‘ஹிட்லர்' - விமர்சனம் !
- mediatalks001
- Sep 27, 2024
- 1 min read
மதுரையில் இருந்து தனியார் வங்கியில் கிடைத்த வேலைக்காக சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி .
யாரென்று தெரியாத ரெடின் கிங்லி ரூமில் அவரது பழைய நண்பன் என சொல்லி அவருடன் தங்கி வேலைக்கு செல்கிறார்
இந்நேரத்தில் விஜய் ஆண்டனி, ரயில் நிலையத்தில் நாயகி ரியா சுமனை கண்டதும் காதல் கொள்கிறார். இவர்களது காதல் கதை ரயில் பயணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் நடக்க இருக்கும் சில நாட்களுக்கு முன் அமைச்சர் சரண்ராஜின் கருப்பு பணமான ரூ.400 கோடியை எடுத்துச் செல்லும் அவரது ஆட்களை துப்பாக்கியால் கொலை செய்துவிட்டு அந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடிக்கிறது.
அந்த கும்பலை பிடிப்பதற்கான பொறுப்பு காவல்துறை உயர் அதிகாரி கெளதம் மேனனிடம் மேலிடம் ஒப்படைக்கிறது .
அவரது விசாரணையில் அதிர்ச்சிகரமான பல உண்மைகள் தெரிய வருகிறது. முடிவில் தேர்தல் சமயத்தில் ஒட்டு போட மக்களுக்கு கொடுக்க இருக்கும் அமைச்சர் சரண்ராஜின் கருப்பு பணத்தை திட்டமிட்டு கொள்ளையடிக்கும் அந்த மர்ம மனிதன் யார் ?
காவல்துறை உயர் அதிகாரி கெளதம் மேனன் சாமர்த்தியமாக பணத்தை திட்டமிட்டு கொள்ளையடிக்கும் அந்த மர்ம நபரை கண்டுபிடித்தாரா ? என்பதை சொல்லும் படம்தான் ‘ஹிட்லர் ’.
கதையின் நாயகனாக விஜய் ஆண்டனி வழக்கமான பாணியில் நடித்தாலும் கதாபாத்திரத்தை உணர்ந்து கதையுடன் இணைந்து காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
நாயகியாக நடித்திருக்கும் ரியா சுமன் ,காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கெளதம் மேனன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வில்லனாக நடித்திருக்கும் சரண்ராஜ், அவரது தம்பியாக நடித்திருக்கும் இயக்குனர் தமிழ், ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா அனைவரும் கதைக்கேற்றபடி இயல்பாக நடித்துள்ளனர் .
ஒளிப்பதிவாளர் நவீன் குமார் ஒளிப்பதிவும் , விவேக் - மெர்வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம் .
ஆளுங்கட்சியின் அமைச்சர் செய்யும் அராஜக ஊழலுடன் மக்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும் ஆக்சன் படமாக படத்தை இயக்கியுள்ளார் எஸ் ஏ தனா.
ரேட்டிங் - 3 / 5
Comments