன், காயத்ரி ரீமா, பிரசாத் மற்றும் பலர் நடிப்பில்

சுந்தரவடிவேல் எழுதி இயக்கியிருக்கும் படம் 'ரீ '. ஒரு சைக்கோ திரில்லராக

உருவாக்கி இருக்கும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில்

நடைபெற்றது.


விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இயக்குநர் பேரரசு பேசும்போது,


"ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமாவில் சில வார்த்தைகள் பேசப்படும்.கறுப்பு

வெள்ளை படங்கள் வந்தபோது அபூர்வமாக கலர் படங்கள் வந்தன. அப்படி வரும்

போது போஸ்டர்களில் ஈஸ்ட்மேன் கலர் திரைப்படம் என்று போடுவார்கள். பிறகு

சினிமாஸ்கோப் வந்தது .பல படங்களில் ஏதாவது ஒன்றுதான் சினிமாஸ் கோப்பாக

இருக்கும். அப்போது இது சினிமா ஸ்கோப் படம் என்று போடுவார்கள். அது போல

இன்று 'தியேட்டர் ஆடியன்ஸ்' என்ற வார்த்தை சொல்லப்படுகிறது. இந்த

வார்த்தை சினிமாவுக்கு ஒரு சாபம்.



சினிமா எடுப்பதே தியேட்டர்களுக்கு வருவதற்குத் தானே? அது என்ன தியேட்டர்

ஆடியன்ஸ்?அவர்கள் கோணத்தில் அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால்

ஒரு சினிமா மீது ஆர்வம் உள்ள சினிமாவை நம்பி இருக்கும் என்

போன்றவர்களுக்கு அது அவலமாகத் தெரிகிறது. வருத்தப்பட வைக்கிறது.



இன்று மக்கள் திரையரங்கிற்கு வருவதற்குத் தயங்குகிறார்கள். சின்ன படங்கள்

ஓடுவதில்லை. சிறிய படங்களுக்கு, சிறிய முதலீட்டு படங்களுக்குத்

திரையரங்குகள் கிடைப்பதில்லை.கேட்டால் மக்கள் வரவில்லை என்கிறார்கள்.

பெரிய கதாநாயகர்களின் படங்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.


இந்த சினிமாவை காப்பாற்றுபவர்கள், பெரிய ஹீரோக்களும் பேய்களும் தான் தான்

என்று சொல்லத் தோன்றுகிறது.இன்று பெரிய ஹீரோக்களுக்கும் பேய்களுக்கும்

தான் சினிமாவில் மதிப்பு இருக்கிறது.


இன்று மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை.கமல், ரஜினி, விஜய், அஜித்

போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தால் வருகிறார்கள். அல்லது

பாகுபலி,கேஜிஎப் போன்ற பிரம்மாண்டமான பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும்

படங்கள் என்றால் வருகிறார்கள்.சிறிய படங்களுக்கு வருவதில்லை.


அதிலும் ஒரு சின்ன ஆறுதல். சிறிய படங்களில் பேய்ப் படங்கள் ஓடுகின்றன.

அதற்கு மட்டும் திரையரங்குகள் கிடைக்கின்றன. இப்படியான பேய்ப்

படங்களுக்கு பிற மொழிகளில் விற்பனை மதிப்பு இருக்கிறது.


அந்த வகையில் இந்த 'ரீ 'படம் ஒரு பேய்ப் படமாக உருவாக்கி இருக்கிறது.

இப்படி இன்றைய சூழலையும் மக்களின் உணர்வையும் புரிந்து கொண்ட அந்த ஒரு

நம்பிக்கையில் தான் இந்தப் படத்தை சுந்தரவடிவேல் எடுத்துள்ளார்.



பெரிய கதாநாயகர்கள் படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெறலாம் .ஆனால்

தாத்தில் பேசப்படுபவை சிறிய படங்கள் தான்.


சிறு முதலீட்டுப் படங்களில் தான் நல்ல படங்கள் வந்துள்ளன என்பதை மறந்து

விடக்கூடாது.



இப்போது ஏ சென்டர் பி சென்டர் சி சென்டர் என்பதெல்லாம் இல்லை. ஒரே

சென்டர் தான் ஏ சென்டர். வேறு வழியில்லை அப்படி இருக்கிறது நிலைமை.

திரையரங்குங்களுக்கு மக்கள் வராததற்கு யார் காரணம்?



சினிமா டிக்கெட் விலைதான் காரணம் என்று சொல்வார்கள். ஆனால், அது

தவறானது. சினிமா டிக்கெட் விலை ஒன்றும் அப்படி ஒன்றும் அதிகமாக இல்லை.

