‘லவ் ஓ லவ்’ (Love Oh Love) - விமர்சனம்

ஜினிமா மீடியா & எண்டர்டெயின்மென்ட் லிமிடெட் (Zinema Media & Entertainment Ltd.) பேனரின் கீழ் கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூஷன் (Creative Entertainers & Distribution) நிறுவனத்துடன் இணைந்து தினேஷ் ராஜ் மற்றும் தனஞ்ஜெயன் தயாரிப்பில் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் ’லவ் ஓ லவ்’ (Love Oh Love) .
பவிஷ் , நாக துர்கா, செல்வராகவன், கே எஸ் ரவிக்குமார் , வனிதா விஜயகுமார் , ,ரம்யா ,சௌந்தர்யா ,அஸ்வத் ,கதிர் ஆகியோர் நடித்துள்ளனர்
நாயகன் பவிஷ் ஒரு தனியார் நிறுவன த்தில் வேலை செய்து தனது சம்பள பணத்தை முழுவதும் குடும்பத்திற்காக செலவு செய்து கே எஸ் ரவிக்குமாருக்கு உதவியாக நல்ல பிள்ளையாக வாழ்ந்து வருகிறார் .
இச் சுழலில் நாயகி நாக துர்காவை காதலித்து ஏமாற்றிவிட்டதாக போலீசாரால் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறார்.
காவல் நிலையத்தில் பவிஷுக்கு எதிராக மாதர் சங்கத் தலைவியான வனிதா, பவிஷுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என போராட்டம் நடத்துகிறார்.
இதனை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரான செல்வராகவனிடம் பவிஷ் தனது காதல் கதையை சொல்லத் தொடங்குகிறார்.
முதன்முதலில் நாக துர்காவை கண்டதும் பவிஷ் காதல் கொள்கிறார் .
நாக துர்காவை மனதார நேசிக்கும் பவிஷ் நாக துர்காவின் ஆசைகளையும் , எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும்போது பவிஷின் பொருளாதார நிலை எல்லை மீறி போகிறது .
நாக துர்காவின் விருப்பங்களை நிறைவேற்ற வசதிக்கு மீறி செலவு செய்யத் தொடங்கும் பவிஷ். கையில் பணம் இல்லாத நிலையிலும் கடன் வாங்கி கேட்டதை அனைத்தும் வாங்கி தருகிறார் . நாளடைவில் வருமானத்தை மீறிய செலவில் பெரும் கடன் சுமையில் சிக்குகிறார் பவிஷ்.
ஒரு கட்டத்தில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாக துர்கா பவிஷிடம் கூறுகிறார். காதலியை இழக்கக் கூடாது என்ற எண்ணத்தில் பவிஷும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.
இந்நிலையில் இருவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாக துர்காவின் அம்மா பவிஷின் கடன் நிலைமையை அறிந்து “இவ்வளவு கடனில் இருக்கும் ஒருவரால் என் மகளை எப்படி நன்றாக பார்த்துக்கொள்ள முடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
இந்த விவகாரம் பெரிதாகி காவல் நிலையம் வரை செல்கிறது. அங்கு அனைவரின் முன்னிலையிலும் பவிஷின் தந்தையான கே. எஸ். ரவிகுமார் அவமானப்படுத்தப்படுகிறார்.
காதலுக்காக பவிஷ் எடுத்த முடிவுகளும், வாங்கிய கடன்களும் குடும்பத்தின் மரியாதையையே பாதிக்கும் சூழ்நிலையாக மாறுகிறது.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த கே. எஸ். ரவிகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பவிஷ் மீது கடும் கோபம் கொண்டு அவரை விட்டு விலகி ஊரை விட்டு செல்கின்றனர் .
இதனையடுத்து பவிஷின் வேலையும் பறிபோகிறது .
பிரச்சனைகள் அனைத்திற்கும் தன் காதல்தான் காரணம் என எண்ணும் பவிஷ் நாக துர்காவை விட்டு விலகி விட நினைக்கும்போது வாழ்ந்தால் தன் காதலன் பவிஷுடன் வாழ்வேன் என்றும் என் கணவன் பவிஷ்தான் என இன்ஸ்பெக்டரான செல்வராகவனிடம் நாக துர்கா பிடிவாதமாக கூறுகிறார் .
இறுதியில் பவிஷ் தன் குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தாரா ? பவிஷ் மற்றும் நாக துர்காவின் காதல் திருமணத்தில் முடிந்ததா? என்பதுதான் ‘லவ் ஓ லவ்’ (Love Oh Love) திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் பவிஷ் இளமை துள்ளும் காதல் நாயகனாக இயல்பான நடிப்பில் காதலால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் வலி, ஏமாற்றம், குழப்பம், தவிப்பு என உணர்வுப் பூர்வமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கதையுடன் இணைந்து கதாபாத்திரமாகவே வாழ்கிறார் பவிஷ்.
நாயகியாக நடித்திருக்கும் நாக துர்கா, அறிமுக படம் போல தெரியாத அளவுக்கு இயல்பான நடிப்பில் கதாபாத்திரத்தின் உணர்வுகளை சரியாக புரிந்து கொண்டு, அழகும் துடிப்பும் கலந்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என படம் முழுவதும் உற்சாகமான தோற்றத்தில் வலம் வரும் நாக துர்கா, ஒரு அழகு தேவதையாக ரசிகர்களை கவர்கிறார்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் கே. எஸ். ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வராகவன், மகளிர் சங்கத் தலைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார்,ரம்யா ,சௌந்தர்யா ,அஸ்வத் ,கதிர் என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
இசையமைப்பாளர் பாக்ஸனின் இசையில் பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, பாடல்களின் இசை படத்தின் கொண்டாட்டமான தருணங்களுக்கு சிறப்பு சேர்க்கிறது. பின்னணி இசையும் கதையோடு பயணிக்கிறது .
ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளை மெருகேற்றும் அழகில் , கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இயல்பான ஒரு இளைஞனின் காதலை மையமாக கொண்ட கதையுடன் தன் காதலுக்காக எல்லை மீறி கடன் வாங்குவதால் ஒருவரின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதையும் ,காதல் வாழ்வின் மிக முக்கியமானதாக ஆடம்பர வாழ்க்கை முறையால் ஏற்படும் இழப்புகளை அழுத்தமாக திரைக்கதையில் பதிவு செய்து அனைவரும் ரசிக்கும் மாறுப்பட்ட காதல் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன்.
மொத்தத்தில் ’லவ் ஓ லவ்’ (Love Oh Love) – புரிதல் இல்லாத காதலின் வலி
ரேட்டிங் : 3 / 5

