top of page

‘ நாடு ’விமர்சனம்! சிறந்த படத்திற்கான விருதை வெல்ல போகும் இயல்பான கதை !


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் வாழும் தேவநாடு எனும் மலைவாழ் கிராமத்தில் நாயகன் தர்ஷன் தந்தைஆர்.எஸ்.சிவாஜி மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார்.

மருத்துவ படிப்பு படிக்க ஆசைப்படும் தர்ஷனின் தங்கை நீட் தேர்வில் தோல்வியடைவதால் தற்கொலைக்கு முயற்சிக்க,,,,

சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் தர்ஷனின் தங்கைஇறந்து போகிறார் .

இந்த மலை கிராமத்தில் மருத்துவமனை இருந்தும் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் பல உயிர்கள் இறக்கும் சூழ்நிலை உருவாகிறது .

கிராம தலைவரான சிங்கம் புலியுடன் கிராம மக்களுடன் சேர்ந்து கலெக்டர் அருள்தாசிடம் டாக்டர் வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் தர்ஷன் . அருள்தாசும் கிராம மக்கள் நலனுக்காக டாக்டரை வர வைக்க உத்தரவிடுகிறார். வரும் டாக்டரை நன்றாக மரியாதை கொடுத்து கிராமத்தை விட்டு போகாதபடி நன்றாக பார்த்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.


கலெக்டர் அருள்தாசின் உத்தரவுபடி டாக்டராக அந்த ஊருக்கு மகிமா நம்பியார் வருகிறார்.

டாக்டராக மகிமா நம்பியார் வந்த பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சில பேர் காப்பாற்றப்படுகின்றனர் .

இந்நேரத்தில் தேவையான வசதிகள் இல்லாத காரணத்தினாலும் ,புலி நடமாட்டம் இருப்பதாலும் ஒரு வாரத்தில் கிராமத்தை விட்டு சென்று விடுவதாக மகிமா நம்பியார் மக்களிடம் சொல்ல, மக்களோ அவரை கிராமத்தை விட்டு போகாத படி அவர் தங்கும் வீட்டை இரவு நேரத்தில் காவல் காப்பதில் இருந்து சாப்பிடும் உணவு வரை அவருக்கு பிடிக்கும்படி செய்கின்றனர் .

முடிவில் மகிமா நம்பியாரை தங்கள் கிராமத்தில் நிரந்தரமாக தங்க வைக்க போராடும் கிராம மக்களின் முயற்சி இறுதியில் அவர்கள் நினைத்தபடி நடந்ததா?, இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘நாடு’


நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் உணர்ச்சிமயமாக நடித்துள்ளார் .

நாயகியாக நடிக்கும் மகிமா நம்பியார் டாக்டர் கதாபாத்திரத்தில் இறுதியில் கிராமத்தை விட்டு செல்லும்போது மக்கள் நிலையறிந்து கண்கலங்கும் காட்சிகளில் உணர்வுபூர்வமான நடிப்பில் இயல்பாக நடிக்கிறார் .

தர்ஷனின் தந்தையாக இரு வேடங்களில் நடிக்கும் ஆர்.எஸ்.சிவாஜி,கிராம தலைவராக நடித்திருக்கும் சிங்கம் புலி, காஃபி டே பணியாளராக நடித்திருக்கும் இன்ப ரவிகுமார், அருள்தாஸ் என நடித்த நடிகர்களுடன் உடன் நடித்த கிராம மக்களும் இயல்பாக நடித்துள்ளனர்


ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவும் , சி.சத்யாவின் இசையும் படத்திற்கு பக்க பலம் .

பழங்குடி இன மக்களின் வாழ்வியலுடன் மலைவாழ் மக்களுக்கு தேவைப்படும் மருத்துவத்தை மையமாக கொண்ட கதையுடன் எளிய மக்களின் எதிர்பார்ப்பை இயல்பான காட்சிகளாக வடிவமைத்ததுடன் படம் பார்க்கும் ரசிகர்கள் கதையுடன் இணைந்து கிராமத்தில் பயணிப்பதுபோல உணர்வை ஏற்படுத்தும் சினிமாத்தனம் இல்லாத படமாக படத்தை பாராட்டும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் சரவணன்.


ரேட்டிங் ; 3. 5 / 5

bottom of page