MediaTalks Logo
Header Advertisement
cinema news
20 August 2026 at 23:15•1 Views

சென்னைவாசிகளே தயாராகுங்கள் : முதல் ‘தமிழ் ஐடல்’ ஆடிஷன் ஆகஸ்ட் 23-ல் துவங்குகிறது !

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
சென்னைவாசிகளே தயாராகுங்கள் : முதல் ‘தமிழ் ஐடல்’ ஆடிஷன் ஆகஸ்ட் 23-ல் துவங்குகிறது !

முதல் சீசன் ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பூஜா வெங்கட் இணைந்துள்ளனர். தமிழகத்தின் அடுத்த இசை நட்சத்திரத்தைத் தேடும் பிரம்மாண்டப் பயணம் சென்னையில் தொடங்குகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திறமையான பாடகர்களை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சியின் முதல் நேரடி ஆடிஷன் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தப் போட்டியின் முதல் சீசனின் தொகுப்பாளர்களாக விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பூஜா வெங்கட் இணைந்துள்ளனர்.

Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து தமிழ் ரசிகர்களுக்காக வழங்கும் ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சிக்கு சூப்பர் ஜட்ஜாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தலைமை வகிக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள தனித்துவமான குரல்களையும் இசைத் திறமைகளையும் கண்டறிந்து, அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

சென்னையில் நடைபெறும் முதல் கட்ட ஆடிஷன் மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா Annexure வளாகத்தில் நடைபெறுகிறது. 14 முதல் 30 வயது வரையிலான ஆர்வமுள்ள பாடகர்கள் இந்த ஆடிஷனில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தலாம்.

தொகுப்பாளர்களான விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பூஜா வெங்கட், போட்டியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களின் கதைகளைக் கேட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ள ஆடிஷன் பயணத்தில் அவர்களுடன் இணைந்து பயணிக்க உள்ளனர்.

இதுகுறித்து விக்கல்ஸ் விக்ரம் கூறுகையில், “தமிழகம் அசாத்தியமான இசைத் திறமைகளைக் கொண்ட மண். அந்தத் திறமைகளுக்கு வாய்ப்பு அளித்து, அவர்களின் குரலை உலகம் கேட்கச் செய்யும் ஒரு மேடையின் அங்கமாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. ‘தமிழ் ஐடல்’ என்பது சிறந்த பாடகர்களைத் தேடும் நிகழ்ச்சி மட்டுமல்ல; தமிழகத்தின் பல்வேறு இசைத் திறமைகளை ஒன்றிணைத்து, வளர்ந்து வரும் கலைஞர்களை இன்னும் பெரிய கனவுகளை நோக்கிச் செல்ல வைக்கும் மேடை. ஏ.ஆர். ரஹ்மான் சார் தலைமையில் இந்தப் பயணம் நடைபெறுவது நிகழ்ச்சியின் வாய்ப்பையும் எதிர்பார்ப்பையும் மேலும் உயர்த்துகிறது. போட்டியாளர்களை சந்தித்து, அவர்களின் கதைகளைக் கேட்டு, அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் முதல் அடியை நேரில் காண ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

பூஜா வெங்கட் கூறுகையில்..,,

“ஒருவரின் குரலை முதல் முறையாகக் கேட்டு, அதில் இருக்கும் தனித்துவத்தை கண்டறிவது மிகவும் சிறப்பான அனுபவம். இசை, உணர்வு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கதைகளை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சியாக ‘தமிழ் ஐடல்’ உருவாகியுள்ளது. இதன் தொகுப்பாளராக இருப்பது எனக்கு பெருமை. ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது குரலை நம்பிக்கையுடனும் தயக்கமின்றியும் வெளிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஒரு வசதியான, ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்த உற்சாகமான அத்தியாயம் சென்னையில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 23-ம் தேதி ஆடிஷன் அரங்கிற்குள் நுழையவிருக்கும் திறமைகளை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

சென்னையில் தொடங்கும் இந்த ஆடிஷன் பயணம், தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களுக்குச் செல்ல உள்ளது. ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயத்தையும் கவரக்கூடிய அந்த தனித்துவமான குரலைத் தேடும் பயணம் இதன் மூலம் தொடங்குகிறது.

சென்னைவாசிகளே … உங்கள் மேடை தயாராகிவிட்டது!

முதல் ‘தமிழ் ஐடல்’ யார்? தேடல் ஆகஸ்ட் 23 முதல் தொடங்குகிறது!.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: