top of page

‘சிங்கப்பூர் சலூன்’ - விமர்சனம்





ஆர் ஜே பாலாஜிக்கு சிறிய வயது முதல் தனது கிராமத்தில் இருந்த சலூன் கடைக்காரர் லால் மீது அதிக பிரியம்.

அவரின் முடிவெட்டும் அழகை கண்டு ஆர் ஜே பாலாஜியும் முடிவெட்டுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருக்கிறார்.

ஆர் ஜே பாலாஜியும் கிஷன் தாஸும் நெருங்கிய நண்பர்கள்.

எந்த தொழிலாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்தால் பெரிய அளவில் அந்த தொழிலில் முன்னேறலாம் என நினைக்கும் ஆர்ஜே பாலாஜி கல்லூரியில் இன்ஜினீயரிங் படிக்கும் போது காதல் மலர்வதோடு முடி திருத்தும் சலூன் தொழில் மீது அவருக்கு இருந்த ஆர்வமும் வளர்கிறது.

ஆர்ஜே பாலாஜியின் முடி திருத்தும் சலூன் தொழிலின் ஆர்வத்தினால் அவரது காதலும் தோல்வியில் முடிய, பெற்றோர்கள் செய்து வைத்த திருமணத்தை ஏற்றுக் கொண்டு தனது வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார் ஆர் ஜே பாலாஜி.

இந்நிலையில் மிக பிரமாண்டமான சலூன் ஒன்றை திறக்க ஆசைப்படும் ஆர் ஜே பாலாஜி சில கோடி பணத்தை முதலீடாக வைத்து அனைவரும் பிரமிக்கும் வகையில் பிரமாண்டமான சலூனை திறக்கிறார்.

முடி வெட்டும் சலூன் தொழிலில் பெரிய அளவில் வர வேண்டும் என நினைக்கும் ஆர் ஜே பாலாஜிக்கு தொழில் போட்டியாளர்கள் மத்தியில் பல தடைகள் வர,,, மறுபக்கம் இயற்கை அழிவினால் சில சிக்கல்கள் வருகிறது. முடிவில் அனைத்து பிரச்சனைகளிலிருந்து மீண்டு தான் நினைத்தது போல் அத்துறையில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘சிங்கப்பூர் சலூன்’

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் காமெடியுடன் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தும் கதையின் நாயகன் ஆர் ஜே பாலாஜி முடி வெட்டும் தொழிலில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் இளைஞராக கதிரவன் கதாபாத்திரமாகவே பயணித்து ரசிகர்கள் மனதில் இயல்பான நடிப்பில் வாழ்கிறார் .

ஆர் ஜே பாலாஜியின் மாமாவாக வரும் சத்யராஜ் படத்திற்கு பெரிய பலம். அவரது காமெடி கலாட்டாக்களில் வயிறு குலுங்க ரசிகர்கள் சிரிக்கும்போது தியேட்டரே அதிர்கிறது .

நாயகியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி, ஆர் ஜே பாலாஜியின் நண்பராக நடித்திருக்கும் கிஷன் தாஸ், கிராமத்தில் சலூன் கடை வைத்திருக்கும் லால், ஆர்ஜே பாலாஜியின் தந்தையாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் என நடித்த நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .

சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா என அனைவருமே படத்திற்கு பக்க பலம் .

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவும் ,விவேக் - மெர்வின் இசையும் . ஜாவேத் ரியாஸின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் .

வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் இளைஞனின் கதையாக ஒரு தொழிலை இவர்கள்தான் செய்ய வேண்டும் என்பதில்லாமல் யாருக்கு எந்த தொழில் பிடிக்கிறதோ அதை அவர்கள் இஷ்டப்பட்டு செய்தால் எந்த துறையாக இருந்தாலும் அதில் பெரிய அளவில் முன்னேறலாம் என்ற அழுத்தமான கருத்துடன் காமெடி கலந்த கதையாக அனைவரும் ரசிக்கும் வகையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கோகுல்.

ரேட்டிங் ; 3.5 / 5


bottom of page