'மிஷன் சாப்டர் 1' திரைத் துறையில் எனக்கு புதிய இன்னிங்ஸ்" - நடிகை ஏமி ஜாக்சன்!
தமிழ் திரையுலகில் தனது அழகாலும் திறமையான நடிப்பாலும் பார்வையாளர்களின் இதயங்களை கொள்ளையடித்த நடிகை ஏமி ஜாக்சன், ‘மிஷன் சாப்டர் 1’ மூலம் தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். விஜய் இயக்கத்தில், அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம் ஜனவரி 12, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் புரோமோக்களில் நடிகை ஏமி ஜாக்சனின் ஆக்ஷன் அவதாரம் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்த படத்தில் நடித்த அனுபவத்தை நடிகை ஏமி பகிர்ந்துள்ளார்.
ஏமி ஜாக்சன் கூறியிருப்பதாவது, "இயக்குநர் விஜய் தனது திரைப்படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களை உருவாக்குபவர். இந்த கதாபாத்திரங்களின் தாக்கம் மிகவும் ஆழமானது. எந்தளவுக்கு தாக்கம் என்றால், திரைப்படங்கள் வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட பார்வையாளர்கள் அந்த கதாபாத்திரங்களை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். அவருடைய ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானதை நான் பாக்கியமாக கருதுகிறேன். இயக்குநர் விஜய் தனது திரைப்படங்களில் எனக்கு முக்கியமான பாத்திரங்களைத் தொடர்ந்து கொடுத்து வருகிறார். அந்த வகையில், 'மிஷன் சாப்டர் 1' சந்தேகத்திற்கு இடமின்றி எனது கரியரில் முக்கியமான படமாக இருக்கும். பெரும்பாலான இயக்குநர்கள் என்னை ஒரு அழகான காதல் கதாநாயகியாகதான் பார்த்துள்ளனர். அதனால், எனக்கு ஆக்ஷன் கதாபாத்திரம் வழங்கப்படும் என்று நான் எதிர்பார்த்ததே இல்லை. இருப்பினும், விஜய் ஸ்கிரிப்டை விவரித்து, என் போலீஸ் கதாபாத்திரத்தை சொன்னவுடன் அதன் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. உடனடியாக அந்த பாத்திரத்திற்கு தயாராகத் தொடங்கினேன். ஆக்ஷன் தளத்தில் நான் இயங்குவதற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.
மேலும், இது எனது சினிமா வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மைல்கல் என உறுதியாக நம்புகிறேன். படப்பிடிப்பில் அருண் விஜய் ஒரு சூப்பர் ஹியூமனாக மாறி 100% சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். அவரது இந்த முயற்சி எங்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இருந்தது. இது அவரது கரியரில் மிக முக்கிய ஆக்ஷன் படமாக இருக்கும்" என்றார்.
'மிஷன் சாப்டர்1' படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
Comments