top of page
mediatalks001

’கும்பாரி’ விமர்சனம்




Cast :

Vijay Vishwa, Naleep Zia, Mahana sanjivi , John Vijay, Madhumitha, Senthi Kumari, Paruthiveeran Saravanan, Kadhal Sukumar,

crew ;

Director : Kevin Joseph

Music : jaiprakash ,jaison ,prithivi

cinematographer ; prasad Arumugam

Produced By : Kumaradas

கேபிள் டிவி ஆபரேட்டரான விஜய் விஷ்வாவும் மீன் பிடி தொழில் செய்பவரான நலீப் ஜியாவும் நண்பர்கள்.பெற்றோர்கள் யாரும் இல்லாத அவர்கள், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நட்புடன் இருப்பவர்கள்.

நாயகி மஹானாவை நாலைந்து ரவுடிகள் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள் அவர் மூச்சு முட்ட ஓடுகிறார். வழியில் கண்ணில் பட்டவர்களிடம் உதவி கேட்கிறார். யாரும் வரவில்லை .பயந்து விலகிக் கொள்கிறார்கள். இந்த நிலையில் இதைப் பார்த்த விஜய் விஷ்வா அந்த ரெளடிகளை அடித்து துவம்சம் செய்கிறார். அப்போது "என்ன நீ நிஜமாகவே அடிக்கிறாய்?'' என்கிறார்கள் .பிறகுதான் தெரிகிறது. அது மஹானா நடத்தும் யூடியூப் சேனலுக்காக எடுக்கப்படும் ஒரு பிராங்க் வீடியோ என்று. இதை அறிந்து நாயகி மஹானாவை விஜய் விஷ்வா ஓங்கி அறைந்து விடுகிறார் . உன் சேனலை மக்கள் பார்க்க வேண்டும் என்று இப்படி ஏமாற்றலாமா ?என்று திட்டுகிறார்.அந்த பிராங்க் வீடியோ பல லட்சம் பேரால் பார்க்கப்படுகிறது.

விஜய் விஷ்வாவின் துணிவும் அவரது குணமும் பிடித்துப் போய் மஹானா ,அந்த மோதலுக்குப் பின் காதலில் விழுகிறார். ஆனால் திருமணம் செய்து கொள்வதில் ஒரு சிக்கல் உண்டு. நாயகி மஹானாவுக்குத் திருமண வயது 21 ஆகவேண்டுமென்றால் 7 நாட்கள் மீதம் உள்ளன .அந்த ஏழு நாட்களை எப்படியாவது சமாளித்துத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிடுகிறார்கள்.அதனால் வீட்டை விட்டு வெளியேறிப் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.இருவரையும் சேர்த்து வைக்க நண்பர் ஜியா உதவுகிறார்.

நாயகியின் அண்ணன் ஜான் விஜய் அடியாட்களை வைத்துத் துரத்துகிறார்.காதலுக்கு உதவிய நண்பனையும் பழி வாங்கத் துடிக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் ஜியா காணாமல் போகிறார்.

நண்பன் காணாமல் போனதால் ஜான் விஜய் கோஷ்டியால் கொலை செய்யப்பட்டதாக விஜய் விஷ்வா நம்புகிறார் .அதற்காக நீதிமன்றம் சொல்கிறார்.ஆனால் அவர் கொலை செய்யப்படவில்லை நடந்தது வேறு என்று காட்சிகள் வருகின்றன.

அவருக்கு என்ன ஆயிற்று? விஜய் விஷ்வா காதல் என்னானது? காதலர்களை வெறியோடு துரத்தும் ஜான் விஜய் கும்பல் என்ன செய்கிறது? முடிவு என்ன?

என்பது தான் கும்பாரியின் கதை.

படம் ப்ளாஷ் பேக் எனப்படும் முன்கதை சொல்வது போல் ஆரம்பித்து கடந்த காலத்தில் பயணித்து நகர்கிறது.

இதில் ஒரு காதல் கதையும் அண்ணன் தங்கை பாசக்கதையும் பின்னி பிணைந்து திரைக்கதை ஆக்கப்பட்டுள்ளது.

துரை என்கிற பெயர் கொண்ட ஜான் விஜய் ,தர்ஷினி பெயர் கொண்ட மஹானா மீது அளவற்ற பாசம் வைத்துள்ள அண்ணன்.

ஆர்த்தி பாத்திரத்தில் நடித்துள்ள மதுமிதா ,தர்ஷினியின் காதலுக்கு உதவுகிறார். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடுகிறார்கள் . ஜான்விஜய் மட்டுமல்ல அவரது சித்தப்பா சித்தப்பு சரவணனும் அவர்களைப் பிடித்து விடுவதாக கூறுகிறார்.ஆட்களைத் திரட்டுகிறார்கள்.

இப்படி அடியாட்கள் துரத்த, அவர்கள் கடலுக்குள் சென்று தப்பிக்க, மீண்டும் துரத்த இவர்கள் ஆறு ,மலை என்று தண்ணீர் காட்ட, முடிவு என்ன என்பதுதான் க்ளைமாக்ஸ்.

