MediaTalks Logo
Header Advertisement
reviews
27 November 2026 at 22:34•87 Views

‘சிட்டுக்குறிஞ்சி’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
 ‘சிட்டுக்குறிஞ்சி’   - விமர்சனம்

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘'சிட்டுக்குறிஞ்சி’

கொடைக்கானலில் உள்ள பூம்பாறை கிராமத்திற்கு கேரளாவை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளரான நாயகன் ரஜித் மேனன், தனது பணியின் காரணமாக அங்கு செல்லும்போது அவர் சந்திக்கும் திருமணமான இளம் பெண் நக்‌ஷா சரண், தனக்கு யாரென்றே தெரியாத பெண்ணாக இருந்தாலும் நீண்ட நாள் பழகியதை போல தன்னிடம் சகஜமாகவும், உரிமையாகவும் பழகுவதைப் பார்த்து குழப்பமடைகிறார்.

இந்த நிலையில் நக்‌ஷா சரணின் அன்பான பேச்சினாலும் தன் மீது காட்டும் அக்கறை மற்றும் நெருக்கத்தினால் ஈர்க்கப்படும் ரஜித் மேனன்அவரை காதலிக்க தொடங்குகிறார் .

ரஜித் மேனனின் காதலை விரும்பாத நக்‌ஷா சரண் அவரிடம் இருந்து விலகி கண்கலங்குகிறார்.

நக்‌ஷா சரணின் அன்பை தவறாக நினைத்து தான் செய்த செயலை நினைத்து வருத்தப்படும் ரஜித் மேனன், அங்கிருந்து இரவில் புறப்பட்டு கேரளா சென்று விடுகிறார்.

சில நாட்களுக்குப் பிறகு தனது நெருங்கிய நண்பர் வி.ஜே. பப்புவுடன் மீண்டும் நக்‌ஷா சரணை சந்தித்து மன்னிப்பு கேட்க அதே மலைக்கிராமத்திற்கு வருகிறார்.

ஆனால், இம்முறை அங்குள்ள சூழல் முற்றிலும் மாறியிருக்கிறது. முன்பு சந்தித்த அதே பெண் நக்‌ஷா சரணை மீண்டும் சந்திக்கும்போது, அவருக்கு ரஜித் மேனனை அடையாளமே தெரியவில்லை.

கிராம மக்கள் சேர்ந்து அவர்களை விசாரித்து எச்சரிக்கும் நிலையில் அங்கிருந்து செல்லும் நண்பர்கள் இருவரும் மலைப்பாதையில் பயணித்து தான் முதலில் சந்தித்த இடத்தை தன் நண்பர் பப்புவிடம் காண்பிக்கிறார்.

அங்கே அந்த இடம் பாழடைந்த நிலையில் இருக்க , குழப்பத்துடன் அங்கிருக்கும் ஒரு பழைய பெட்டியிலிருந்து ஒரு திருமண புகைப்படத்தை கண்டு ரஜித் மேனன் குழப்பத்தில் அதிர்ச்சியாகிறார்.

இறுதியில் திருமண புகைப்படத்தை கண்டு குழப்பத்திலிருந்த ரஜித் மேனன் மீண்டு வந்தாரா ? மலைக்கிராமத்தில் வாழ்ந்த ரஜித் மேனன் – தீப்ஷிகா காதல் ஜோடிக்கும், 2023-ல் நடக்கும் இந்த மர்மங்களுக்கும் என்ன தொடர்பு? 1983-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரஜித் மேனன் – தீப்ஷிகா இருவருக்கும் என்ன நடந்தது? என்பதை திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் திரில்லராகவும், உணர்வுப்பூர்வமான காதல் கதையாகவும் சொல்வதே ‘சிட்டுக்குறிஞ்சி’.

நாயகனாக நடித்திருக்கும் ரஜித் மேனன், கேரள மாநில இளைஞராக மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பில் அறிமுகம் இல்லாத பெண் தன்னிடம் காட்டும் அன்பினால் ஏற்படும் காதலை வெளிப்படுத்தும்போதும் , தன் தவறை உணர்ந்து குழப்பத்தால் தடுமாறும் காட்சிகளிலும் இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்து பாராட்டை பெறுகிறார் ..

நாயகியாக நடித்திருக்கும் நக்‌ஷா சரண் தனது அழகான நடிப்பினால் கதாபாத்திரங்களுக்கு இடையிலான வேறுபாட்டை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் தீப்ஷிகாவும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பதோடு, ஒரே கதாபாத்திரத்தை இரண்டு விதமாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் விஜே பப்பு, ஜி.எம்.குமார், பூ ராமச்சந்திரன், ஹலோ கந்தசாமி, தேனி முருகன், சுஜாதா, கராத்தே ராஜா, வழக்கறிஞர் பாபு, ஈஸ்வர்பாபு, மஞ்சு, சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக் உள்ளிட்ட அனைவரும் நடிப்பில் தங்களது பணியை சிறப்பாக செய்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் மாறா இசையும் , ஒளிப்பதிவாளர் பிரான்சிஸ் ராஜ்குமார்.ஏ ஒளிப்பதிவும் கதைக்களத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

காதல் மற்றும் ஜாதி பிரச்சனையை மையமாக கொண்டு சஸ்பென்ஸ் திரில்லரான கதையுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் இன்றைக்கும் சமுகத்தில் நடக்கும் அவலமான பிரச்சனையை அழுத்தமான திரைக்கதையில் சொல்வதுடன் சுவாரஸ்யமான விறு விறுப்புடன் கதையை நகர்த்தி சமூகக் கருத்துடன் விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் ரசிக்கும் விதமாக சிறப்பாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் வி.ஜெ.மீனாட்சி சுந்தரம்.

மொத்தத்தில், ‘சிட்டுக்குறிஞ்சி’ என்றென்றும் காதல்

மதிப்பீடு 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: