MediaTalks Logo
Header Advertisement
cinema news
19 November 2026 at 22:47•31 Views

திக்..திக்..திருப்பங்களோடு மிரள வைக்கும் கிரைம் சஸ்பென்ஸ் திரைப்படம் ‘வயலெட் கனவு’

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
திக்..திக்..திருப்பங்களோடு மிரள வைக்கும் கிரைம் சஸ்பென்ஸ் திரைப்படம் ‘வயலெட் கனவு’

கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் கதை, நித்தியானந்தம் இயக்கத்தில், உருவான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘வயெலெட் கனவு’! - நவம்பர் 20 ஆம் தேதி வெளியாகிறது

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெற்றிப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில், குறைந்த முதலீட்டில், அறிமுக இயக்குநர் மற்றும் நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளியான படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பு பெற்று வருகின்றனர். அந்த வகையில், கிரைம் நாவல் மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில், இயக்குநர் பி.நித்தியானந்தம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வயலெட் கனவு’ படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

ஹாலிவுட் எழுத்தாளர்களைப் போல் ஒரு திரைப்படத்திற்கு தேவையான சுவாரஸ்யம் மற்றும் விறுவிறுப்புடன் தனது நாவல்களை எழுதக்கூடிய திறன் படைத்த எழுத்தாளர் ராஜேஷ்குமாரின், மிகவும் புகழ்பெற்ற நாவலை அப்படியே திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டட இயக்குநர் பி.நித்தியானந்தம் D.F.T, திரை மொழியில் பார்வையாளர்கள் மிரளும் வகையில் ஒரு உளவியல் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார்.

அப்பு மூவிஸ் சார்பில் பாபு தூயவன் D.F.T மற்றும் ஏ.முஸ்தரி M.Sc., இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் நாளை (நவம்பர் 20) திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் குறித்து இயக்குநர் பி.நித்தியானந்தம் D.F.T கூறுகையில், “ஆபாவாணன் சார், நான் எல்லாம் திரைப்பட கல்லூரியில் ஒன்றாக படித்தோம். பிறகு அவருடன் பணியாற்றினேன், பிறகு நான் படம் இயக்க தொடங்கினேன். தொலைக்காட்சி தொடர்களில் பிஸியானதால் திரைப்படம் இயக்குவதை நிறுத்த வேண்டியதாயிற்று. ராஜேஷ்குமார் சாரின் சில நாவல்களை, ஓடிடி மற்றும் யூடியுப் சேனல்களுக்காக சிறிய அளவிலான படமாக இயக்கி வைத்திருந்தேன். அதை பார்த்த தயாரிப்பாளர் பாபு தூயவன், இதுபோல் எனக்கும் ஒரு திரைப்படம் இயக்கி கொடுங்கள் என்றார். இப்படி வேண்டாம், இதை விட பெரிய அளவில் பண்ணலாம் என்று சொல்லி, தான் இந்த படத்தை தொடங்கினேன்.

இது ஒரு உளவியல் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர். ராஜேஷ்குமார் சாரின் நாவல்களை படிக்கும் போதே ஒரு திரைப்படம் பார்ப்பது போல் தான் இருக்கும். அந்த வகையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யாமல் அவரது கதை, திரைக்கதையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன்.

கடும் போட்டிக்கு நடுவே நவம்பர் 20 ஆம் தேதி படம் வெளியாகிறது. பலர் ஏன் இந்த தேதியில் வெளியிடுகிறீர்கள், என்று கேட்கிறார்கள். மற்றப் படங்கள் வருகிறது, என்று ஒவ்வொரு வாரமும் பார்த்தால் நம்ம படத்தை வெளியிட முடியாது. எங்க படத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் ரசிகர்களை எங்கள் படம் ஏமாற்றாது. பாடல், ஆக்‌ஷன் என அனைத்துவிதமான கமர்ஷியல் அம்சங்கள் அடங்கிய, அதே சமயம் ரசிகர்களை மிரள வைக்கும் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக ’வயலெட் கனவு’ இருக்கும்.” என்றார்.

படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் படம் குறித்து கூறுகையில், “ஆபாவாணன் சார், நான், இயக்குநர் நித்தியானந்தம் அனைவரும் திரைப்படக் கல்லூரியில் ஒன்றாக படித்தோம், ஒன்றாக பணியாற்றினோம். பிறகு தனி தனியாக படங்கள் இயக்க தொடங்கி விட்டோம். நித்தியானந்தம் டிவி சீரியல்கள் இயக்குவதில் பிஸியாகி விட்டார். என்னை சீரியல் நடிகராக்கியதே அவர் தான். அவர் கொடுத்த வாய்ப்பினால் தான் இன்று பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறேன்.

