top of page
mediatalks001

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'அடியே' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!





'அடியே' எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் 'அடியே' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், வெங்கட் பிரபு, ஏ எல். விஜய், சிம்பு தேவன், வசந்த பாலன், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டனர்.‌


'திட்டம் இரண்டு' எனும் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'அடியே'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், RJ விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். மல்டிவெர்ஸ் என்ற எண்ணத்தை மையப்படுத்தி ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார்.


ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும்  இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை பிவிஆர் சத்யம் திரையரங்க வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பட குழுவினருடன் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் வசந்த பாலன், வெங்கட் பிரபு, மிஷ்கின், சிம்பு தேவன், ஏ. எல். விஜய், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா பேசுகையில், '' அடியே திரைப்படம் மிகவும் புதிதான கதையை கொண்ட படம். ஜீ.வி. பிரகாஷ் குமாரிடம் படத்தின் இயக்குநரை பற்றி கேட்டு தெரிந்து கொண்டேன். ரொம்ப அருமையான கான்செப்ட். நீண்ட நாள் கழித்து திரையுலக பிரபலங்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட விழாவாக இது நடைபெறுகிறது. இது மகிழ்ச்சியாக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளருக்கு இந்த திரைப்படம் வெளியாகி நல்ல லாபத்தை வழங்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.'' என்றார்.


இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், ''படத்தின் முன்னோட்டத்தை பார்த்தேன் நம்பிக்கை அளிக்கிறது. இந்தப் படத்தில் கன்டென்ட் தான் முக்கிய விசயமாக இருக்கிறது. ஜீ.வி. பிரகாஷ் குமார்- கௌரி- ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோரின் கூட்டணியில் உருவான இரண்டு பாடல்களைப் பார்த்தோம். ரசிக்கும்படி இருந்தது. அதிலும் குறிப்பாக நாயகியாக நடித்திருக்கும் கௌரி- ஐஸ் சாப்பிடும் காட்சி நம்மையும் உருக வைக்கிறது. ஜீ. வி. பிரகாஷ் குமார் ஸ்கூல் படிக்கும் பையனாகவும், வேறு சில கெட்டப்புகளிலும் அருமையாக நடித்திருக்கிறார். இந்த முன்னோட்டமே படத்தின் வெற்றிக்கு முதல் அச்சாரம். நான் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் ரசிகன். பாடல் வரிகளும், மெட்டும் சேர்ந்து மாயாஜாலம் செய்திருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்'' என்றார்.


இயக்குநர் சிம்பு தேவன் பேசுகையில், ''  அடியே படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் மிக சிறப்பாக இருக்கிறது. மல்டிவெர்ஸ் என்பதனை நாம் அவெஞ்சர்ஸ் போன்ற ஹாலிவுட் படத்தில் தான் பார்த்திருக்கிறோம். அதனை தமிழில் வேறு ஒரு வடிவத்தில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் என்னுடைய அடுத்த படமான 'போட்' எனும் திரைப்படத்தினை அவர்கள் தான் தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் பிரேம்குமார் எதையும் நேர்த்தியாக நேசித்து அழகாக உருவாக்குபவர். எந்த தருணத்திலும் சிறிதும் பதட்டப்படாமல் சிரித்த முகமாக இயல்பாக இருப்பவர். இந்த நிறுவனம் தமிழ் திரையுலகில் சிறந்த படைப்புகளை வழங்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக ஏற்றம் பெறும். இதற்காக என்னுடைய வாழ்த்துக்கள். ஜீ.வி. பிரகாஷ் குமார் இசை, நடிப்பு எனும் இரட்டை குதிரையில் அற்புதமாக சவாரி செய்கிறார். சவாலான இந்த இரண்டையும் உணர்வுபூர்வமாக நேசித்து பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திலும் பின்னணி இசையில் தன்னுடைய முழுமையான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் நாளாக நாளாக இளமையாகத் தெரிகிறார். அவரை ஸ்கூல் ஸ்டுடன்ட்டாகப் பார்க்கும் போது எந்த வித்தியாசமும் தோணவில்லை. ரசிக்க தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.'' என்றார்.


இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசுகையில், ''ஜீ. வி. பிரகாஷ் குமாரின் இசையமைப்பில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அது நடைபெறவில்லை. பிறகு அவரை இயக்குவதற்காக வாய்ப்பு கிடைத்தது. பிறகு அதுவும் நடைபெறவில்லை. அவருக்கும் எனக்கும் பத்தாண்டுகளாக நட்பு தொடர்கிறது. அவருடைய வளர்ச்சியை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் இசையை போலவே நடிப்பிலும் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வெற்றி பெறவும், இதற்காக உழைத்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் உள்ளிட்ட பட குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.


இயக்குநர் ஏ எல் விஜய் பேசுகையில்,'' இந்த படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.‌ அடியே படத்தில் கன்டென்ட் ஃபிரஷ்ஷாக இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறை ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வரவழைப்பதற்கான விசயங்கள் இப்படத்தில் இருக்கிறது. லவ் டுடே பெற்ற வெற்றியை போல் இந்த திரைப்படமும் வெற்றியைப் பெறும். ஜீ. வி. பிரகாஷ் குமாரை பொருத்தவரை நடிப்பிலும், இசையிலும் எளிதாக பயணிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர்கள் சினிமா மீது பற்று கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனம் ஏஜிஎஸ்.. வேல்ஸ்.. போன்ற முக்கியமான திரைப்பட நிறுவனமாக தமிழில் வளர்ச்சி பெறும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்'' என்றார்.


இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், ''  ஜீ. வி. பிரகாஷ் வெரி ஸ்வீட் பாய். மியூசிக்.. பெர்ஃபாமன்ஸ் என இரண்டிலும் கலக்கும் பெக்யூலியரான கேரக்டர். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து இன்று தமிழில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்திருக்கிறார். எல்லோரிடமும்... எல்லா தருணத்திலும். . இனிமையாகவே பேசக் கூடியவர். இன்றைய இளைய தலைமுறை படைப்பாளிகளை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. சயின்ஸ் ஃபிக்சன் படத்தை தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக சொல்ல முடியுமா? என்ற கேள்வி இருக்கிறது. இதுபோன்ற படங்களில் எல்லாம் ஹாலிவுட்டில் தான் தயாரிப்பார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் இது எப்படி சாத்தியம்? அதுவும் சயின்ஸ் பிக்சன் விசயத்தை காதலுடன் கலந்து கொடுப்பது என்பது ஆச்சரியமான ஒன்று. இந்த முன்னோட்டத்தை பார்க்கும் போது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. என்னால் இது போன்ற ஒரு கோணத்தில் சிந்திக்க முடியாது. இந்த விசயத்தில் நம்பிக்கையுடன் செயல்பட்ட விக்னேஷ் கார்த்திக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற சயின்ஸ் ஃபிக்சன் கதையை முதலில் கேட்டு, தயாரிக்க ஒப்புக்கொண்ட தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


'நிழல்கள்' படத்தின் பாடல்களை நான் முதன் முதலாக கேட்டபோது ஏகாந்தமாக உணர்ந்தேன். அந்த உணர்வு ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இந்த படத்தின் பாடல்களை கேட்கும் போதும் ஏற்பட்டது'' என்றார்.


தயாரிப்பாளர் பிரேம்குமார் பேசுகையில், '' கொரோனா காலகட்டத்தில் வீட்டில் அமர்ந்து 'திட்டம் இரண்டு' எனும் படத்தை பார்த்தேன். வித்தியாசமாக இருந்தது. என் மகனிடம், இந்த படத்தின் இயக்குநர் யார்? என்று கேட்டேன். அவர் விக்னேஷ் கார்த்திக் என்று பதிலளித்தார். அவரை சந்திக்கலாம் என்று என்னுடைய விருப்பத்தை தெரிவித்தேன். சில நாட்களில் வித்தியாசமான கதை ஒன்று இருக்கிறது. தயாரிக்கிறீர்களா? என்று என் நண்பர் கேட்டபோது, சரி என்று சொன்னேன். அப்போது என்னிடம் கதை சொல்ல வந்தவர் விக்னேஷ் கார்த்திக். கதையைக் கேட்டதும் தயாரிக்க சம்மதித்தேன். மௌனமாக இருந்து காய்களை நகர்த்தி இப்படத்தை உருவாக்கினார். அடியே படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் சந்தோஷமாக பணியாற்றினார்கள்.


