top of page

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

  • mediatalks001
  • 1 hour ago
  • 2 min read


ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரைசா வில்சன், துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ் மற்றும் “ஃபைனலி” சுவாதிகா நடிப்பில், மைலோ இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “நோவா"


பெயரே வித்தியாசமாக இருக்கிறதே… அதைப் பற்றி தெரிந்துகொள்ள இயக்குநர் மைலோவிடம் கேட்டபோது, தமிழ் சினிமாவில் திகில் என்றாலே பேய், பங்களா, பழிவாங்கல் என்ற வழக்கமான பாதையைத் தாண்டி, காலம், மனிதர்களின் நினைவுகள், அறிவியல் மற்றும் பயம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு வித்தியாசமான உலகத்தை உருவாக்க முயற்சி செய்திருப்பதாகக் கூறுகிறார்.


பார்வையாளர்களுக்கு பதில்களை உடனடியாக வழங்காமல், படம் முழுவதும் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.


“இந்தப் படத்தை ஒரு திகில் திரைப்படமாக மட்டும் பார்க்கக்கூடாது. பயத்தைப் பயன்படுத்தி ஒரு பெரிய மர்மத்தைச் சொல்லும் திரைப்படம் இது. பார்வையாளர்கள் படம் முடிந்த பிறகும் சில கேள்விகளுடன் வெளியே வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்,” என்கிறார் இயக்குநர் மைலோ.


சூரியனே இல்லாத ஒரு திரைப்படம்!


நோவாவின் மிகப்பெரிய காட்சியமைப்புச் சவால்களில் ஒன்று, படத்தின் எந்தக் காட்சியிலும் சூரிய ஒளி தெரியக்கூடாது என்பதுதான்.


இதற்காகவே படப்பிடிப்பின்போது கருமேகங்கள் சூழும் வரை காத்திருந்து பல காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள்.


தொடர்ந்து 32 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில், இயற்கைச் சூழலும் படக்குழுவினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கிறது.


முழுப் படப்பிடிப்பும் கேரளாவில் உள்ள மலைப்பகுதி கிராமம் ஒன்றில் நடைபெற்றது, படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதே ஒரு சவாலாக இருந்ததாகத் தெரிவிக்கிறார்.


“அந்த இடத்திற்குச் செல்வதே மிகவும் கடினம். தினமும் யாருக்காவது அடிபடும் அளவுக்கு பாதை மிகவும் சிரமமானதாக இருந்தது. ஆனால் அந்த இடம்தான் கதைக்குத் தேவைப்பட்டது. அதனால் நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டுப் பணியாற்றினார்கள்,” என்கிறார் மைலோ.


இந்தச் சிரமங்களுக்கெல்லாம் காரணம் ஒன்றுதான் — திரையில் அந்த உலகம் செயற்கையாகத் தெரியக்கூடாது என்பதற்காக.


நோவாவில் பார்வையாளர்களின் அறிவாற்றல் மீது இயக்குநர் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது படத்தின் மற்றொரு சிறப்பு.


“படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். பார்வையாளர்கள் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால், எதையும் பெரிதாக விளக்கிச் சொல்லவில்லை,” என்கிறார் மைலோ.


அதனால் படத்தில் வரும் ஒவ்வொரு சிறிய காட்சிக்கும், வசனத்திற்கும், கதாபாத்திரத்தின் பார்வைக்கும் கூட ஒரு காரணம் இருக்கலாம்.


படத்தின் உண்மையான மர்மம் என்ன என்பதை வெளிப்படுத்தாமல் இருப்பதையே படக்குழு விரும்புகிறது.


ஏனென்றால் நோவாவில் சில உண்மைகள் பார்வையாளர்களுக்கு சொல்லப்படுவதற்காக அல்ல… அவர்கள் கண்டுபிடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.


நோவா ஒரு குறிப்பிட்ட வகைத் திரைப்படத்திற்குள் மட்டும் அடங்கும் படமல்ல.


பேய், பிசாசு, அறிவியல் புனைவு, அமானுஷ்யம், விண்வெளி, வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்கள் என பல வித்தியாசமான உலகங்கள் ஒன்றோடொன்று இணையும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.


மேலும், பல வெளிமாநில நடிகர்கள் முக்கியமான சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.


ஆனால் இவற்றில் எதுவும் கதையின் முக்கியமான ரகசியங்களை வெளிப்படுத்தும் அளவிற்கு முன்கூட்டியே கூறப்படவில்லை.


“இந்தப் படத்தைப் பற்றி எல்லாவற்றையும் முன்கூட்டியே சொல்லிவிட்டால், நோவாவைப் பார்த்த அனுபவமே மாறிவிடும். அதனால் சில விஷயங்களைப் பார்வையாளர்களே திரையரங்கில் கண்டுபிடிக்க வேண்டும்,”


நோவாவில் ரைசா வில்சனின் கதாபாத்திரமும் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.


குறிப்பாக, ரைசாவின் கதாபாத்திரத்திற்கு ஒரு வசனம் கூட கிடையாது.


ஆனால் வசனங்கள் இல்லாமலேயே பார்வை மற்றும் உடல் மொழியின் மூலம் அந்தக் கதாபாத்திரத்தின் இருப்பை உணர்த்தியிருக்கிறது.


“ரைசாவை இந்தப் படத்தில் முற்றிலும் வேறு விதமாகப் பார்ப்பீர்கள். அவருக்கு வசனமே கிடையாது. ஆனால் அவருடைய பார்வையே நிறைய விஷயங்களைச் சொல்லும்,” என்கிறார் மைலோ.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page