'சத்தியவான் சாவித்திரி ’ - விமர்சனம் ( 3.5 / 5 )

Drumsticks Productions மற்றும் Zee Studios நிறுவனங்கள் சார்பாக வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்திலும், மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ள திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’.
கோயம்புத்தூரில் சட்டப் படிப்பு பயின்ற மதுசூதனின் மகளான கீர்த்தி சுரேஷ் மிகப்பெரிய வழக்கறிஞராக சாதிக்க வேண்டும் என்ற லட்சிய கனவுடன் சாருகேஷை திருமணம் செய்து கொண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞரான மிஷ்கினிடம் தன்னுடன் கல்லூரியில் படித்த பால சரவணனின் பரிந்துரையின் பேரில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அரசு மருத்துவமனை முதல்வர் ராஜா ராணி பாண்டியனுக்கு எதிராக வழக்கறிஞரான மிஷ்கின் ஆஜராகி அவருக்கு தண்டனை வாங்கி தர முயற்சிக்கும் நேரத்தில், ராஜா ராணி பாண்டியனுக்கு ஆதரவாக கீர்த்தி சுரேஷ் மிஷ்கினுக்கு எதிராக வழக்கில் வாதாடி வெற்றி பெறுகிறார் .
இதற்கு முன் ஆஜரான அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்று தோல்வி என்பதே தெரியாத மிஷ்கினை தன் முதல் வழக்கிலேயே கீர்த்தி சுரேஷ் தோற்கடிப்பதால உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் மத்தியில் மிஷ்கினை தோற்கடித்த வழக்கறிஞராக பிரபலமாகிறார் .
இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் திடீரென்று ஏற்படும் உடல்நிலை பாதிப்பால் கரு சிதைவு ஏற்பட்டு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்.
இதனால், வழக்கறிஞர் பணியை கைவிட முடிவு செய்து மீண்டும் தாய்மை அடைவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இச் சூழ்நிலையில் கீர்த்தி சுரேஷின் கணவர் சாருகேஷின் காரின் பின்புற டிக்கியில் ஷில்பா மஞ்சுநாத் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கிறார் .
அதே சமயம் சாருகேஷை கொலையாளி என முடிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர் .
அதிர்ச்சியடையும் கீர்த்தி சுரேஷ் தவறு செய்யாத தன் கணவரான சாருகேஷை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற, மீண்டும் வழக்கறிஞராக களம் இறங்க, அவரிடம் தோல்வியடைந்த வழக்கறிஞர் மிஷ்கின், கீர்த்தி சுரேஷை பழிவாங்கும் எண்ணத்தில் அரசு வழக்கறிஞராக களம் இறங்குகிறார்.
இறுதியில் வழக்கறிஞராக தன் கணவனை காப்பாற்ற போராடும் கீர்த்தி சுரேஷ், மிஷ்கினை எதிர்த்து மீண்டும் வெற்றி பெற்று தனது கணவரை நிரபராதி என நிருபித்தாரா ?
ஷில்பா மஞ்சுநாத்தை கொலை செய்த உண்மையான குற்றவாளி யார் ? என்ன காரணத்திற்காக ஷில்பா மஞ்சுநாத்தை அந்த மர்ம நபர் கொலை செய்தார் ? என்பதுதான் 'சத்தியவான் சாவித்திரி’ படத்தின் மீதி கதை .
நாயகி கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக தன் கணவரின் உயிரைக் காப்பாற்றப் போராடும் ஒரு மனைவியின் தவிப்பை உடல் மொழியில் அழகாக வெளிப்படுத்தி எதிர்பாராத திருப்பமான இறுதி காட்சிகளில் உணர்வுபூர்வமான நடிப்பில் ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார் .
மூத்த வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிஷ்கின் இயல்பான நடிப்பில் திரைக்கதை பக்க பலமாக இருக்கிறார்
கீர்த்தி சுரேஷின் கணவராக நடித்திருக்கும் சாருகேஷ், கீர்த்தி சுரேஷின் சீனியராக பின்பு அவரது உதவியாளராகவும் பயணிக்கும் பாலசரவணன், ராஜா ராணி பாண்டியன் ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா சாகா, தீபா சங்கர், மதுசூதன் ராவ், மாலா பார்வதி, ஏ.வெங்கடேஷ், ஆர்.சுந்தராஜன் என நடித்த அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக நடிப்பில் பயணித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையும் , ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
நீதிமன்ற பின்னணியில் தன் கணவரை காப்பாற்ற போராடும் வழக்கறிஞரான நாயகியின் கதையை மையமாக வைத்து ஆரம்பம் முதல் முடிவு வரை விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் நாயகியின் போராட்டமான மன உணர்வுகளை அழுத்தமாக பதிவு செய்து எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும்படி கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய்.
மொத்தத்தில் ‘சத்தியவான் சாவித்திரி ’ பாரதி கண்ட புதுமை பெண்
ரேட்டிங் - 3.5 / 5


