MediaTalks Logo
Header Advertisement
cinema news
17 September 2026 at 23:16•1 Views

அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் புதிய தமிழ் வெப் சீரிஸ் ‘#Love’

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் புதிய தமிழ் வெப் சீரிஸ் ‘#Love’

இன்றைய காலகட்டத்தில் காதலும் உறவுகளும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. நேரில் சந்தித்து காதல் வளர்ந்த காலம் மாறி, டேட்டிங் ஆப்கள் மூலம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொள்ளும் காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம். ஸ்வைப், மேட்ச், மெசேஜ் என காதலின் தொடக்கமே தற்போது டிஜிட்டல் உலகில் இருந்து வருகிறது. இப்படியான நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது புதிய தமிழ் வெப் சீரிஸ் ‘#Love’.

ஷோ-ரன்னர் , சௌந்தர்யா ரஜினிகாந்த்  தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இந்தத் தொடரை இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள இந்தத் தொடரில், இருவருக்கும் இடையிலான உறவு கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

FOUND மற்றும் Find My Bae எனும் இரண்டு டேட்டிங் ஆப்களைச் சுற்றி கதை நகர்கிறது. மற்றவர்களுக்கான சரியான துணையைத் தேடிக் கொடுப்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருக்கும் இந்த இரண்டு ஆப்களின் நிறுவனர்களான தாரா மற்றும் மேத்யூ, தங்களுக்கான காதலை மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றனர். இதற்கிடையே உருவாகும் போட்டி, காதல் மற்றும் உறவுகள் தான் தொடரின் கதைக்களமாக அமைந்துள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்க துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் கூறியதாவது :

“நெட்ஃப்ளிக்ஸுக்கு இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியக் கதைகளுக்கான எங்களது கவனத்தையும் முதலீட்டையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறோம். அந்த வகையில் ‘#Love’ தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

தமிழில் எங்களது படைப்புகளின் வரிசையை விரிவுபடுத்தி வரும் நிலையில், இன்றைய காலகட்டத்தின் காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட இந்த நகைச்சுவை கலந்த காதல் கதை, ஒரு புதிய அணுகுமுறையை வழங்குகிறது.

போட்டியாளர்களாக இருக்கும் இரண்டு டேட்டிங் ஆப் நிறுவனர்கள், காதல் குறித்த தங்களது எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் ஒருவரை ஒருவர் சந்திப்பதன் மூலம் சோதித்துப் பார்க்கும் விதத்தில் இந்தக் கதை அமைந்துள்ளது.

பாலாஜி மோகனின் இயக்கமும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஷோ-ரன்னர் மற்றும் தயாரிப்புப் பணியும் தொடருக்கு தனித்துவமான அணுகுமுறையை வழங்குகியிருக்கின்றது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி தங்களது நடிப்பு, நகைச்சுவை மற்றும் இயல்பான கெமிஸ்ட்ரி மூலம் கதையின் மைய உறவுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

எதிர்பாராத ஒருவரின் மீது காதல் ஏற்படும்போது உருவாகும் அந்தப் புதிய உணர்வை இந்தத் தொடர் நகைச்சுவையுடனும் அன்புடனும் பதிவு செய்கிறது. ஒரு மெசேஜுக்கு பதில் வராததைக்கூட நினைத்து நினைத்து குழம்பியிருப்பவர்களுக்கு இந்தக் கதை நிச்சயம் பரிச்சயமானதாக இருக்கும்.”

ஷோ-ரன்னரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறுகையில்:

“இன்றைய காலகட்டத்தில் உறவுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை இயல்பாகச் சொல்வதோடு, அதன் உணர்வுகளையும் அன்பையும் விட்டுவிடாமல் கதை சொல்லியிருப்பதுதான் ‘#Love’ தொடரின் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

பாலாஜி உருவாக்கியிருக்கும் கதாபாத்திரங்கள் லட்சியங்களைக் கொண்டவர்களாகவும், குறைகளுடன் இருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் அவர்களுடன் பார்வையாளர்கள் எளிதாகத் தங்களைப் பொருத்திப் பார்க்க முடியும். அர்ஜுனும் ஐஸ்வர்யாவும் இந்தக் கதாபாத்திரங்களுக்கு ஒரு புதிய உயிரோட்டத்தை வழங்கியுள்ளனர்.

இன்றைய தலைமுறையுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையிலான ஒரு கதையை நெட்ஃப்ளிக்ஸ் மூலம் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எங்களது எண்ணத்துக்கு இந்தத் தொடர் சரியாகப் பொருந்துகிறது.”

இயக்குநர் பாலாஜி மோகன் கூறுகையில்:

“இன்றைய காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்பதுதான் ‘#Love’ உருவானதற்கான முக்கிய காரணம். காதல் மாறியிருக்கிறது, ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கும் விதமும் மாறியிருக்கிறது. ஆனால் உறவுகளுக்குள் இருக்கும் அடிப்படை உணர்வுகள் மட்டும் எப்போதும் மாறுவதில்லை.

இந்தத் தொடரில் இரண்டு பேர் காதலில் விழுவதை மட்டுமே சொல்லவில்லை. அவர்களது நட்பு, குடும்பம், லட்சியம் மற்றும் தங்களைப் பற்றிய புரிதலை வளர்த்துக்கொள்ளும் பயணம் ஆகியவையும் முக்கியமான பகுதிகளாக இடம்பெறுகின்றன.”

‘#Love’ தொடரை நிர்மல் வில்லியம்ஸ் எழுதியுள்ளார். ஷரதா சுப்ரமணியன் மற்றும் ஸ்வேதா சக்ரவர்த்தி இணை எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். May6 Entertainment Factory நிறுவனம் தொடரைத் தயாரித்துள்ளது.

காதலில் முக்கியமானது கெமிஸ்ட்ரியா… அல்லது கம்ஃபோர்ட்டா? அதற்கான பதிலை அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் ‘#Love’ தொடரில் பார்க்கலாம்.

‘#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: