'ராம், ஜானு'வின் ‘96’ திரைப்படம் இந்த காதலர் தினத்திற்காக பிரமாண்ட திரை எண்ணிக்கையுடன் மீண்டும் வெளியிடப்பட உள்ளது!
டைம்லெஸ் கிளாசிக் படங்கள் எப்போதும் திரைப்படப் பிரியர்களுக்கான உற்சாக டானிக். படம் வெளியாகி பல வருடங்கள் கடந்தாலும் இந்தப் படங்களை மீண்டும் பார்க்கும்போது அவர்களுக்கு முதல்முறை பார்க்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். குறிப்பாக, 'காதல் கதைகள்' பார்வையாளர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, அந்தக் கதைகளை மீண்டும் பார்வையாளர்களை பார்க்க வைக்கிறது. இந்த வரிசையில் ’ரோமியோ ஜூலியட்’, ‘ரோமன் ஹாலிடே’, ‘டைட்டானிக்’, ‘திவாலே துல்ஹன் லே ஜெயங்கே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற பல திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லலாம். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில், சி. பிரேம் குமார் இயக்கத்தில் அனைவரின் இதயங்களிலும் என்றும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் படம்தான் ‘96’. ராம், ஜானுவின் அன்பும் காதலும் பார்வையாளர்களின் நினைவுகளை விட்டு அகலாது.
தமிழ் சினிமாவில் ஹிட்டான பல திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் ‘ராம்-ஜானு’வின் உலகத்தை மீண்டும் பார்ப்பதற்காக ‘96’ படம் மீண்டும் வெளியாகிறது. ஒவ்வொரு முறையும் இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்க்கும்போதும், பாடல்கள் இசைக்கப்படும்போதும் ரசிகர்களுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி கிடைக்கிறது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கேற்ப ‘96’ திரைப்படம் பிப்ரவரி 14, 2024 காதலர் தினத்தன்று மீண்டும் வெளியாக இருக்கிறது. கேஎம் சுந்தரம் பிக்சர்ஸ் இந்தப் படத்தினை தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் அதிக திரைகளில் வெளியிடுகிறார்கள்.
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் கூறும்போது, “’96’ திரைப்படம் வெறும் கிளாசிக் மட்டுமில்லை. அதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று. நாங்கள் இந்தப் படத்தைத் தயாரித்தபோது, பார்வையாளர்களுக்கு ஒரு கவித்துவமான காதல் கதையைக் கொடுக்க விரும்பினோம். ஆனால், அவர்கள் எதிர்பாராத அளவுக்கு அன்பை இந்தப் படத்திற்குக் கொடுத்தனர். படத்திற்கான புரோமோ ஒன்றில் ஒரு ரசிகர் பதிவிட்ட கமெண்ட் ஒன்றை மறக்க மாட்டோம். அதாவது, ‘’96’ படத்தில் இருந்து சில ப்ளூப்பர்களை கொடுங்கள். அப்போதுதான் ‘96’ ஒரு திரைப்படம் என்பதையே எங்களால் நம்பமுடியும்’ எனக் கூறியிருந்தார்.
ஒரு படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் மற்றும் படக்குழுவினருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? இந்த காதலர் தினத்தில் தமிழகம் முழுவதும் ’96’ திரைப்படம் அதிக திரை எண்ணிக்கையுடன் மீண்டும் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு மறக்க முடியாத ஒரு தலைசிறந்த படைப்பை வழங்கிய இயக்குநர் சி பிரேம் குமார், விஜய் சேதுபதி, த்ரிஷா, கோவிந்த் வசந்தா மற்றும் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிட முன்வந்த கே.எம்.சுந்தரம் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
’96’ படத்தின் சீக்குவல் குறித்து அவர் பேசியிருப்பதாவது, “’96’ படத்தின் சீக்குவல்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருவன். இதற்கு பிரேம் குமாரின் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
ความคิดเห็น