ஆனால் ஒரு குடும்பத்தோடு படம் பார்க்கச் சென்றால் திரைப்படத்துக்கான

டிக்கெட் விலையை விட அங்கு கேண்டீனில் விற்கப்படும் பாப்கார்ன் மூன்று

மடங்குவிலை அதிகமாக இருக்கிறது. அதனால் செலவு அதிகமாகிறது.அதனால் மக்கள்

திரையரங்கிற்கு வருவதற்கு பயப்படுகிறார்கள்.வாகனங்களின் பார்க்கிங்

கட்டணங்கள் மிக அதிகம்.இதையெல்லாம் நினைத்துக் கொண்டுதான் பயந்து, மக்கள்

வரத் தயங்குகிறார்கள்.சாதாரண 20 ரூபாய் பாப்கார்ன் 120 ரூபாய்க்கு

விற்கிறார்கள். 20 ரூபாய் பாப்கார்னை இரு மடங்காக 40 ரூபாய்க்கு விற்றுக்

கொள்ளுங்கள் பரவாயில்லை.ஆனால் இவர்கள் 120 ரூபாய்க்கு விற்கிறார்கள்.இது

கொள்ளை இல்லையா? இது அரசாங்கத்தினுடைய அனுமதியுடன் கேண்டீனில்

அடிக்கின்ற கொள்ளை என்று தான் சொல்ல வேண்டும்.அதேபோல் வாகனங்களுக்கான

பார்க்கிங் கட்டணம் சினிமா டிக்கெட்டை விட அதிகமாக இருக்கிறது.

இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு ஒரு வரையறை செய்யாவிட்டால்

திரையரங்குகளுக்கு மக்கள் வர மாட்டார்கள். இது சம்பந்தமாக அரசு

கட்டுப்படுத்தி முறைப்படுத்த வேண்டும்.ஏனென்றால் சினிமா மூலம் அரசுக்கு

ஏகப்பட்ட வரிப் பணம் கிடைக்கிறது. மத்திய அரசுக்கும் சரி மாநில

அரசுக்கும் சரி,இந்த வரி கிடைக்கிறது.



நம் நாட்டில் டாஸ்மாக் கடைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. தெருவுக்கு

ஒன்று இருந்த இடத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன.ஆனால்

திரையரங்குகள் குறைந்து கொண்டே வருகின்றன. நான்கு இருந்த இடத்தில்

இரண்டுதான் இருக்கின்றன .என்ன காரணம்? இரண்டின் மூலமும்

அரசாங்கத்துக்கு வருமானம்தானே வருகிறது?


திரையரங்கில் இருந்து கேன்டீனில் அடிக்கப்படும் கொள்ளையை அரசு தடுத்தால்

சினிமா மூலம் அரசுக்கு வரும் வருவாயும் பெருகும். அப்படிச் செய்தால் தான்

மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள்.


மக்களைத் திரையரங்கு நோக்கி வரவழைக்கும் பொறுப்பு தயாரிப்பாளர்களுக்கு,

நடிகர்களுக்கு, இயக்குநர்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் இருக்கிறது.

எனவே இதை ஒரு வேண்டுகோளாக நான் இந்த அரசிடம் வைக்கிறேன்.


திரையரங்கு கேண்டீன் கொள்ளைகளைக் கட்டுப்படுத்துங்கள்.திரை உலகை வாழ

வையுங்கள். மீண்டும் மக்களை திரையரங்குகளுக்கு வர வையுங்கள்.

அப்போது எல்லா படங்களும் வெற்றி பெறும்.


இந்தப் படத்தை ஒரு மனப்பிரச்சினை , மனநோயாளி பற்றிய கதையாக உருவாக்கி

இருக்கிறார்கள். அடுத்தவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறவன் தான்

மனநோயாளியாக இருப்பான். அப்படிப்பட்ட பிரச்சினையை இயக்குநர் சொல்லி

இருக்கிறார் என்று நினைக்கிறேன்.இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்"

என்று பேசினார்.


நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் சுந்தர் வடிவேல் பேசும்போது,


"பலருக்கும் கதை கேட்பது பிடிக்கும். எனக்குக் கதை சொல்வது பிடிக்கும்

.சிறு வயதிலிருந்தே நான் நிறைய கதைகள் சொல்லி சொல்லி வளர்ந்தவன்.

அப்படி ஒரு கதையை உருவாக்கிக் கொண்டு தயாரிப்பாளர் தேடிய போது

கிடைக்கவில்லை.அதுவும் கொரோனா காலகட்டத்தில் தயாரிப்பாளர் கிடைப்பது

சிரமமாக இருந்தது. எனவே நானே துணிந்து தயாரிப்பில் இறங்கி விட்டேன்.


