தமிழ் திரையுலகின் அடுத்த பிரம்மாண்டம், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் !!
ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், இயக்கத்தில் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். மிகப்பிரம்மாண்டமாக உருவாகவுள்ள, இந்த புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பலகாலமாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இருவரும் இணையும் படம் விரைவில் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில், தனது திரைப்பயணத்தில் பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து, பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்தவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். பெரிய ஹீரோக்களை வைத்து, இவர் உருவாக்கிய அத்தனை படங்களும், ஹீரோக்களுக்கு மட்டுமல்லாமல், படத்தின் அத்தனை கலைஞர்களுக்கும் திருப்புமுனை படங்களாக அமைந்தன. தற்போது சிறிது இடைவேளைக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் எனும் செய்தி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொலைக்காட்சி வழியே அறிமுகமாகி, தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர் சிவகார்த்திகேயன். திரையுலகில் அறிமுகமான முதல் படத்திலிருந்து, அவரது தற்போதைய வளர்ச்சி அபாரமானது. வெறும் கமர்ஷியல் நாயகனாக இல்லாமல், புதிய கதைக்களத்தில், வித்தியாசமான படைப்புகளுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் நடிப்பால் கட்டிப்போட்டுள்ளார். தனக்கென தனி ரசிகர் வட்டம், மிகப்பெரிய மார்க்கெட் என அசத்தும், சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸுடன் முதல் முறையாக இணைகிறார்.
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயன் இணையும் இந்தப் புதிய திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரு புதிய பிரம்மாண்டமாக, புதுமையான களத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில், அனைவரும் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகவுள்ளது. பெரும் பொருட்செலவில் ஶ்ரீ லக்ஷ்மி மூவீஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
தற்போது இப்படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
#SK×ARM
Comments