காலம் காலமாக சலவைத் தொழிலை செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் நாயகன் சேரன், அவர் செய்யும் தொழிலையும், அத்தொழில் செய்பவர்களையும் கேவலமாக ஊர் மக்கள் பார்ப்பதால் அப்படிப்பட்ட தொழிலே தனக்கு தேவையில்லை என முடிவு செய்து பால் வியாபாரம் செய்து தான் செய்யும் தொழிலை மாற்றுகிறார் சேரன் .
இச் சமயத்தில் ஆதிக்க சாதியை சேர்ந்த லாலின் தந்தை இறந்து விட,,அவருக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை செய்ய சேரன் அழைக்கப்படுகிறார்.
இன்னார் இந்த தொழிலை தான் செய்ய வேண்டும் என்ற மனநிலையோடு ஊர் மக்கள் இருக்கும் நிலையில் இனி நான் அந்தத் தொழிலைச் செய்வதில்லை என போராட்ட குணத்துடன் சேரன் சொல்ல கொந்தளிக்கும் ஆதிக்க சாதியினர் அவரை கொல்ல முயற்சி செய்கின்றனர் .
இக் கட்டான இந் நேரத்தில் காவல் துறையின் மேலிட அதிகாரியின் உத்தரவினால் இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்குப் போகிறது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் சேரன் பிரச்சனையை மட்டும் பார்க்காமல் ஒட்டு மொத்தமாக சாதி பாகுபாட்டினால் சிக்கி அவதிப்படும் மக்களின் நிலை மாறுவதற்கான தீர்ப்பு ஒன்றை கொடுக்கிறது, அது என்ன தீர்ப்பு என்பதை சொல்லும் படம்தான் ‘தமிழ்க்குடிமகன்’
கதையின் நாயகனாக நடிக்கும் சேரன் தன் இன மக்கள் அடக்கப்படுவதையும், முன்னேறவிடாமல் தடுக்கப் படுவதையும் உணர்வுப்பூர்வமாக அமைதியான நடிப்பால் இயல்பாக நடித்துள்ளார் .
ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராக நடிக்கும் லால் அனுபவ நடிப்பால் அசத்துகிறார் !
சேரனின் மனைவியாக நடிக்கும் ஸ்ரீபிரியங்கா, தங்கையாக நடிக்கும் தீபிக்ஷா, வேல ராமமூர்த்தி, அருள்தாஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், ரவி மரியா, துருவா, சுரேஷ் காமாட்சி, மு.ராமசாமி, மயில்சாமி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் !
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவும் , சாம் சிஎஸ் இசையும் படத்திற்கு பக்க பலம் !
குல தொழிலை மாற்ற நினைக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை அடக்க நினைக்கும் ஆதிக்க சாதியினர் அதனால் அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் என வழக்கமான சாதி சம்பந்தப்பட்ட கதையாக இருந்தாலும் ஒருவர் செய்யும் தொழிலை வைத்து சாதியை காரணம் காட்டி அவரை இழிவாகப் பார்க்க கூடாது, அப்படிப்பட்ட நிலை ஏதாவது ஒரு இடத்தில் எப்போதும் இருக்கும் நிலையில் அந்த நிலை மாற வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்வதுடன் வித்தியாசமாக சாதி பிரச்சனைக்கு நீதிமன்றமே ஒரு தீர்வை கொடுப்பதாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.
ரேட்டிங் ; 3 / 5
Comentarios