top of page

நடிகர், எழுத்தாளர் மற்றும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினருமான தாசரதி நடத்தும் முதியோர் இல்லத்தின் 25வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி

  • mediatalks001
  • Mar 3
  • 1 min read

நடிகர், எழுத்தாளர் மற்றும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினருமான தாசரதி, அக்‌ஷயா ட்ரஸ்ட் மூலமாக நடத்தும் முதியோர் இல்லத்தின் 25வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது..


இந்த நிகழ்வில் நடிகர் சங்க தலைவர் நாசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.. கோபாலன் மற்றும் சிங்காரம் ஆகியோர் இணைந்து நாசருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.


இந்த நிகழ்வில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது,

“தாசரதியை எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும். அவருடைய அப்பா பிரபல டைரக்டர் பீம்சிங்கின் இணை இயக்குநர், எழுத்தாளர், திரு.எம்பார் வேதம் இணை இயக்குனர் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகி எனக்கு ரொம்பவே பழக்கம். அவருடைய இளமை பதிப்பாகத்தான் நான் தாசரதியை பார்க்கிறேன்.. திரையுலகம் ஒரு இக்கட்டான சூழலை சந்தித்தபோது முதல் ஆளாக நின்று அதற்காக போராடியவர் அவர். அப்படி போராடக் கூடிய குணத்தை ஒரு போதையாக எங்களுக்குள் வளர்த்தவர் அவரது தந்தை.. அவரது மகனும் அவருக்கு தப்பாமல் இருக்கிறார் என்பதில் ரொம்ப மகிழ்ச்சி.


இந்த அக்‌ஷயா டிரஸ்ட் பற்றி தம்பி தாசரதி நிறைய என்னிடம் சொல்லி இருக்கிறார். இந்த சூழலில் இந்த மேடையில் நின்று அவரது சிரித்த, தெளிவான முகத்தோடு அதைக் கேட்கும்போது அதனுடைய ஆழம் எனக்கு ரொம்பவே புரிகிறது. ஏனென்றால் இது சாதாரண விஷயம் அல்ல.. மனிதன் குகையில் வசிக்கும் போது ஒன்றாக இருக்க முடிந்தது. நாகரிகம் வளர வளர அறிவு ஏற ஏற தனித்தனி தீவுகளாக மாறி தனிமை தான் அதிகமாகி இருக்கிறது. மீண்டும் ஒன்று சேர்க்கும் விஷயத்தில் அரசாங்கமோ, பள்ளிக்கூடமோ, நாம் வணங்கும் தெய்வமாக இருந்தாலும் கூட மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது. ஆனால் இந்த எல்லா தத்துவங்களையும் விட முக்கியமான நடைமுறை தத்துவத்தை நீங்கள் எல்லோரும் கடைபிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றி.


இந்த மாதிரி ஒரு சேவைக்காக இடம் கிடைப்பது என்பது கஷ்டமானது. ஆயிரம் கேள்விகள் கேட்கப்படும். ஆனால் நீங்கள் மனம் திறந்து இவர்களை வரவேற்றது மட்டுமல்லாமல் அவர்களுக்கான இடத்தை இன்னும் விரிவுபடுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் அவர்களுக்கு உடல் உழைப்பாகவோ பொருளாதார ரீதியாகவோ உதவி செய்யாவிட்டாலும் கூட அவர்களுக்கு இங்கே அனுமதி கொடுத்ததிலேயே பெரிய உதவி செய்திருக்கிறீர்கள்.


அந்த வகையில் நீங்கள் தான் இன்றைய சிறப்பு விருந்தினர்கள்.. நான் அல்ல.. மெர்க்குரி எப்படி சிதறி இருந்தாலும் கூட தன்னைப்போல இன்னொரு மெர்க்குரியுடன் தான் ஒன்று சேரும் என்பதைப் போல இங்கே அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கிறீர்கள்.. ஒரு சிறப்பு விருந்தினராக இல்லாமல் நானும் உங்களுடன் ஒருவனாக எதிர்காலத்தில் பயணிக்க விரும்புகிறேன்” என்று பேசினார்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page