‘அன்பே டயானா’ - விமர்சனம்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேஸில் கிரியேஷன்ஸ் & ஈரா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில் சத்யா கரிகாலன், இரா சரவணன் & யுவராஜ் கணேசன் தயாரிப்பில் இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் ‘அன்பே டயானா’
பாரி இளவழகன் ,ரம்யா ரங்கநாதன்,சேத்தன் ,ரோஜா செல்வமணி, பரிதாபங்கள் கோபி,செல் முருகன்,நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி ஆகியோர் நடித்துள்ளனர் .
வட சென்னையில் பெரம்பூர் பகுதியில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பத்தை சேர்ந்த சேத்தன்–ரோஜா தம்பதியினர் மகனான நாயகன் பாரி இளவழகன் வாழ்ந்து வருகிறார் .
குடும்பத்தை காக்கும் தலைவியான ரோஜா தன் உழைப்பால் ஈரமாவு வியாபாரம் செய்து பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்து கண்டிப்புடன் இருக்கிறார் .
ஆனால் ரோஜாவுக்கு நேரேதிராக இருக்கும் கணவர் சேத்தன் இளமையில் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாத தவிப்புடன் விருப்பமில்லாமல் ரோஜாவை திருமணம் செய்து கொண்டு குடிப்பழக்கத்துடன் மனைவிக்குப் பயந்து வாழ்பவர்.
இந்நிலையில் நாயகன் பாரி இளவழகன், அதே பகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்திய பெண்ணான நாயகி ரம்யா ரங்கநாதனை கல்லூரி காலம் முதலே காதலித்து வருகிறார். பாரி இளவழகனின் காதலை ஏற்க மறுக்கும் ரம்யா ரங்கநாதன் அவருடன் நட்பாக பழகி வருகிறார்.
பல காலங்களாக ஒருதலையாய் காதலிக்கும் பாரி இளவழகனின் காதலை ஒரு கட்டத்தில் ஏற்று கொள்கிறார் ரம்யா ரங்கநாதன்.
இருவரின் காதலுக்கு ரம்யா ரங்கநாதன் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளும் நிலையில் ரோஜாவின் கண்டிப்பான குணத்தையும், சாதி பற்றிய பிடிவாதத்தையும் நன்கு அறிந்த பாரிஇளவழகன் , தனது காதலை வீட்டில் சொல்லத் தயங்குகிறார்.
தனது இளமைக் கால காதல் நிறைவேறாத வேதனையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சேத்தன் மட்டும் பாரி இளவழகனின் காதலுக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறார்.
இச் சுழலில் ரோஜா தனது தம்பி செல்வமுருகனின் மகளான நிகிலா சங்கரை பாரி இளவழகனுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.
ரோஜாவின் விருப்பத்திற்கு ஏற்ப பாரி இளவழகனும் திருமண நாளன்று மணமகனாக திருமண மேடையில் அமர்கிறார்.
இறுதியில் ரோஜா நிச்சயித்த பெண்ணான நிகிலா சங்கரை பாரி இளவழகன் திருமணம் செய்து கொண்டாரா ? பாரிஇளவழகன் –ரம்யா ரங்கநாதன் காதல் வெற்றி பெற்றதா? என்பதுதான் ‘அன்பே டயானா’ படத்தின் மீதிக்கதை.
கதைநாயகனாக நடித்திருக்கும் பாரி இளவழகன் இயல்பான நடிப்பில் காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் , கண்டிப்பான அம்மாவிடம் தன் காதலை அம்மாவிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகளிலும் , எதார்த்தமாக நண்பர்களுடன் பழகும் கலகலப்பாக காட்சிகளிலும் கதையுடன் இணைந்து மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் .
ஆங்கிலோ-இந்தியப் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரம்யா ரங்கநாதன்ஆங்கிலம் கலந்த சென்னை தமிழை சரளமாக பேசுவது தன் காதலை ஏற்க தயக்கம் காட்டும் நாயகனை மிரட்டுவது , சேத்தனிடம் அதிரடியாக பேசுவது என்று தன் நடிப்பின் மூலம் பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து சிறப்பான நடிப்பில் கதாபாத்திரத்துடன் இணைந்து படத்திற்கு பக்க பலமாக இருக்கிறார்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சேத்தன், இதுவரை வில்லன் வேடங்களில் மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு நகைச்சுவை கலந்த நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.
கண்டிப்பான குடும்பத் தலைவியாக நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரோஜா, தனது அதிரடியான பார்வை, மிரட்டலான வசன உச்சரிப்பு மற்றும் வலுவான உடல்மொழி என திறமையான நடிப்பில் தன் கதாபாத்திரத்தை பூர்த்தி செய்கிறார் .
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பரிதாபங்கள் கோபி, படம் முழுவதும் தனது நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.
தாய்மாமாவாக வரும் செல்வமுருகன், மாமா மகள் வேடத்தில் நடித்திருக்கும் நிகிலா சங்கர், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இஸ்மத் பானு, சகோதரனாக நடித்திருக்கும் சுதர்சன் காந்தி உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாகக் கேட்கின்றன. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்றவாறு பயணிக்கிறது .
ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் தன் ஒளிப்பதிவில் அழகிய காட்சிகளாகப் பதிவு செய்து படத்திற்கு கூடுதல் அழகை சேர்த்திருக்கிறார்.
இரு மதங்களைச் சார்ந்த இருவரின் காதலை மையமாக கொண்ட கதையுடன் அவர்களின் வாழ்க்கைப் பயணத்துடன் காதல், பாசம், குடும்பம், நட்பு, உறவு மற்றும் நகைச்சுவை ஆகிய அனைத்தையும் அழகாகக் கலந்த திரைக்கதை அமைப்பில் சாதி, மதம், மொழி, இனம் என அனைத்தையும் மீறி அன்பும் மகிழ்ச்சியும் மட்டுமே என்றும் நிலையானது என்கிற கருத்தினை ஆழமாக பதிவு செய்து அனைவரும் ரசிக்கும் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பாரி இளவழகன்.
மொத்தத்தில் ‘அன்பே டயானா’ – அன்பு கலந்த அழகிய காதல்
ரேட்டிங் : 3.2 / 5

