top of page

விஜய் சேதுபதி முதல் பார்வை வெளியிட பா. ரஞ்சித் வெளியிட்ட டீசருடன் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்'

  • mediatalks001
  • 20 hours ago
  • 1 min read

திருமலை புரொடக்ஷன் கே. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில் கொங்கு மண்ணையும் அதன் மக்களையும் கலப்படமில்லாமல் காட்சிப்படுத்தும் திரைப்படம் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்'


'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' முதல் பார்வையை விஜய் சேதுபதி வெளியிட, டீசரை பா. ரஞ்சித் வெளியிட்டார்


தமிழகத்தின் தவிர்க்க முடியாத நிலப்பரப்பான கொங்குப் பகுதியை பின்னணியாக கொண்டு நிறைய திரைப்படங்கள் வந்திருந்தாலும், இது வரை சொல்லப்படாத கதையை விவரிக்கும், காட்டப்படாத களத்தை காண்பிக்கும் திரைப்படமாக 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' உருவாகியுள்ளது.


திருமலை புரொடக்ஷன் பேனரில் கே. கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் கிளிம்ப்ஸை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட, டீசரை இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டார். இருவரும் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' குழுவை பாராட்டியதோடு படம் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.


இப்படத்தில் நல்லபாடனாக 'பரோட்டா' முருகேசன் நடிக்க கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கெளசிகா, தமிழினியன் விகடன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவை விமல் கவனிக்க, 'மூடர்கூடம்' நடராஜன் சங்கரன் (NTR) இசையமைத்துள்ளார். கலையை J K ஆண்டனியும் சண்டைப்பயிற்சியை 'மாஸ்' மோகனும், படத்தொகுப்பை சதிஷும் கையாண்டுள்ளனர். இணை தயாரிப்பு: அமராவதி


திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சுகவனம், "நிலத்தில் நன்றாக உழைக்கும் பாட்டாளியை நல்லபாடன் என்றும் அழைப்பது கொங்கு வட்டார வழக்கம். இம்மண்ணில் நிலங்களற்று உழைக்கும் மனிதர்களின் கதை தான் இது. ஒண்டிமுனி எனும் சிறு தெய்வத்தை குலதெய்வமாக வழிபடும் மக்கள் இவர்கள். அவர்கள் கொண்ட கடவுள் நம்பிக்கை, ஆதிக்க மனம் கொண்டவர்களின் உழைப்பு சுரண்டல்கள், மனிதர்களின் வாழ்வு முறை, நல்லபாடனின் போராட்டம் உள்ளிட்டவற்றை இப்படம் பேசுகிறது. படம் பார்க்கும் அனைவரையும் ஒரு கிராமத்தில் வாழ்த்த உணர்வை கதை ஏற்படுத்தும். இது மக்களுக்கான கலை, நிச்சயம் மக்களை சென்றடையும் என நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.


திருமலை புரொடக்ஷன் கே. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page