top of page

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

mediatalks001
2 days ago
1 min read

நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் ’ராமாயணா’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, நவம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய போஸ்டரில் ’இது ராமர் யுகத்தின் தொடக்கம்’ என்ற வசனம் இடம்பெற்றிருக்க அதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, லட்சுமணனாக ரவி துபே, ராவணனாக ராக்கிங் ஸ்டார் யஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் பிரம்மாண்ட இதிகாசத் திரைப்படத்தின் முதல் பாகத்தின் முன்பதிவு தசரா பண்டிகையின்போது தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கதையின் மையக் கதாபாத்திரங்களுக்கு இடையிலான காட்சி ரீதியான வேறுபாட்டை இந்தப் போஸ்டர் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான அரங்க அமைப்புகள், ஆடைகள் மற்றும் நுணுக்கமான வடிவமைப்புகள் என இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த இதிகாசத் திரைப்படத்தின் உலகத்தைப் பற்றிய முன்னோட்டத்தையும் இந்தப் போஸ்டரில் பார்க்கலாம்.


சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்பைப் பகிர்ந்த படக்குழு, அதனுடன் பின்வரும் பதிவையும் வெளியிட்டுள்ளது, ’நவராத்திரியின் புனிதமான இந்த நன்னாளில், ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்தைக் கொண்டாடுகிறோம். இது ராமர் யுகத்தின் தொடக்கம்! நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ முதல் பாகம், நவம்பர் 5 முதல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து பிரீமியம் திரையிடல் தொழில்நுட்பங்களிலும் வெளியாகிறது. தசரா அன்று முன்பதிவு தொடங்குகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளது.


நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ராமாயணா’ திரைப்படத்தை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், எட்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற DNEG நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கிறது.


இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் பிரம்மாண்டத் திரைப்படத்தின் முதல் பாகம், நவம்பர் 5, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் இந்தத் திரைப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் படம் திரையிடப்பட உள்ளது. இந்தியாவைத் தவிர்த்து உலகளாவிய விநியோகப் பொறுப்பை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது. பாலிவுட் சந்தைக்கான விநியோகப் பொறுப்பை தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கவனிக்கிறது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page