'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'எலக்சன்'. இதில் விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'அயோத்தி' படப் புகழ் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். இவர்களுடன் நடிகை ரிச்சா ஜோஷி, நடிகர்கள் 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத, மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாள, கலை இயக்கத்தை ஏழுமலை மேற்கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் அரசியலை மையப்படுத்தித் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகனான விஜய்குமாரின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றிருக்கிறது.
விரைவில் இப்படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக் , லிரிக்கல் வீடியோ, ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
Comments