top of page

கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன் !

  • mediatalks001
  • Jun 15
  • 2 min read






'கொம்புசீவி' படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவிப்பு


ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் 'கொம்புசீவி' படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்


கேப்டன் என்று ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். முன்னணி நடிகராக திகழ்ந்த அவர், தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளின் போதும் படக்குழுவினர் அனைவருக்கும் அறுசுவை உணவும், புது உடைகளும் வழங்குவதை வாடிக்கையாக கொண்டவர்.


தற்போது, சின்ன கேப்டன் என்று அழைக்கும் விதத்தில் சிறப்பான செயல் ஒன்றை செய்துள்ளார் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். தான் நடிக்கும் 'கொம்புசீவி' படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள் மற்றும் பிரியாணி வழங்கி அவர் கௌரவித்துள்ளார்.


இது குறித்து பேசிய சண்முகபாண்டியன், "இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு அனைவருக்கும் அள்ளி கொடுத்தவர் எனது தந்தையார். அவரது அடிச்சுவற்றை பின்பற்றி 'கொம்புசீவி' படம் உருவாக கடுமையாக உழைத்த குழுவினருக்கு என்னால் முடிந்த சிறிய அன்பளிப்பாக இன்று உணவையும், உடைகளையும் பகிர்ந்து கொண்டேன்," என்றார்.


'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த படைப்பாக 'கொம்புசீவி' படத்தை உருவாக்கி வருகிறார்.


சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்திற்காக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் பொன்ராம் முதல் முறையாக கை கோர்த்துள்ளார்.


கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த, நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் திருவிழாவாக உருவாகும் இப்படத்தை பெரும் பொருட்செலவில் புதிய நிறுவனமான ஸ்டார் சினிமாஸ் பேனரில் முகேஷ் டி. செல்லையா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கப்பட்டது சென்னையில் இன்று நிறைவுற்றது.


புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்கிறார். சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்தை சரவண அபிராம் கவனிக்க, ஃபீனிக்ஸ் பிரபு மற்றும் சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ஸ்டில்ஸ்: சி.எச். பாலு; நடன இயக்கம்: ஷெரிப், அசார்.


தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி சுற்றி இருக்கும் கிராமங்களையும், அங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் இப்படம் பேசுகிறது. இயக்குநர் பொன்ராமுக்கே உரிய நகைச்சுவையும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் நிரம்பி இருக்கும்.


ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைந்து முடித்து திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page