’பிரேக்ஃபாஸ்ட்’ - விமர்சனம்
- mediatalks001
- 1 day ago
- 2 min read

கிரிஜா வரதராஜ் தயாரிப்பில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ’பிரேக்ஃபாஸ்ட்’
ராணவ், ரோஸ்மின், சம்பத் ராஜ், கஸ்தூரி, அர்ச்சனா, கிரித்திக் மோகன், அமிதா ரங்கநாத் ஆகியோர் நடித்துள்ளனர் .
காதலித்து திருமணம் செய்து கொண்டநாயகன் கிரித்திக் மோகனும் நாயகி அமிதா ரங்கநாத்தும் மூன்று மாதங்களுக்கு பிறகு விவாகத்து கேட்டு நீதிமன்றம் செல்கிறார்கள். நீதிமன்றத்தில் நீதிபதி அவர்களை மருத்துவரிடம் கவுன்சிலிங்க்கு அனுப்புகிறார்.
அங்கு மருத்துவராக இருக்கும் கஸ்தூரி இவர்களிடம் பேச இருவரும் ஒருவர் மீது ஒருவர் குறை கூறி சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இதனையடுத்து தொழிலதிபருடைய மகளின் கதையை கூறுகிறேன் கேளுங்கள் என்று சொல்கிறார்.
பிரபல பிஸ்கட் கம்பெனியின் நிறுவனர் சம்பத் ராஜின் , மகள் நாயகி ரோஸ்மின், கம்பெனியை திறமையாக நிர்வகித்து வருகிறார். நாயகன் ராணவ் வேலையில்லாமல் இருக்க நாயகி ரோஸ்மின் தனது நிறுவனத்தில் வேலை கொடுக்கிறார்.
இந்நிலையில் ரோஸ்மின் நிர்வகிக்கும் நிறுவனத்தின் பிஸ்கட் சாப்பிட்டதால் குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். இதையடுத்து ரோஸ்மின் கைது செய்யப்படுகிறார். ஆனால் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என நாயகன் ராணவ் நிரூபித்து அவரை சிறையில் இருந்தது வெளியே கொண்டு வருகிறார்.
ஒரு கட்டத்தில் இவர்களுடைய நட்பு காதலாக மாறுகிறது இவர்களுடைய காதலுக்கு ரோஸ் மினின் அப்பாவான சம்பத்ராஜ் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
தன்னுடைய அப்பாவின் எதிர்ப்பை மீறி ரோஸ்மின் ராணவை திருமணம் செய்து கொள்கிறார். அதுமட்டுமின்றி தன்னுடைய நிறுவனத்தில் உயர் பதவியான நிர்வாக இயக்குனர் பதவியையும் அவருக்கு கொடுத்து வசதியான வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்கிறார்.
இச் சுழலில் ராணவ் அப்பாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட அப்பா, அம்மா இருவரையும் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார் ராணவ் சில நாட்கள் கடந்த நிலையில் இருவரையும் நாயகி ரோஸ்மின் அனாதை இல்லத்தில் சேர்கிறார். இதனால் கோபமடையும் ராணவ் கர்ப்பமாக இருக்கும் ரோஸ்மினை அடித்து விட்டு தன் பெற்றோர்களை தேடி செல்கிறார்.
சில நாட்களில் இருவருக்குள்ளும் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பித்து பிரிகின்றனர்.
இறுதியில் ராணவ் – ரோஸ்மின் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’பிரேக்ஃபாஸ்ட்’

நாயகனாக நடித்திருக்கும் பிக் பாஸ் புகழ் ராணவ், அறிமுக படம் போல இல்லாமல் இயல்பான நடிப்பால் பெற்றோர்களை சரியாக கவனிக்க முடியாமல் தவிக்கும் மகன் , குடும்பத்திற்காக உழைக்கும் இளைஞர் , மனைவியின் பணத்திமிரால் பாதிக்கும் கணவர் என பல பரிமாணங்களில் கதாபாத்திரத்துடன் இணைந்து உணர்வு பூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ரோஸ்மின், அறிமுக படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் அளவான நடிப்பால் கவனம் பெறுகிறார்.
மற்றொரு ஜோடியாக நடித்திருக்கும் கிரித்திக் மோகன் – அமிதா ரங்கநாத் இளமை துள்ளலுடன் துறுதுறு வென அழகாக நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.
நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் சம்பத் ராஜ், மருத்துவராக நடித்திருக்கும் கஸ்தூரி, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் அர்ச்சனா என படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்ப தற்கு இனிமை , பின்னணி இசை கதையோடு பயணிக்கும் விதத்தில் உள்ளது.
ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
இன்றைய தலைமுறை காதலை மையக் கதையாக வைத்து இன்றைய காலகட்டத்தில் அவசர காதலில் உருவாகும் கல்யாணத்தில் காதல் தம்பதிகள் புரிதல் இல்லாமல் வாழும் வாழ்க்கையால் உண்டாகும் விவாகரத்து ஆகியவற்றுடன் தம்பதிகள் புரிந்து கொண்டு விட்டு கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்பதை அழுத்தமாக சொல்வதுடன் காதலர்களுக்கும், தம்பதிகளுக்கும் அறிவுரை சொல்லும் விதத்தில் திரைக்கதை அமைத்து அனைவரும் ரசிக்கும் விதத்தில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் காந்தி கிருஷ்ணா.
ரேட்டிங் - 3.2 / 5





Comments