‘வயலெட் கனவு’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படம் முழுவதும் சஸ்பென்ஸ் நிறைந்திருப்பதால் என் கதாபாத்திரம் குறித்து விரிவாக சொல்ல முடியவில்லை. ஆனால், திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் கதாபாத்திரம். படத்தை பொறுத்தவரை ராஜேஷ்குமார் சாரின் கதை, திரைக்கதை எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். அதை நித்தியானந்தம் மிக சிறப்பாக கையாண்டு இயக்கியிருக்கிறார். படம் நிச்சயம் ரசிகர்களை திருப்திப்படுத்தும்.

தற்போதைய சூழலில் சிறிய படங்களுக்கு போதிய திரையரங்கங்கள் கிடைக்காதததோடு, சரியான நேரத்திற்கான காட்சிகளும் கிடைப்பதில்லை. மதியம் காட்சிகள் மட்டுமே கொடுக்கிறார்கள், அப்படி கொடுத்தால் எப்படி மக்களிடம் சிறிய படங்கள் சென்றடையும். இதனால் பல நல்ல சிறிய படங்கள் மக்களுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ‘வயலெட் கனவு’ வெளியானாலும், படத்தை பார்த்தால் நிச்சயம் ரசிகர்கள் பாராட்டுவார்கள். இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு பத்திரிகையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

படத்தின் நாயகன் விவந்த் விவின் படம் குறித்து கூறுகையில், “ரேடியோ மற்றும் வீடியோ ஜாக்கியாக என் பயணத்தை தொடங்கினேன். பிறகு டப்பிங் கலைஞராகவும், மாடலாகவும் பயணித்து இப்போது நடிகராகியிருக்கிறேன். இதற்கு முன்பு ‘இருக்கு ஆனா இல்ல’, ‘ஏகாந்தம்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறேன். ‘வயலெட் கனவு’ என் சினிமா பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும். ராஜேஷ்குமார் சாரின் நாவல் என்பதால் இந்த படம் எனக்கு ஸ்பெஷல்.

இது ஒரு உளவியல் கிரைம் சஸ்பென்ஸ் திரைப்படம், அதாவது நாயகனுக்கு அடிக்கடி ஒரே மாதிரியான கனவு வருகிறது. அந்த கனவில் நடக்கும் சம்பவங்கள் நடந்து விடுமோ, என்று அச்சப்படும் நாயகன் அதனல் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறான். அதே சமயம், அவனை சுற்றி நடக்கும் சில சம்பவங்களும் அவனுக்கு உளவியல் பாதிப்பை கொடுக்க, அதன் பின்னணியில் இருப்பது யார் ? என்ற அதிர்ச்சியான கேள்விக்கு எதிர்பார்க்காத திருப்பங்களோடு பதில் சொல்வது தான் கதை.

இந்த படத்தில் நடித்தது மிகச்சிறந்த அனுபவம். உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவராக நடிப்பது சவாலாக இருந்தது. பல உணர்வுகளையும் பலவிதங்களில் வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம், என்னால் முடிந்த அளவுக்கு செய்திருக்கிறேன். படத்தை பார்த்துவிட்டு நீங்களும், மக்களும் தான் சொல்ல வேண்டும்.” என்றார்.

படத்தின் நாயகி ரெய்னா கரட் படம் பற்றி கூறுகையில், “’அங்காரகன்’ என் முதல் படம், இது இரண்டாவது படம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைக்கதை, இதில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்தில் நான் கமிட் ஆனதும், என் நண்பர்களிடம் சொன்னேன். அப்போது அவர்கள் ராஜேஷ்குமார் சாரின் கதை, திரைக்கதை என்றதும் ஆச்சரியப்பட்டார்கள், அவர் எவ்வளவு பெரிய ஆள், அவரது கதையில் உருவாகும் படத்தில் நடிக்கிறீயா..! என்று கேட்டார்கள். அப்போதே இந்த படம் நிச்சயம் எனக்கு ஒரு பெயர் வாங்கி கொடுக்கும் என்பது புரிந்து விட்டது.

பரபரப்பான மற்றும் விறுவிறுப்பான படமாக வந்திருக்கிறது. எனது கதாபாத்திரத்தின் பின்னணியிலும் நிறைய சஸ்பென்ஸ் இருக்கும். நான் இதில், கல்லூரி முடிந்ததும் நாயகனை திருமணம் செய்துகொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனக்கும், எனது கணவருக்கும் இடையில் நடக்கும் உளவியல் பாதிப்புகள் படத்தின் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. அது சம்மந்தமான காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும்.” என்றார்.

ஜி.கிதாகரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜெகன் கல்யாண் இசையமைத்திருக்கிறார். ஏ.எம்.சைப் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் மிக முக்கியமான நாவல் என்பதாலும், திரைப்படக் கல்லூரி மாணவர் பி.நித்தியானந்தத்தின் இயக்கத்தில் உருவாகியிருப்பதாலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘வயலெட் கனவு’ திரைப்படம் நாளை (நவம்பர் 20) திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: