top of page

துபாயில் உள்ள தொழிலாளர்களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடிய நடிகர் கார்த்தி!


துபாயில் உள்ள தொழிலாளர் முகாமை பார்வையிட்ட முதல் நடிகர் கார்த்தி: தொழிலாளர்களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட்டம்


நடிகர் கார்த்தி தீபாவளிக்கு வெளியாக இருக்கின்ற தனது ‘ஜப்பான்’ திரைப்படத்திற்காக சென்னை, கொச்சி, மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் மிக தீவிரமாக விளம்பர நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் அடுத்தகட்டமாக துபாய்க்கு வருகை தந்த கார்த்தி, தனது 25வது படத்தை சிலிகான் ஓயாசிஸ் மாலில் புரமோட் செய்தார்.


ஜப்பான் படத்தில் நகைச்சுவை கலந்த எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தது குறித்தும் அது எப்படி சவால் நிறைந்ததாக இருந்தது என்கிற அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டதுடன் ரோலக்ஸ் மற்றும் ராக்கெட் ராஜா இருவரின் கலவையாக தனது கதாபாத்திரம் இருக்கும் என்றும் கூறினார்.


இந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக புர்ஜ் கலிபாவை பார்வையிட்டார் கார்த்தி. தனது சமூக நல செயல்பாடுகளுக்கு பெயர் பெற்ற கார்த்தியிடம், துபாயைச் சேர்ந்த தொழிலதிபர்களும், திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியும் துபாயில் இந்திய தொழிலாளர்கள் தங்கியிருக்கும் முகாம் பற்றி கூறினார்கள்.



அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தொழிலாளர் முகாம்களில் தங்கியுள்ள பணியாளர்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்தவர் என்பதால் அவர்களை சந்திக்க விரும்புவதாகவும் அவர்களுடன் முன்கூட்டியே தீபாவளியை கொண்டாட விரும்புவதாகவும் கார்த்தி தெரிவித்தார் .


காலநிலை தீவிரமாக இருந்தபோதிலும் கூட குளிர்சாதன வசதி இல்லாமல் முகாமில் பணியளர்கள் தங்கியிருப்பதும், தங்களது குடும்பத்தினருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கவேண்டும் என்பதற்காகவே வருடக்கணக்கில் அவர்களை பிரிந்து வசித்து வருவதும் தெரிந்து நெகிழ்ந்து போனார் கார்த்தி.


அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்கிய கார்த்தியிடம் இந்தியாவில் இருந்து தங்களை பார்க்க வந்த முதல் நடிகர் நீங்கள் தான் என அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். பொதுவாகவே நடிகர்கள் தங்களது படங்களை துபாயில் உள்ள ஷாப்பிங் மால்கள் அல்லது நட்சத்திர ஹோட்டல்களில் விளம்பரம் செய்வார்களே தவிர துபாயில் இதுபோன்ற கடினமான பணி செய்யும் தொழிலாளர்களை சந்தித்ததே இல்லை. நடிகர் கார்த்தியின் இந்த பெருந்தன்மையால் அனைத்து தொழிலாளர்களும் மிகவும் மனம் நெகிழ்ந்து காணப்பட்டதுடன் ஒரு சினிமா நட்சத்திரத்தை இவ்வளவு அருகில் நெருக்கமாக பார்த்தது குறித்து தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இந்தத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பபை கண்டு நடிகர் கார்த்தியும் உணர்ச்சியமாக அவர்களிடம் உரையாடினார்.


ஜப்பானை தொடர்ந்து ‘சூதுகவ்வும்’ புகழ் நலன் குமாரசாமி, '96' புகழ் பிரேம்குமார் ஆகியோரின் படங்களிலும் மற்றும் சர்தார் 2, லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ’கைதி 2’வையும் துவங்க இருக்கிறார் கார்த்தி.

Comments


bottom of page