விடிவி கணேஷுக்கும் சரண்யாவுக்கும் மகனான நாயகன் சதீஷ் வீடியோ கேம் விளையாடுவதில் திறமை பெற்றவராக இருப்பதால் அந்த துறையிலேயே வேலை தேடி அலைகிறார் .
இந்நேரத்தில் தண்ணீர் வரும் மோட்டார் பழுந்தடைந்த நிலையில் வேலை விஷயமாக அவசரமாக வெளியில் செல்ல தன் வீட்டிற்கு பின்னால் இருக்கும் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும்போது டிரீம் கேட்சர் என்னும் சூனியம் வைக்கப்பட்ட பொருள் தண்ணீருடன் சேர்ந்து வர அதிலிருந்து ஒரு இறகை பறித்து விட்டு மீண்டும் கிணற்றுக்குள் போட்டு விடுகிறார் சதீஷ்.
இதற்கு பின் சதிஷ் எப்போது தூங்கினாலும் கனவுலகில் அரண்மனை போன்ற பெரிய பங்களாவில் அனுமாஷ்ய சக்தி கொண்ட பேய்கள் மிரட்ட அலறலுடன் கண் முழிக்கிறார்
சில நாட்களில் இவருடன் தந்தை விடிவி கணேஷ், தாய் சரண்யா, மாமா நமோ நாராயணன், டாக்டர் ரெடின் கிங்ஸ்லி, பாக்சர் ஆனந்த் ராஜ் என அனைவரும் சதீஷுடன் கனவு உலகத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் பேய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நாசரை சதிஷ் தொடர்பு கொள்ள,,, நீ இறகை பறித்ததால்தான் உனக்கு இந்த பிரச்சனை.
நாளாக நாளாக உன் உயிருக்கு பிரச்சனை ஏற்படும் , கனவு உலகத்திற்கு மீண்டும் செல்லும்போது ஒரு சாவி அங்குள்ளது அதை எடுத்தால் மட்டுமே எல்லோரது உயிரையும் காப்பாற்ற முடியும் என சொல்கிறார் .
நாசருடன் சேர்ந்து ரெஜினா கசான்ட்ராவும் சதீஷுக்கு உதவ முன் வருகிறார் .
முடிவில் சதீஷ் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கனவு உலகத்தில் உள்ள பேயிடம் இருந்து தப்பித்தார்களா?
கனவு உலகத்தில் சதீஷை மிரட்டும் பேய்கள் யார் அந்த பேய்களின் பின்னணி கதை என்ன ? என்பதை சொல்லும் படம்தான் 'கான்ஜுரிங் கண்ணப்பன்'
நாயகனாக நடிக்கும் சதீஷ் படம் முழுவதும் தன் வழக்கமான காமெடி நடிப்பில் நடிக்காமல் பயம் ,பதட்டம் , அலறல் என உணர்ப்பூர்வமான நடிகராக கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரெஜினா கசான்ட்ரா,, நாசர் ,விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோருடன் ரெடின் கிங்ஸ்லி - ஆனந்த் ராஜ் காமெடியுடன் நமோ நாராயணனும் சேர்ந்து கொள்ள தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.
எல்லி அவ்ரம் ,ஜாசன் ஷா ,பெனடிக்ட் காரெட் பயமுறுத்தும் பேய்களாக நடிப்பில் மிரட்டுகின்றனர்
பேய் படத்திற்கான இசையுடன் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
ஒளிப்பதிவாளர் யுவாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் திகிலான மிரட்டல் .
இதுவரை சொல்லாத கனவுலகில் நடக்கும் பேய் கதையை மையமாக வைத்து விறு விறுப்பான திகிலான திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்க கூடிய பயம் கலந்த பேய் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் செல்வின் ராஜ்.
ரேட்டிங் ; 3.5 / 5
Comments