போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க காவல்துறை உயர் அதிகாரி தலை வாசல் விஜய் உத்தரவுப்படி போலீஸ் அதிகாரி ஜெய்குமார் தலைமையில் தனி படை ஒன்று அமைக்கப்படுகிறது.
அந்த போலீஸ் படையினருக்கு மயானத்தில் புதைக்கப்படும் உடல்களை எடுத்துவிட்டு அந்த குழிகளில் கடத்தல் கும்பல் போதைப்பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள், என்ற அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது.
அதன்படி அந்த மயானத்தில் போலீஸ் ர கசிய நடவடிக்கை மேற்கொள்ளும் போது போலீசாருக்கு மிரள வைக்கும் பல உண்மைகள் தெரிய வருகிறது.
இந்நேரத்தில் தனியாக பாழடைந்த மண்டபத்தில் சாத்தானை வழிபடும் பயங்கர கும்பலையும் அங்கு அவர்கள் விசித்திரமான பூஜைகள் செய்வதையும், பிறந்த குழந்தைகள் முதல் மனிதர்களை நரபலி கொடுப்பதையும் அதிகாரி ஜெய்குமார் கண்டுபிடிக்கிறார்.
அவர்களை பற்றி மேலும் ஜெய்குமார் விசாரிக்க சாத்தானை வழிபடும் அந்த கும்பலின் பின்னணி, அதைச் சார்ந்தவர்கள் மாயமானது மற்றும் அவர்களின் மர்ம மரணம் போன்றவை பற்றி தெரிய வருகிறது .
இவ்வழக்கின் தீவிரமாக விசாரணையில் இறங்கும் ஜெய்குமார், இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க முயலும்போது எதிர்பாராத அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடைபெறுகிறது.
முடிவில் இதற்கெல்லாம் பின்னணியாக இருந்து சாத்தானை வழிபடும் முக்கியமான நபரை ஜெய்குமார் கண்டுபிடித்தாரா ?
பாதகமான நரபலி செய்து சாத்தானை வழிபடும் முக்கிய நபர் யார் ? என்பதை சொல்லும்மர்மம் நிறைந்த படம்தான் ‘தி அக்காலி’
காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ஜெய்குமார், கிறிஸ்துவ மத போதகராக நடிக்கும் நாசர், காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்
ஒளிப்பதிவாளர் கிரி முர்பி கதைக்கேற்றபடி ஒளிப்பதிவில் தன் திறமையை நிரூபித்துள்ளார் .
அனிஷ் மோகனின் இசையும் ,கலை இயக்குநர் தோட்டா தரணியின் கலைப்பணியும்,படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியனின் பட தொகுப்பும் படத்திற்கு பக்க பலம்.
சாத்தான்களை வழிபடுபவர்களின் நரபலி சம்பவங்களை மையமாக கொண்ட கதையுடன்,, திரைக்கதையில் விறுவிறுப்பு இருந்தாலும் சில அழுத்தமில்லாத காட்சிகளினால் கதையின் வேகம் குறைகிறது .இருப்பினும் ஹாலிவுட் பாணியில் க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த படமாக வித்தியாசமாக இயக்கியுள்ள இயக்குநர் முகமது ஆசிப் ஹமீத்தின் முயற்சியை நிச்சயம் பாராட்டலாம்.
ரேட்டிங் - 3 / 5
Comentarios