MediaTalks Logo
Header Advertisement
cinema news
4 November 2026 at 17:44•9 Views

'தி டார்க் ஹெவன்' இயக்குநர் பாலாஜியின் அடுத்த திரைப்படத்தின் பூஜை !

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
'தி டார்க் ஹெவன்' இயக்குநர் பாலாஜியின் அடுத்த திரைப்படத்தின் பூஜை !

'தி டார்க் ஹெவன்' இயக்குநர் பாலாஜி இயக்கத்தில்

சித்து- தர்ஷிகா நடிக்கும் 'தி லாஸ்ட் கேஸ்' (The Last Case) திரைப்படத்தின் தொடக்க விழா!

அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் 'தி டார்க் ஹெவன் ' . அந்தப் படத்தை பிக்பாஸ் புகழ் முகங்கள் சித்து, தர்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் பாலாஜி இயக்கியிருந்தார். அது ஒரு கிரைம் திரில்லராக உருவாகியிருந்தது. அதே இயக்குநர் பாலாஜி தனது அடுத்த முயற்சியாக 'தி லாஸ்ட் கேஸ்' என்கிற படத்தைத் தொடங்குகிறார். இப்படத்தையும் அதே ட்ரீம் 7 சினிமாஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

இப்படத்திலும் முந்தைய படத்தில் நடித்த சித்துவே நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தர்ஷிகா நடிக்கிறார் .மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட குணச்சித்திர நடிகர்கள் நடிக்கிறார்கள் .இந்தப் படத்தின் பூஜை இன்று பிரசாத் லேப் பிள்ளையார் கோவிலில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இந்தப் புதிய படத்தின் போஸ்டர்களைப் பார்க்கும்போது 'ஒவ்வொரு குற்றமும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்லும் .அது குற்றவியல் சம்பந்தமான ஒரு கோட்பாட்டைத் திருத்தி எழுதும்' என்கிற இந்தக் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கதை அமைந்து இருக்கும் என்று தெரிகிறது.

Image
Image

இந்நிகழ்வில் ஊடகங்கள் மத்தியில் இயக்குநர் பாலாஜி பேசும்போது,

திரையரங்குகளில் வெற்றி பெற்ற 'தி டார்க் ஹெவன்' ஓடிடியில் செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று இருக்கிறது. அந்த மகிழ்ச்சியோடு இன்று நாங்கள் இந்தப் படத்தை தொடங்கி இருக்கிறோம்.இந்தப் படம் ஒரு கிரைம் திரில்லர் படமாகத்தான் உருவாக இருக்கிறது. முந்தைய படத்தில் நடித்து இருந்து சித்து, தர்ஷிகா, ஜெயக்குமார் இதிலும் நடிக்கிறார்கள்.வேறு புதிய நடிகர்களும் நடிக்க இருக்கிறார்கள்.முந்தைய படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் போன்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் இதிலும் தொடர்கிறார்கள்.

இதுவும் ஒரு மலைப்பகுதியில் நடைபெறும் குற்றம் புலனாய்வு சார்ந்த கதையாக இருந்தாலும் இந்தப் படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதில் பின்புலமாக வருகிற நிலவியல் காட்சிகள் படத்தை வேறு மாதிரியாக வேறுபடுத்திக் காட்டும்.

அந்தப் படத்தின் கதை சொல்லும் முறை வேறு மாதிரியாக அமைந்திருந்தது. பாத்திரங்கள் வேறு விதமாக தோன்றியிருப்பார்கள். இதில் ஒவ்வொரு பாத்திரத்திலிருந்தும் ஆழமான உணர்வுகள் வெளிப்படும் வகையில் கதையும் காட்சிகளும் அமையும்.

எங்கள் குழுவினர் இணைந்து உருவாக்கிய முந்தைய 'தி டார்க் ஹெவன்' படம் வணிக ரீதியாகப் பெரிய வெற்றி பெற்றது.அதற்குப் பெரிதும் காரணமாக இருந்தது ஊடகங்கள் தான். அதனால் தான் உங்கள் முன்னிலையில் இந்தப் படத்தைத் தொடங்குகிறோம்.இந்தப் படத்திற்கும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

அதே படக் குழுவாக இருந்தாலும் அதே மாதிரியான படமாக இருக்குமோ என்கிற எண்ணத்தை உடைக்கும் வகையில் இந்தக் கதை இருக்கும்.நிச்சயமாகப் புதிய திரையரங்க அனுபவத்தைத் தரும் வகையில் இருக்கும் என்பதை மட்டும் இப்போது சொல்லிக் கொள்கிறோம்.

அதில் உணர்ச்சிகரமான காட்சிகளைக் காட்டியிருக்க மாட்டோம் . இதில் பாத்திரங்களுக்கு உணர்ச்சிமயமான காட்சிகள் இருக்கும்.அதில் பேண்டஸி கலந்து இருக்கும் ;இதில் அது இருக்காது.இப்படி முற்றிலும் வேறுபட்டதாகவே இந்தப் படம் இருக்கும்

இப்போதைக்கு இக்கதையின் பின்னணியில் உண்மைச் சம்பவங்கள் உள்ளன என்ற குறிப்பை மட்டும் கூறலாம். படத்தைப் பற்றிய புது தகவல்கள் போகப் போக வெளியாகும். "என்றார்.

Image
Image

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கதாநாயகன் சித்து பேசும்போது,

"நான் தொலைக்காட்சித்தொடர்களில் திரைப்படங்களில் தோன்றினாலும் எனது வெற்றிப் பயணத்தில் பிள்ளையார் சுழி போட்டது 'தி டார்க் ஹெவன் ' படம்தான்.சகோதரர் இயக்குநர் பாலாஜி அந்தப் படத்தின் மூலம் எனது வெற்றிக்கான தொடக்கப் புள்ளியை அமைத்து வெற்றிப் படியேற வழி செய்து கொடுத்தார். அதன் அடுத்தபடியாகத்தான் இந்தப் பட வாய்ப்பையும் அளித்துள்ளார் என்று கூற வேண்டும்.

அந்த வகையில் அந்தப் படத்தின் வெற்றியை நான் அனுபவித்தேன் .படத்தின் வெற்றியின் விளைவை நான் செல்லும் இடங்களில் எல்லாம் காண முடிந்தது. அந்தப்படம் எனக்கு ஒரு பெரிய அடையாளமாக இருந்தது. நான் அதற்கு முன்பு எங்கே சென்றாலும் எனது தொலைக்காட்சி பங்களிப்பைப் பற்றித் தான் பேசுவார்கள். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தான் அதில் நான் நடித்த பாரி என்கிற கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி அடையாளப்படுத்தினார்கள்.என்னைப் பார்க்கிற இடங்களில் ”பாரி பாரி” என்று அழைத்தது எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படமும் அந்த வெற்றி வரிசையில் அமையும் என்று நம்புகிறேன்" என்றார்.

கதாநாயகி தர்ஷிகா பேசும் போது,

" இப்போதுதான் 'தி டார்க் ஹெவன்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது போல் இருக்கிறது .ஆனால் அந்தப் படம் வெளியாகி வெற்றி பெற்று அடுத்த படத்தையும் தொடங்கி இருக்கிறோம் .இதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்தப் படமும் நன்றாக வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .அந்தப் படத்தை விட இதில் எனக்கு மாறுபட்டதாகச் சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரமாக இருக்கும்" என்றார்.

இந்நிகழ்வில் குணச்சித்திர நடிகர் ஜெயக்குமார், தயாரிப்பாளர்கள் கோபால் , சரண் ,இசையமைப்பாளர் சக்தி பாலாஜி மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: