top of page

இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இணைந்துள்ள ஸ்ரீ கணேஷ் இயக்கும் ‘சித்தார்த் 40'

  • mediatalks001
  • Oct 16, 2024
  • 1 min read

ree

ree

ree

சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா  தயாரிப்பில் '8 தோட்டாக்கள்' ஸ்ரீ கணேஷ் இயக்கும் ‘சித்தார்த் 40’ திரைப்படத்தில் சென்சேஷனல் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளார்!



சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிக்கும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சித்தார்த் 40’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது. நடிகர் சித்தார்த் தனது படங்களுக்கு புதிய இசையமைப்பாளர்களுடன் கைக்கோர்ப்பதில் ஆர்வமாக இருக்கிறார். இந்த முயற்சி அவரது முந்தைய படங்களுக்கும் சிறந்த இசையையும் பாடல்களையும் கொடுத்தது.



இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அம்ரித் ராம்நாத் ஒப்பந்தமானது நிச்சயம் நல்ல பாடல்களை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 'வசீகரா', 'ஒன்றா இரண்டா' போன்ற பாடல்களில் தனது குரல் வளத்தால் நம்மை அலாதியான இசை அனுபவத்தில் திளைக்க வைத்தவரும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லைஃப் ஆஃப் பை' படத்தில் உலகப்புகழ் பெற்ற பாடலைப் பாடியவருமான பின்னணிப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன்தான் அம்ரித் ராம்நாத். இசை ஆர்வம் அதிகமுள்ள அம்ரித் 25 வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானார். திரைப்படங்கள் மற்றும் சுயாதீன ஆல்பங்கள் இரண்டிற்கும் இசையமைத்துள்ளார்.



பிரணவ் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த சூப்பர்ஹிட் மலையாளத் திரைப்படமான ’வர்ஷங்களுக்கு சேஷம்’ திரைப்படத்தில் அவர் இசையமைத்த 'நியாபகம்' பாடல் அதிக பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் பாடல் ஒவ்வொருவரது பிளேலிஸ்ட்டிலும் முதலிடத்தைப் பிடித்தது. மேலும் ’சித்தார்த் 40’ படத்தின் மூலம் தமிழ்த் துறையில் அவர் அறிமுகமாகி இருப்பது பல நல்ல பாடல்களை தரும் என உறுதியாக நம்பலாம்.



’சித்தார்த் 40’ படம் திட்டமிட்டபடி சிறப்பாக உருவாகி வருவது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படம் குறித்தான அடுத்தடுத்தத் தகவல்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page