அருண் பாத்திரத்தில் நடித்துள்ள கதாநாயகன் விஜய் விஷ்வாவும்,அவரது நண்பனாக ஜோசப் பாத்திரத்தில் நடித்துள்ள நலீப் ஜியாவும் நன்றாக நடித்துள்ளார்கள். குறிப்பாக நண்பன் ஜியா பாத்திரத்திற்கு நடிப்புத் தருணங்கள் அதிகம்.

தர்ஷினி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மஹானா அளவான அழகுடன் அளவான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

நகைச்சுவை நடிகையாக அறியப்பட்ட மதுமிதா ஆர்த்தி கதாபாத்திரத்தில் வருகிறார்.அவரது உடல் மொழியும் வசன உச்சரிப்பும் மிகை ரகம். குணச்சித்திர நடிகையாக அறியப்பட்ட மீனாள் இதில் காமெடி என்ற பெயரில் நம்மைச் சோதிக்கிறார்.

ஒரு பரபரப்பான காதல் கதையாக இருக்க வேண்டியதை ஆங்காங்கே அறுவை ஜோக்குகளுடன் அசட்டுத்தனமான காட்சிகளை வைத்து அலுப்பூட்டி விடுகிறார்கள்.

குறிப்பாக ஜான் விஜய் தனது தங்கையிடம் பாசம் காட்டுவதாக அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் நாடகத்தனமானவை .மிகை நடிப்பின் உச்சமாக உள்ளன. வீரத்துக்கும் வில்லத்தனத்திற்கும் பெயர் பெற்ற பருத்திவீரன் சரவணனை ஒரு காமெடியன் ஆக்கி வெறுப்பேற்றி உள்ளார்கள்.

ஜான்விஜய்யின் அல்லக்கையாக காமெடி நடிகர் சாம்ஸ் வருகிறார்.தன்னால் முடிந்த அளவிற்கு சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.ஒல்லியான குடிகாரன் பாத்திரத்தில் வரும் ராயன் கூட சிரிப்பு மூட்டுகிறார்.

படத்தின் பெரிய பலமாக இருப்பது பிரசாத் ஆறுமுகம் செய்துள்ள ஒளிப்பதிவு என்று கூறலாம். கன்னியாகுமரி மண்ணின் அழகு, அருவி, ஆறு, கடல் என்றும் பச்சைப் பசேல் இயற்கைப் பிரதேசங்களையும் தன் கேமராவுக்குள் சிறைப்படுத்திக் காட்சிப்படுத்தியுள்ளார்.நடுக்கடலில் கதாநாயகனை வில்லனின் படகுகள் சுற்றி வளைப்பதை ட்ரோன் மூலம் படம் ஆக்கி உள்ளது நன்றாக உள்ளது.

இசையமைப்பாளர்களும் தங்கள் பங்கைக் குறையின்றிச் செய்துள்ளனர்.

குமரி மாவட்ட வட்டார வழக்குகளைக் கோர்த்து படத்தின் ஆரம்பத்தில் குமரித் தமிழில் ஒலிக்கும் 'அவியே இவியே எல்லாரும் நில்லுங்க' பாடல் கவனிக்க வைக்கிறது.

அதைக் காட்சிப்படுத்தி இருக்கும் விதமும் பொருத்தம்.இரண்டாவது பாதியில் ஒலிக்கும் 'நானும் நீயும் சேந்திடவே மனம் ஏங்குதே' பாடல் இனிமை ரகம்.

கும்பாரி என்பது நண்பன் என்கிற பொருள் படும் சொல்லாகப் படத்தில் கூறப்படுகிறது.115 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்

படத்தில் நட்பு ,காதல், அண்ணன் தங்கை பாசம் என மூன்றையும் சொல்ல முயன்றுள்ளார்கள். .ஒளிப்பதிவு இசை போன்றவை வலுவாக உள்ளது.காட்சிப்படுத்தல்களில் பாத்திரச் சித்தரிப்புகளில் ஆழம் இன்னும் இருந்திருக்கலாம்.சிறிய பட்ஜெட்டில் அவர்களால் முடிந்த உயரத்தில் ஒரு படத்தைக் கொடுத்துள்ளார்கள்.

விஜய் விஷ்வா, மஹானா சஞ்சீவி, பருத்திவீரன் சரவணன், நலீப் ஜியா, ஜான் விஜய் ,சாம்ஸ் ,மதுமிதா, மீனாள், ராயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.எழுதி இயக்கியிருப்பவர் கெவின் ஜோசப்,இசை- ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி, ஒளிப்பதிவு -பிரசாத் ஆறுமுகம், எடிட்டர் - T.S.ஜெய், கலை -சந்தோஷ் பாப்பனங்கோடு,

சண்டை - மிராக்கிள் மைக்கேல், நடனம் - ராஜுமுருகன், பாடல்கள்- வினோதன் ,அருண் பாரதி, சீர்காழி சிற்பி.

இப்படத்தை ராயல் எண்டர்பிரைசஸ் சார்பில் டி. குமாரதாஸ் தயாரித்துள்ளார். படத்தை 9Vஸ்டுடியோஸ் வெளியிடுகிறது..

Comments


bottom of page