இந்தப் படத்தில் பிரசாந்த் சீனிவாசன் நாயகனாகவும் காயத்ரி ரமா

நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.தினேஷ் ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவு

செய்துள்ளார்.


இசையமைப்பாளர் தினா வின் தம்பி ஹரிஜி இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகி

இருக்கிறார்.


ஒரு காலத்தில் அக்கம் பக்கம் அனைவரிடமும் நாம் நன்றாகப் பேசிப் பழகினோம்.

தூரத்தில் உள்ள நெருங்கிய உறவினரை விட அருகில் பக்கத்தில் உள்ள எதிரியால்

நமக்கு ஆதாயம் உண்டு என்று சொல்வார்கள்.



அந்த வகையில் இப்போது நாம் தனிமைப்பட்டு கிடக்கிறோம் .ஒரு பத்திரிகைச்

செய்தி பார்த்தேன்.பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் இருக்க, தனிமையில்

வாழ்ந்த ஒரு பெண்மணி தனியே சமைத்துச் சாப்பிட்டு வாழ்ந்து

கொண்டிருந்தார். வெளியுலகத் தொடர்புகள் இல்லாமல்

இருந்திருக்கிறார்.நான்கு நாட்களாக வீடு திறக்கப்படாதது அறிந்து அக்கம்

பக்கத்தில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டுப் போய்ப் பார்த்த போது துர்நாற்றம்

வீசி இருக்கிறது. போலீஸ் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது கட்டிலில்

உட்கார்ந்த நிலையிலே இறந்திருக்கிறார்.அந்த அளவிற்குத் தனிமையில்

மனிதர்கள் இருக்கிறார்கள். இப்படி மன நெருக்கடிக்கு ஆளாகும் டெலுஷனல்

டிஸ்ஆர்டர் (Delusional Disorder)எனப்படும் பிரச்சினை பற்றி இந்தப்

படத்தில் கூறி இருக்கிறேன்.


புதிதாக ஒரு பட முயற்சி என்று நான் இறங்கினாலும் படத்தில் அனைவரும்

ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள்.ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும்

இப்படத்திற்காக உழைத்திருக்கிறார்கள்.


இரண்டு வீடுகளை வைத்துக்கொண்டு இந்த முழுப் படத்தை எடுத்திருக்கிறேன்.

ஆனால் ஒரு பெரிய படத்திற்கான அனைத்து நேர்த்தியுடனும் இப்படம் உருவாகி

இருக்கிறது"என்று கூறினார்.


விழாவில் நடிகர் அப்பு குட்டி பேசும்போது,


"இந்த ரீ படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவருக்கும் எனது

வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒரு புதிய முயற்சிக்கு ஆதரவு தருவதற்கும் துணிச்சலாக முன்வர வேண்டும்

அப்படி இப்படத்திற்காகப் பலரும் முன்வந்து உழைத்து

இருக்கிறார்கள்.அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.


இன்று மன அழுத்தத்தால் பல பிரச்சினைகள் வருகின்றன.அதன் விளைவுகள் மோசமாக

இருக்கின்றன.இதனால் பிள்ளைகள் ,மாணவர்கள் தவறான முடிவுகள்

எடுக்கிறார்கள். அப்படி இருக்கக் கூடாது என்று இந்தப் படத்தில்

சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.படம் வெற்றி அடைய

வாழ்த்துக்கள்.


சிறு முதலீட்டுப் படங்களில் தான் நல்ல படங்கள், கருத்துள்ள படங்கள்

வருகின்றன. எனவே இதைப் பத்திரிகை நண்பர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க

வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."என்றார்.


இந்த நிகழ்ச்சியில் படத்தை விநியோகம் செய்யும் விநியோகஸ்தர் 9 வி

ஸ்டுடியோ ரமேஷ் ,படத்தில் நடித்திருக்கும் பிரசாந்த் சீனிவாசன்,

பிரசாத்,திவ்யா, ஒளிப்பதிவாளர் தினேஷ் ஸ்ரீநிவாஸ், இசை அமைப்பாளர் ஹரிஜி,

நடன இயக்குநர் தேப்பூர் முரளி,பின்னணி இசை அமைத்துள்ள ஸ்பர்ஜன் பால்,படத்

தொகுப்பாளர் கே. சீனிவாஸ் ,பாடலாசிரியர் தோழன் உள்ளிட்ட படக்குழுவினர்

கலந்து கொண்டனர்.



bottom of page