top of page

25 திருநங்கைகளின் நலனுக்காக நிதியுதவி வழங்கிய 'டோரதி' படக்குழு!

mediatalks001
16 hours ago
2 min read

ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட், தம்மம் பிலிம்ஸ் இணைந்து ‘டோரதி’ படக்குழு சார்பில் தீவிர உடல்நலப் பாதிப்புகளுடன் போராடும் 25 திருநங்கைகளின் நலனுக்காகநிதியுதவி வழங்கினர்.


கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், மனிதநேயம், கண்ணியம், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் திரையரங்கு வெற்றியையும், ரசிகர்களிடமிருந்து கிடைத்த உணர்வுபூர்வமான வரவேற்பையும் படக்குழு கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தீவிர உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள 25 திருநங்கைகளின் நலனுக்காக நிதியுதவி வழங்கியுள்ளது.


‘டோரதி’ திரைப்படம் வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மனிதர்களின் உணர்வுகளை நுட்பமாகச் சித்தரித்த விதத்திற்கும், ஒவ்வொருவரின் கண்ணியம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உரிமையை வலியுறுத்தியதற்கும் ரசிகர்கள் தெரிவித்த பாராட்டுகளும், பகிர்ந்துகொண்ட தனிப்பட்ட அனுபவங்களும் படக்குழுவினரை நெகிழச் செய்துள்ளன. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே திருநங்கைகளின் நலனுக்கு நிதியுதவி வழங்கும் முடிவு படக்குழு எடுத்தது.


கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்ற ‘டோரதி’ படத்தின் வெற்றி விழாவின்போது இந்த நிதியுதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது, திருநங்கைகள் நல அமைப்பான ‘எங்கள் சகோதரன்’ அமைப்பின் பிரதிநிதிகள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருத்துவ மற்றும் நிதியுதவி தேவைப்படும் 25 பேரை அறிமுகப்படுத்தினர். அவர்களில் புற்றுநோய், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், கை,  கால்களை இழந்தவர்களும், பிறவியிலேயே பார்வையற்றவர்களும் இடம்பெற்றிருந்தனர். இந்த 25 பேருக்கும் காசோலையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கினார்.



இந்த நிதியுதவியைப் பெறுபவர்களை வெற்றி விழாவுக்கு அழைத்து வருவது குறித்துப் படக்குழுவுக்கு தகவல் தெரிவித்தபோது, அவர்களுக்கு பயணம் செய்து வருவதில் வருவதில் ஏற்படக்கூடிய சிரமங்கள் குறித்து கருத்தில் கொண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கவலை தெரிவித்துள்ளார். இருப்பினும், உடல்நலப் பிரச்சினைகளையும் பொருட்படுத்தாமல், தங்களை நெகிழச் செய்த திரைப்படத்தை உருவாக்கிய இயக்குநரை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற விருப்பத்துடன் அவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.


அடுத்த ஓராண்டுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உணவுச் செலவுகளைச் சமாளிக்க இந்த நிதி உதவும் என்று நெகிழ்ச்சியுடன் நிதியுதவி பெற்றவர்கள் பகிர்ந்துகொண்டனர். நோய்களுடன் போராடுவதோடு, மாற்றுத்திறன் சார்ந்த சவால்களையும் சமூகப் புறக்கணிப்பையும் எதிர்கொண்டு வரும் அவர்களுக்கு, இந்த நிதியுதவி அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும் ஆதரவாக இருக்கும் என அமைப்பின் பிரதிநிதிகளான சுதா மற்றும் ஜெயா தெரிவித்தனர்.


மனிதநேயம், கருணை மற்றும் கண்ணியம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘டோரதி’ திரைப்படத்தின் நோக்கத்தை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது. சமூகத்தின் முன்முடிவுகளையும் பார்வைகளையும் கடந்து, கதையில் இடம்பெறும் மனிதர்களையும் அவர்களின் உணர்வுகளையும் மையப்படுத்த முயன்ற இந்தப் படத்தின் வெற்றி, திரையரங்குகளுக்கு வெளியேயும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகப் படக்குழு நம்புகிறது.


கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே, குனீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ளனர். மேஸ்ட்ரோ இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தை வழங்கியுள்ளது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page