குணச்சித்திர கதாபாத்திரங்களில் தீவிர கவனம் செலுத்தும் நடிகர் டிஎஸ்கே
- mediatalks001
- 3 hours ago
- 2 min read



'பாம்' படத்தில் பாசிடிவான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்று வரும் நடிகர் டிஎஸ்கே
சின்னத்திரை காமெடி ரியாலிட்டி ஷோக்களில் நான்கு முறை டைட்டில் வென்றவர் நடிகர் டிஎஸ்கே (TSK).. சின்னத்திரையின் வெற்றியை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சினிமாவிலும் பிசியான காமெடி நடிகராக நடித்து வரும் டிஎஸ்கே சமீப காலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கவனம் ஈர்த்து வருகிறார். அந்தவகையில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘லப்பர் பந்து’ படத்தில் கவனிக்கத்தக்க நெகடிவ் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார். ரசிகர்களிடம் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
தற்போது வெளியாகியுள்ள ‘பாம்’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்று நடித்துள்ளார் டிஎஸ்கே. ‘லப்பர் பந்து’ படத்திற்கு பிறகு இந்த படத்திலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் ‘பாம்’ படத்தில் நடித்தது குறித்தும் அடுத்தடுத்து வரவிருக்கும் தனது படங்கள் குறித்தும் தகவல்களை பகிர்ந்து கொண்டார் டிஎஸ்கே..
“லப்பர் பந்து படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். ‘பாம்’ படத்தில் அப்படியே முற்றிலும் மாறான பாசிட்டிவான கதாபாத்திரம். ஆனாலும் இந்த படத்திற்கான கதாபாத்திரம் எனக்கு லப்பர் பந்து படத்திற்கு முன்பாகவே தேடி வந்த ஒன்று.. ‘பாம்’ படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கிய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை பார்த்து வியந்துபோய் அவரை தொடர்பு கொண்டு பாராட்டினேன். அவரது அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்கிற என்னுடைய ஆர்வத்தையும் வெளிப்படுத்தினேன். அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.
ஆனால் திடீரென ஒரு நாள் என்னை அழைத்து பாம் படத்தின் கதாபாத்திரம் குறித்து சொல்லி இதில் நீங்கள் தான் நடிக்கிறீர்கள் என்று சொன்னது மட்டுமல்ல, இந்த கதாபாத்திரத்தை உங்களை மனதில் வைத்து தான் எழுதி இருக்கிறேன் என்று சொன்னபோது என் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை ஆச்சரியப்பட வைத்தது. அவரும் என்னைப் போல அடிப்படையில் ஒரு மிமிக்ரி கலைஞர் தான் என்பதால் மறக்காமல் என்னை அழைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்தார். படம் பார்த்த பலரும் லப்பர் பந்து, பாம் இரண்டு படங்களுக்கும் நடிப்பில் நல்ல வித்தியாசம் காட்டி இருக்கிறீர்கள், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நீங்கள் அதில் பொருந்தி விடுவீர்கள் என பாராட்டியபோது இயக்குநர் விஷால் வெங்கட்டின் நம்பிக்கையை காப்பாற்றிய திருப்தி ஏற்பட்டது.
‘பாம்’ படப்பிடிப்பு தளமே கலகலப்பாக இருக்கும். நம் வீட்டிற்கு சென்று வருவது போன்று ஒரு உணர்வு தான் படப்பிடிப்பில் ஏற்பட்டது. அர்ஜுன் தாஸின் குரல் தான் மிரட்டலாக இருக்குமே தவிர அவருடைய குணாதிசயம் மிகவும் மென்மையானது. பழகுவதற்கு ரொம்பவே இனிமையானவர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அவருடைய குரலை நானும் நண்பன் அசாரும் மிமிக்ரி செய்திருக்கிறோம். அவரும் அசாரிடம் குறித்துப் பேசி பாராட்டியும் இருக்கிறார். ரசவாதி, அநீதி, இப்போது பாம் என அவரும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒரு தனித்துவமான நடிகராக வளர்ந்து வருகிறார்,
லப்பர் பந்து படத்தில் எனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பும் முதன்முறையாக தேடி வந்தது. அங்கே ‘விலாயத் புத்தா’ என்கிற படத்தில் முன்னணி ஹீரோவான நடிகர் பிரித்விராஜுடன் இணைந்து, அவரது நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.. இந்த படத்தை ஜெயன் நம்பியார் இயக்கியுள்ளார். மலையாள படம் என்றாலும் இந்த படத்தில் நான் தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன்..
படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு பாராட்டியதுடன் மலையாள திரையுலகுக்கு உங்களை வரவேற்கிறேன் என ஆட்டோகிராப் போட்டும் கொடுத்தார் பிரித்விராஜ். அது மட்டுமல்ல இயக்குநரிடம் என்னைப் பற்றி பேசும்போது ‘ஈ ஆள் வலிய வேலைக்காரன்’ என்றும் பாராட்டியுள்ளார். என்னடா வேலைக்காரன் என்று சொல்கிறாரே என நான் குழம்பியபோது, படத்தின் இயக்குநர் அவர் உங்கள் நடிப்பு திறமையை பாராட்டி தான் அப்படி கூறினார் என்று சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது, இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது.
தமிழில் அமீர், அருள்நிதி இருவரும் இணைந்து நடிக்கும் படத்தில், மீண்டும் லப்பர் பந்து படத்தில் நடித்தது போன்ற ஒரு தனித்தன்மை கொண்ட நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். செல்வகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இது ஜனவரியில் வெளியாக இருக்கிறது.
இது தவிர டியர் ஜீவா, ஹி இஸ் பிரக்னண்ட் என இரண்டு படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறேன். கனா, லேபிள், அடங்காதே உள்ளிட்ட படங்களில் இயக்குநர் அருண்ராஜா காமராஜிடம் துணை இயக்குநராக பணியாற்றிய’ பிரகாஷ் பாஸ்கர் டியர் ஜீவா படத்தை இயக்குகிறார். ஹி இஸ் பிரக்னண்ட் ஒரு பேண்டஸி படமாக உருவாகிறது. தற்போது பாலாஜி சக்திவேல் சாருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அது என்னுடைய 25வது படமாக உருவாகி வருகிறது. அந்தவகையில் அடுத்தடுத்து என்னுடைய படங்கள் சீரான இடைவெளியில் வெளியாக இருக்கின்றன.
தமிழ் சினிமாவில் குணசசித்திர கதாபாத்திரம் பண்ணுகின்ற நடிகர்கள், அதிலும் 35 வயதுக்கு உட்பட்ட நடிகர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அவர்களுக்கான தேவையும் தமிழ் சினிமாவில் நிறைய இருக்கிறது. அப்படி ஒரு இடத்தை எனக்கென நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் தான் நான் தீவிரமாக இருக்கிறேன். தற்போது எனக்கு வருகின்ற படங்களும் கதாபாத்திரங்களும் அதை வலுப்படுத்தும் விதமாகவே தேடி வருவது கூடுதல் சந்தோஷம்” என்கிறார் டிஎஸ்கே..
மக்கள் தொடர்பு ; A.ஜான்
Comments