‘ஜெடூசி’ - விமர்சனம்

திருவண்ணாமலையில் கணினி மற்றும் சிசிடிவி கேமரா பழுது பார்க்கும் வேலையை நாயகன் ஸ்ரீதர், தனது நண்பர் பிளாக் பாண்டியுடன் இணைந்து செய்து வருகிறார்.
திருவண்ணாமலையை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து அடுத்தடுத்து ஏழு பேர் மிகக் கொடூரமாக மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
உயர் காவல் அதிகாரியான நட்ராஜ் ஏகாம்பரத்தின் உத்தரவின் பேரில் காவல் அதிகாரி அருவி மதன் தனிப் படை அமைத்து குற்றவாளியை தேடுகிறார் .
ஒரு கட்டத்தில் காவல்துறை சிசிடிவி பழுது பார்க்கும் ஸ்ரீதர் மீது சந்தேகப்பட்டு நண்பனான பிளாக் பாண்டியை கைது செய்வதுடன் ஸ்ரீதரையும் கைது செய்து ஏழு கொலைகள் செய்த குற்றவாளியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது .
நீதிமன்றத்தில் திருவண்ணாமலை அருகே ஜவ்வாது மலை அடிவாரத்தில் வாழ்ந்த தன் முறை பெண்ணான ஸ்வேதாவுக்கு கல்லூரி நிர்வாகத்தினால் நடந்த பாலியல் வன் கொடுமையையும் , மனமுடைந்த முறை பெண் ஸ்வேதாவின் தற்கொலைக்கு காரணமான ஏழு பேரை கொடூரமாக கொன்றதையும் நீதிபதி முன் குற்றவாளியாக ஒப்புதல் வாக்கு முலம் ஸ்ரீதர் அளிக்கிறார் .
இறுதியில் குற்றவாளியாக கூண்டில் நிற்கும் நாயகன் ஸ்ரீதருக்கு நீதிபதி அளித்த இறுதி தீர்ப்பு என்ன ? ஸ்வேதா தற்கொலைக்கு காரணமான கல்லூரியின் நிறுவனர் யார் ? முடிவில் நாயகன் ஸ்ரீதர் அவரை பழி தீர்த்தாரா ? என்பதுதான் ‘ஜெடூசி’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீதர் பழங்குடி இன இளைஞராக காதல் , பாசம் ,தவிப்பு , உருக்கம் என அனைத்து வித உணர்வுகளுடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உணர்வுபூர்வமாக நடித்துள்ளார் .
நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா, பழங்குடி பெண்ணாக இயல்பாக நடிப்பதுடன் அழுத்தமான கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார் .
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சினி யுதன் ,குணச்சித்திர நடிப்பில் பிளாக் பாண்டி, பாவா செல்லதுரை மற்றும் ஜெயந்திமாலா, ஏ.வெங்கடேஷ், அருவி மதன், அசோக் பாண்டியன் என படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
இசையமைப்பாளர் விக்னேஸ்வரன் இசையும் , ஒளிப்பதிவாளர் நாகர்ஜுன்.வி.எஸ் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையுடன் இன்றைய சமுகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களையும் , பாதிக்கப்பட்ட பெண்களின் மன வலியையும் அழுத்தமாக சொல்வதுடன் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிக்கவைக்கும் கிரைம் திரில்லர் படமாக கதை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் நட்ராஜ் ஏகாம்பரம் .
மொத்தத்தில், ’ஜெடூசி’ கூர்மை
மதிப்பீடு - 3 / 5