நாங்கள் இதுவரை 23 தொழில்களில் ஈடுபட்டிருக்கிறோம். அனைத்தும் ஆண்டவன் அருளால் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு படம் தயாரித்திருக்கிறேன் என்பதை விட, ஒரு நல்ல படத்தை இந்த சமுதாயத்திற்கு கொடுத்திருக்கிறேன் என்ற மன நிறைவு இருக்கிறது. இந்தப் படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு தேவன் இயக்கத்தில் 'போட்' எனும் திரைப்படமும் தயாராகி இருக்கிறது. திறமையுள்ள இயக்குநர்களை வாய்ப்பளிப்பதற்காக ஆண்டவன் வசதியையும், வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன் '' என்றார்.





இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசுகையில், '' இந்த படத்தின் மூலம் விக்னேஷ் கார்த்திக் என்ற ஒரு படைப்பாளி நண்பனாக கிடைத்திருக்கிறார். அவர் தன்னுடைய எண்ணங்களை நேரடியாக கூறி விடுவார். இது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. ஜீ.வி சார் தான் ஹீரோ என்றதும் முதலில் எனக்கு சற்று பயம் இருந்தது. ஏனெனில் என்னுடைய உதாரண புருஷர்களில் அவரும் ஒருவர். நான் சென்னைக்கு வந்து உதவியாளராக பணியாற்ற வேண்டும் என விரும்பிய இசையமைப்பாளர்களில் அவரும் ஒருவர். அவர் நடிக்கும் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்த போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். பணியாற்றும்போது என்னை நல்ல சௌகரியமான நிலையில் பணிபுரிய அனுமதித்தார். இந்த படத்தில் பகவதி மற்றும் மாதேஷ் ஆகிய பாடலாசிரியருடன் பணியாற்றி இருக்கிறேன். இவர்களுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பமும் இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவிற்கு சிறப்பு நன்றி '' என்றார்.


இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில், '' அடியே எனக்கு மிகவும் ஒரு ஸ்பெஷலான திரைப்படம். ஏற்கனவே நான் இயக்கிய 'திட்டம் இரண்டு' என்ற திரைப்படம் திரையரங்க வெளியீட்டிற்காக இயக்கினேன். ஆனால் கொரோனா காரணமாக அந்த திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியானது. அடியே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.


ஜீ. வி பிரகாஷ் அற்புதமான மனிதர். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். அவரை பார்க்கும் போது சற்று பொறாமை ஏற்படும். அவரை நான் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ சந்தித்திருந்தால்... என்னுடைய ஆக சிறந்த நண்பராக இருந்திருப்பார். அவருக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியான தினத்தன்று தான் இப்படத்தில் ஒரு வசனத்தை  படமாக்கினோம். அது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, அதனை எளிதாக எடுத்துக்கொண்டு பயன்படுத்த அனுமதி கொடுத்தார்.


இந்தப் படத்திற்காக நிறைய நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இறுதியில் கௌரி கிஷன் பொருத்தமாக இருந்ததால்.. அவரை தேர்வு செய்தோம். அவருக்குள் ஒரு ஃபெமினிஸ்ட் இருக்கிறார். இந்தப் படத்தில் நாயகன், 'டி' போட்டு பேசினால் பிடிக்கும் என்பார். கௌரி என்னிடம் இந்த 'டி' என்பது அவசியமா? என கேட்டார். பிறகு அவருக்கு எந்த சூழலில் இந்த வார்த்தை இடம் பெறுகிறது என்று விளக்கம் அளித்த பிறகு ஒப்புக்கொண்டார். நல்ல நடிகை. இந்த திரைப்படத்தில் முழு திறமையை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார் வாழ்த்துக்கள்.


இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்டோம். முதலில் அவர் பிஸியாக இருப்பதாக சொன்னார். பிறகு வேறு ஒரு நடிகரிடம் கதையை சொல்லி நடிக்க சம்மதம் பெற்றோம். இருப்பினும் இறுதியாக அவரிடம் ஒரு முறை கேட்கலாம் என்று கூறி, தொடர்பு கொண்டு கேட்டபோது சம்மதித்தார். அவரை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


தயாரிப்பாளர் படத்தின் பணிகள் தொடங்கியதிலிருந்து இதுவரை எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் தான் இருப்பார். ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.‌


அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அடியே படத்தை உருவாக்கி இருக்கிறோம். திரையரங்கத்திற்கு வந்து பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.


