top of page

”’அந்த ஏழு நாட்கள்’' படத்தின் கதைக்கு தலைப்பை தேர்ந்தெடுத்த பாக்யராஜ்

  • mediatalks001
  • 8 hours ago
  • 2 min read


ree

ree

இயக்குநர் சுந்தர் இயக்கத்தில் விஞ்ஞானத்தை மையமாகக் கொண்ட காதல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படம். இந்த படத்தில் ஒரு அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் கதாநாயகனாக நடித்துள்ள வினித் என்கிற அஜித்தேஜ் ஒரு வானியற்பியல் மாணவராகவும், நாயகி ஸ்ரீஸ்வேதா வழக்கறிஞராகவும் நடித்துள்ளனர். பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் இந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ளார். வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் தனித்துவமான தரமான கதைகள் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை வழங்குவதையும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் என புது திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை நோக்கமாகவும் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்.


படம் குறித்து தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “நான் படம் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தபோது ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத நல்ல கதைகள் மற்றும் நல்ல சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சொல்லப்படாத பல ஜானர்களும் கதைகளும் இருக்கிறது. இதெல்லாம் இன்றைய இளம் தலைமுறையினர் எடுத்து செய்ய வேண்டும். அதேபோன்ற திறமையாளர்களுக்கு பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் வாய்ப்பளிக்க தயாராக உள்ளது. தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான கதைகளை திரும்ப திரும்ப சொல்வதை விட புதுவிதமான கதைகளை சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது” என்றார்.


இயக்குநர் சுந்தர் பிரபல இயக்குநர் பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தனது ஆசானின் அனுபவத்தையும் வழிகாட்டுதலையும் பின்பற்றி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். படம் குறித்து இயக்குநர் பகிர்ந்து கொண்டதாவது, “தயாரிப்பாளர் முரளி சாரிடம் நான் கதை சொன்னபோது வித்தியாசமான கதை என்பதால் உடனே ஒத்துக் கொண்டார். 100% உண்மையான உழைப்பு கொடுத்து சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறோம். பாக்யராஜ் சாருடன் நான் இருந்ததால் அவருடைய ‘டார்லிங் டார்லிங்’ மற்றும் ‘அந்த ஏழு நாட்கள்’ என இரண்டு தலைப்புகளில் எதாவது ஒன்று தேர்ந்தெடுக்கலாம் என்று நினைத்தேன். கதை கேட்டுவிட்டு பாக்யராஜ் சார் ‘அந்த ஏழு நாட்கள்’ பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி தலைப்பை பயன்படுத்த ஒப்புதலும் கொடுத்தார்.. மற்றபடி இந்தக் கதைக்கும் பாக்யராஜ் சாரின் கதைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இந்தப் படத்தில் பாக்யராஜ் சார் அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரை இயக்கியது எனக்கு கிடைத்த பாக்கியம். கதாநாயகன் அஜித்தேஜ் சமூகவலைதளமான இன்ஸ்டாவில் இருந்து கண்டெடுக்கப்பட்டார். கதாநாயகி ஸ்ரீஸ்வேதா கோயம்புத்தூர் பொண்ணு. இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக என் மகன் சச்சின் சுந்தர் தனது இசைப் பயணத்தை தொடங்குகிறார்” என்றார்.


இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்று வரும் நிலையில் திரைப்படம் செப்டம்பர் 12 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


பெஸ்ட்காஸ்ட் தயாரிப்பு நிறுவனம் பற்றி:

தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க தயாரிப்பு நிறுவனமான கோகுலம் ஸ்டுயோஸின் ஒப்பந்தம் முடிவடைந்ததால் அதன் உரிமையாளரான முரளி கபீர்தாஸ் அதே இடத்தில் பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து நடத்தி வருகிறார். தற்போது இந்த நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்ளின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இதில் முதலில் வெளியாகும் திரைப்படம்தான் ’அந்த ஏழு நாட்கள்’. மற்ற இரண்டு படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page