கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறையில் 2008ஆம் ஆண்டு பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கிறார் மாணவர் ரக்ஷன்,
தன்னுடன் படிக்கும் சக மாணவியான மலீனாவை மனதார காதலிக்கிறார். கடைசிவரை தனது காதலை மலீனாவிடம் சொல்லாமல் பள்ளி படிப்பை முடிப்பவர், தன் காதல் நினைவுகளோடு வாழ்வதோடு, தன் காதலியை மீண்டும் பார்க்கும் வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தொழில் போட்டியில் வேறு ஒரு தனியார் பள்ளி அந்த பள்ளிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் 2008 ஆம் ஆண்டு அந்த பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி செல்லாது என்றும், அப்போது தேர்வு எழுதிய மாணவர்கள் தற்போது மீண்டும் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என 2018ஆம் ஆண்டில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
பத்து வருடங்களுக்கு முன்னாள் எழுதிய 12ம் வகுப்பு தேர்வை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் மாணவர்கள், வேறு வழி இல்லாமல் வருத்தத்தோடு மீண்டும் அந்த பள்ளிக்கு வர, ரக்ஷன் தனது காதலை புதுப்பிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு என்ற மகிழ்ச்சியில் மீண்டும் பள்ளிக்கு வருகிறார்.
சக மாணவர்கள் உதவியுடன் எப்படியாவது தனது காதலை மலீனாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால் ரக்ஷனின் காதலியான மலீனா நிச்சயம் முடிந்து திருமணத்திற்காக காத்திருக்கும் மணப்பெண்ணாக 12ம் வகுப்பு தேர்வை எழுத பள்ளிக்கு வருகிறார் .
முடிவில் கடிதம் மூலம் மலீனாவுக்கு தன் காதலை சொல்கிறார் ரக்ஷன். இறுதியில் ரக்ஷனின் காதலை மலீனா ஏற்று கொண்டாரா ? இல்லையா ? எனபதை சொல்லும் படம்தான் 'மறக்குமா நெஞ்சம்'
கதையின் நாயகனாக நடிக்கும் ரக்ஷன் பள்ளி பருவத்தில் மாணவனாகவும் , வாலிப வயதில் தன் காதலுக்காக மனமுருகும் இளைஞராகவும் உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .
நாயகியாக நடிக்கும் அழகான மலீனா கதைக்கேற்றபடி இயல்பாக நடிக்கிறார் .
முக்கிய கதாபாத்திரங்களில் தீனா, பிராங் ஸ்டார் ராகுல் ,பி.டி மாஸ்டராக நடித்திருக்கும் முனீஷ்காந்த்,ஆசிரியையாக நடித்திருக்கும் அகிலா,பள்ளி மாணவ, மாணவிகளாக வரும் ஸ்வேதா, முத்தழகன், மெல்வின் டெனிஸ், அருண் குரியன், அஷிகா காதர், விஷ்வாத், நட்டாலியா என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
ஒளிப்பதிவாளர் கோபி துரைசாமியின் ஒளிப்பதிவும் , இசையமைப்பாளர் சச்சின் வாரியரின் இசையும் படத்திற்கு பக்க பலம் .
பள்ளி பருவ காதலை சில வருடங்களுக்கு பின் மீண்டும் புத்துயிர் பெறும் காதலாக இயல்பான கதையோடு ரசிக்க வைக்கும் திரைக்கதையுடன் பள்ளி வாழ்க்கை மீண்டும் வராதா என படம் பார்க்கும் ரசிகர்களே ஏ ங்கும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் இரா கோ யோகேந்திரன்.
ரேட்டிங் ; 3.5 / 5
Comments