இசை வழியே என் தந்தையுடன் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி - தந்தை குறித்து உருக்கமாக பகிர்ந்த ஸ்ருதிஹாசன் !!
இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், முன்னணி நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, அவருடைய தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட்டான பாடல்களை தொகுத்து ஒரு இசை நடன நிகழ்வை அரங்கேற்றினார்.
ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை, தொகுத்து அதை தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது குழுவுடன் அவர் இணைந்து பாடி நடனமாடியது.. இசை வெளியீட்டு விழாவை மேலும் மிளிரச் செய்தது. இந்த தருணத்தை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அந்த காணொளியில் ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமல்ஹாசனின் பாதங்களை தொட்டு வணங்கி அவரது ஆசீர்வாதத்தை பெறுகிறார். அதே தருணத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசனை ஆரத்தழுவி அவரது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகிறார். மேலும் இது தொடர்பாக சில அரிய புகைப்படங்களையும் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.
இந்நிகழ்வு குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில்.., '' என் தந்தையின் திரை வாழ்வை கௌரவப்படுத்துவது எனக்கு கிடைத்த கௌரவம். அதுவும் இசையால் அதை நிகழத்துவது எனக்குப் பெருமை. அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற வெற்றிப்பாடல்களில் சிலவற்றை திறம்பட ஒன்றிணைத்து, தொகுத்து, ஒரு அற்புதமான மெலடியாக தயாரித்து வழங்கியதற்கு பெரு உதவியாக இருந்த எனது குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை ரசிகர்கள் முன் இந்நிகழ்வை அரங்கேற்றியது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் மேடையில் பாடி நடனம் ஆடும் போது என் தந்தையின் வசீகர சிரிப்பை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அவரது அன்பும், ஆதரவும், தான் என்னை இசையமைப்பாளராக வளர்த்தது. மேலும் பல இசை நிகழ்வுகளை எனது குழுவுடன் இணைந்து அரங்கேற்றுவேன்'' என்றார்.
இந்நிகழ்வில் மேடையில் ஸ்ருதிஹாசனுடன் இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் ரவிச்சந்தர், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் மற்றும் மகள் அதிதி ஆகியோரும் இசை மற்றும் நடன நிகழ்வுகளை அரங்கேற்றினர்.
'இந்தியன் 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் 1996 ஆம் ஆண்டில் வெளியான 'இந்தியன்' திரைப்படத்தின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் இந்த ஆண்டில் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிப்பில், ஸ்ருதிஹாசன் தெலுங்கு நடிகர் ஆத்வி ஷேஷ் நடிக்கும் தெலுங்கு திரைப்படமான டகோயிட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் பல அற்புதமான திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். அவரது உருவாக்கத்தில் சமீபத்தில் வெளியான சுயாதீன இசை ஆல்பம் "இனிமேல்" மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments