நாய்ஸ் & கிரைன்ஸ் மற்றும் பூமர் ஃபேஷன் இணைந்து வழங்கும் இந்தியாவில் முதல்முறையாக 360 டிகிரி வடிவிலான மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எவர் கிரீன் ஹிட் என்பதை இசை ரசிகர்கள் நன்கு அறிவர். இரண்டு தலைமுறைகளாக தமிழ் திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல்... அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி அற்புதமான இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா தற்போது 'U1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்' எனும் பெயரில் சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த இசை நிகழ்ச்சியை இசை துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் மற்றும் முன்னணி இசைக் கலைஞர்களுடன் இணைந்து இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி, உலக அளவில் நற்பெயரை சம்பாதித்த பத்து ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நாய்ஸ் & கிரைன்ஸ் எனும் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பூமர் ஃபேஷன் எனும் முன்னணி ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் விளம்பரதாரராக பங்களிப்பு செய்கிறது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன்போது நாய்ஸ் & கிரைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மகாவீர் மற்றும் கார்த்திக் சீனிவாஸ், விளம்பரதாரரான பூமர் ஃபேஷன் நிறுவனத்தின் தலைவர் லிங்குசாமி மற்றும் ஹரிதா லிங்குசாமி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாய்ஸ் & கிரைன்ஸ் நிறுவனத் தலைவர் மகாவீர் பேசுகையில், '' இது இந்த இசை நிகழ்ச்சி- எங்களுடைய நிறுவனத்தின் பத்தாம் ஆண்டுக்கான இசை நிகழ்ச்சி. இந்த இசை நிகழ்ச்சி எங்களுக்கு மிகவும் சிறப்பானது. முக்கியத்துவமானது. ஏனென்றால் இசை ரசிகர்களின் இதயத்தில் ராஜாவாக வீற்றிருக்கும் யுவன் சங்கர் ராஜா. நான் உள்பட அனைவரும் யுவனின் தீவிர ரசிகர்கள். இசை நிகழ்ச்சிக்காக யுவன் சங்கர் ராஜாவுடன் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பயணித்து, இந்த முறை அவரிடம் இசை நிகழ்ச்சிக்கான அனுமதியை பெற்று இருக்கிறோம். கடந்த ஆண்டு முதல் நிகழ்ச்சியை நடத்தினோம். அதில் கிடைத்த வெற்றி.. எங்களின் அணுகுமுறை .. இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பாணி... ஆகியவற்றை பாராட்டி, இந்த ஆண்டும் எங்களுக்கு இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்திருக்கிறார் யுவன் சார்.
'யுவன் லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்' எனும் இந்த தொடர் இசை நிகழ்ச்சிகளின் முதல் நிகழ்வு பெங்களூருவில் நடைபெற்றது. மொழி எல்லைகளைக் கடந்து பெங்களூரில் நடைபெற்ற யுவனின் இசை நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது சென்னையில் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
சென்னை இசை நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவென்றால்.. முதன் முறையாக இந்தியாவில் 360 டிகிரி வடிவிலான மேடையில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் மூலம் ரசிகர்களுக்கும், யுவனுக்கும் இடையேயான நெருக்கம் மேலும் அதிகமாகும். இதனை இசை ரசிகர்களும் விரும்புவார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுடன் நான் மேலும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற யுவன் சாரின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்.
360 டிகிரி இசை நிகழ்ச்சி சர்வதேச அளவில் பல நாடுகளில் நடைபெற்றிருக்கிறது. அதனை முதன் முதலாக இந்தியாவின் ஏன் முயற்சிக்க கூடாது என எண்ணி, விரிவான ஏற்பாடுகளுடன் திட்டமிட்டு இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறோம். அந்த வகையில் இந்திய கலைஞர்களை கொண்டு இந்தியாவில் நடைபெறும் 360 டிகிரி வடிவிலான மேடையுடனான நேரலையான முதல் இசை நிகழ்ச்சி இதுதான்.
யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி என்று சொன்னவுடன் பூமர் பேஷன் நிறுவனத்தினர் மிக்க மகிழ்ச்சியுடன் விளம்பரதாரராக பங்கு கொள்வதில் விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கும் இது தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையை தொடர்ந்து விரைவில் கோயம்புத்தூர் மற்றும் சிங்கப்பூரில் இதே போன்றதொரு இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். '' என்றார்.
இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா பேசுகையில், '' இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் சிறப்பானது. கடந்த முறை சென்னையில் இசை நிகழ்ச்சி நடக்கும் போது, எனக்கும்- ரசிகர்களுக்கும் இடையே சிறிய இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்களிடமிருந்து சற்று தள்ளி இருக்கிறோமோ..! என்ற எண்ணம் ஏற்பட்டது. அதே தருணத்தில் ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாக இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என விரும்பினேன். என்னுடைய விருப்பத்தை நாய்ஸ் & கிரைன்ஸ் குழுவினரிடம் தெரிவித்தேன். அந்த தருணத்தில் 360 டிகிரி வடிவிலான மேடையை அமைப்பது குறித்து விவாதித்தோம். இந்த புது அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறேன். இந்த இசை நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இது ரசிகர்களையும் , என்னையும் உற்சாகப்படுத்தும். ஜூலை 27ஆம் தேதியன்று ஒய் எம் சி ஏ மைதானத்தில் சந்திப்போம்.'' என்றார்.
இதனிடையே யுவன் சங்கர் ராஜாவின் U1 long drive live in concert எனும் இந்த நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜாவுடன் பின்னணி பாடகர்கள் ஆண்ட்ரியா, ஹரி சரண், பிரேம் ஜி, ராகுல் நம்பியார், ஹரிப்பிரியா, திவாகர், ரிஷா, ஆதித்யா , ஸ்ரீ நிஷா, எம் சி சனா என ஏராளமான முன்னணி பின்னணி பாடகர்கள்- பாடகிகள் பாடுகிறார்கள் என்பதும், இந்திய கலைஞர்களை கொண்டு 360 டிகிரி வடிவிலான மேடையில் முதன்முதலாக நடைபெறும் நேரலையான இசை நிகழ்ச்சி இதுதான் என்பதும், இது திரை ரசிகர்களுக்கு புதுவிதமான இசை அனுபவத்தை வழங்கும் என்பதால் இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும், இந்த இசை நிகழ்ச்சியில் 35 க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம் பெறுவதும், அதில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை யுவன் சங்கர் ராஜாவே பாடி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Commentaires