'
நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடுகிறார்!
இயக்குநர் வெங்கட் பிரபு தனது தனிப்பட்ட வாழ்விலும், சினிமா வட்டாரத்திலும் வலுவான நட்பு வட்டாரத்தைக் கொண்டுள்ளார். நட்பின் சாரத்தை வசீகரமாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கும், 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறார். நட்பைப் பற்றி பேசும் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு அருகில் வந்திருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
வொயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவின் மசாலா பாப்கார்ன் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு, படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்து தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், நட்பு பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் அனுபவிக்கும் பரிசு என்று கூறியுள்ளார். அவர் தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் தனது சொந்த நண்பர்களின் முக்கியத்துவத்தை சிலாகித்துப் பேசியிருக்கிறார். மேலும், இந்தப் படத்தின் பின்னால் உள்ள இளம் நண்பர்களின் பங்களிப்பையும் பாராட்டியுள்ளார். “நட்பிற்காக இந்தப் படத்தில் இணைந்தேன். நட்பின் சாரத்தை இப்படம் கொண்டாடியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார் வெங்கட் பிரபு.
மேலும், உலக நண்பர்கள் தின வார இறுதியில் படத்தின் வெளியீட்டுத் தேதி அமைந்திருப்பது பார்வையாளர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். வாழ்க்கை மற்றும் நட்பின் கொண்டாட்டத்தை கொடுக்க இருக்கும் 'NOVP' படத்தில் வேலை செய்த ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படம் சென்னை மற்றும் பெரும்பாலான போர்ஷன் சிங்கப்பூரில் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
Comments