‘கெணத்த காணோம்’ - விமர்சனம்
- mediatalks001
- 6 days ago
- 2 min read

நாயகன் யோகி பாபு வாழும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வறட்சியான கோடாங்கிபட்டி கிராமத்தில் வசிக்கும் மக்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகிறர்கள் . கிராமத்தில் மழை பெய்யாததால் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுவதால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
தண்ணீர் பிரச்சினையால் நாயகி லவ்லின் சந்திரசேகரை அவரது அப்பா யோகிபாபுவுக்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார். இந்நிலையில் குடிநீருக்காக அந்த கிராமத்தில் இருந்த மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கிணறு வெட்டலாம் என்று முடிவு செய்கிறார்கள்.
அப்படி அவர்கள் கிணறு வெட்ட தேர்வு செய்யப்பட்ட இடம் யோகி பாபுவின் இருக்கும் இடத்தில் இருக்கிறது.
அந்த இடத்தில் கிணறு வெட்ட தோண்ட ஆரம்பிக்கும் பொழுது ஆறு அடியில் அங்கு பெரிய பெரிய எலும்புகள் காணப்படுகிறது. இதனால் அந்த இடத்திற்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வருகின்றனர்.
இதையடுத்து அந்த இடத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் தொல்லியல் துறை அங்கு முகாமிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அந்த ஊர் முழுவதிலும் தங்களது ஆய்வுகளை விரிவுப்படுத்த திட்டமிடுகிறது.
தொல்லியலின் ஆராய்ச்சியில் அந்த எலும்புகள் பல வருடங்களுக்கு முன்பு அழிந்து போன டைனோசரின் எலும்புகள் என்பது கண்டறியப்படுகிறது.
இந்நிலையில் அந்த இடத்தை பார்ப்பதற்கு அமைச்சர் வர இருக்கும் நிலையில் டைனோசர் எலும்புக்கூடு காணாமல் போகிறது இதனையடுத்து யோகிபாபு உள்ளிட்டகிராம மக்களை போலீஸ் கைது செய்கிறார்கள்.
இறுதியில் காணாமல் போன டைனோசர் எலும்புக்கூடு கிடைத்ததா ? கிராம மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா ? யோகிபாபு – லவ்லின் இருவருக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே ‘கெணத்த காணோம்’ படத்தின் மீதிக்கதை.
கோவில் பூசாரியாக நடித்திருக்கும் யோகி பாபு, தனது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து உணர்வு பூர்வமான நடிப்பில் மண்ணுக்காகவும் மக்களுக்காவும் போராடும் நிஜ போராளியாக சிறப்பான நடிப்பில் வாழ்ந்திருக்கிறார்.
கிராமத்து பெண்ணாக கதாநாயகியாக நடித்திருக்கும் லவ்லின் சந்திரசேகர் இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .
தொல்லியல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரைச்சல் ரபேக்கா மற்றும் அவரது உதவியாளராக நடித்திருக்கும் ராமகிருஷ்ணன் இருவரும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன், யோகி பாபுவின் அக்காவாக நடித்திருக்கும் நடிகை, ஊர் தலைவராக நடித்திருக்கும் நடிகர் கிராம மக்கள் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் இருக்கிறது. தியாகராஜன் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக உள்ளது.
கிராம மக்களின் தண்ணீர் பிரச்சனையை மைய கருவாக வைத்து சமுக சிந்தனையுடன் மக்கள் ஒற்றுமை மற்றும் உரிமையை ப்பற்றி சிந்திக்கும் வகையில் திரைக்கதை அமைத்து தரமான படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் மறைந்த சுரேஷ் சங்கைய்யா
ரேட்டிங் : 3.5 / 5





Comments