நாயகி கௌரி ஜி. கிஷன் பேசுகையில், '' இந்த நிகழ்ச்சியை முதன்முதலாக தொகுத்து வழங்கும் நடிகர் பிரேம்ஜிக்கு வணக்கம். இந்தத் திரைப்படம் என்னுடைய திரையுலக பயணத்தில் முக்கியமான படம். என்னுடைய வாழ்க்கையில் '96' படத்தில் எப்படி நடிக்க சம்மதித்தேனோ... அதேபோன்று ஒரு சூழல் இந்த படத்திலும் ஏற்பட்டது. 96 படத்திற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஏராளமான கதைகளை கேட்டேன். ஆனால் சில கதைகள் மட்டும் தான் மனதிற்கு நிறைவாக இருந்தது. இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். இயக்குநருடைய அடுத்த படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.


இந்த படத்தில் செந்தாழினி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அவள் உறுதி மிக்கவள். அன்பானவள். பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரம். பல கோணங்களையும் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பிலும் நடித்து வருகிறேன். சில தயாரிப்பு நிறுவனங்களில் மட்டுமே நேர் நிலையான தாக்கங்கள் இருக்கும். அந்த வகையில் இந்த நிறுவனம் இன்னும் பல திரைப்படங்களை தயாரித்து தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உயர வேண்டும். உயர்வார்கள்.


ஜீ.வி. பிரகாஷ் குமார் மிகவும் அன்பான சக நடிகர். எளிமையானவர். இனிமையானவர். தன்மையானவர்.


'அடியே' திரைப்படத்தை ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் திரையரங்குகளில் பார்க்க பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.





இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில்,'' உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக நான் திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனாக நடித்திருக்கிறேன். இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கதை சொல்லும் போதே மிகவும் பிடித்திருந்தது. வித்தியாசமாகவும் இருந்தது. கௌதம் வாசுதேவ் மேனனாக நடித்திருக்கிறேன் என்று இன்னும் அவருக்கு தெரியாது.  அவர் கோபித்துக் கொள்ள மாட்டார் என்பதால் அவராக நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுத்தது இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தான். அவர் ஒரு பல குரல் வித்தகர்.


இந்த திரைப்படத்தில் நான் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒன்று விஞ்ஞானியாகவும், மற்றொன்று கெளதம் வாசுதேவ் மேனனாகவும் நடித்திருக்கிறேன். இரண்டுமே சிரமமான கதாபாத்திரங்கள் தான்.


இந்த திரைப்படத்தில் நான் விஜய் சார் படத்தை இயக்கி விட்டதாக கதையில் வரும். இந்த விளம்பரம் வெளியான பிறகு தான் எனக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.


தயாரிப்பாளரை முதன்முதலாக அவரது வீட்டில் சந்திக்கும் போது எனக்கு தெய்வீக அனுபவம் தான் ஏற்பட்டது.


நான் இந்த படத்தில் நடிக்கும் போது ஜீ. வி. பிரகாசுடன் தான் நடித்தேன். இதற்காக படப்பிடிப்பு தளத்தில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அவரைப் பற்றிய பல புதிய விசயங்களை தெரிந்து கொண்டேன். நல்ல மனதுக்காரர். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அவர் ஜோதிட கலையிலும் வித்தகராக இருக்கிறார். எனக்கு அவர் சொன்ன ஜோதிடம் பலித்தது.


ஜீ.வி. பிரகாஷ் குமார் இந்த படத்தில் கடினமான எப்போதும் குழப்பத்தில் இருக்கக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காட்சியில் குழப்பமான மனநிலையில் நடித்து முடித்தவுடன்.. ஓய்வு கிடைக்கும் போது படப்பிடிப்பு தளத்திலேயே தொலைபேசி மூலம் இசை குறிப்புகள் குறித்து பேசுவார். பன்முக திறன் படைத்த கலைஞர்.


ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர்.. உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.'' என்றார்.



நாயகன் ஜீ. வி. பிரகாஷ் குமார் பேசுகையில்,'' அடியே மிகவும் வித்தியாசமான படம். வழக்கமான படம் கிடையாது. ஃப்யூச்சர்ஸ்டிக் சயின்ஸ் ஃபிக்சன் லவ் ஸ்டோரி. இதுவே மிகப்பெரிய சவாலாக இருந்தது. சென்னையில் பனிமழை பொழியும் என்பார். ஆனால் அதனை படக்குழு திரையில் நேர்த்தியாக செய்து காட்டியது.


படப்பிடிப்பு தளத்தில் வெங்கட் பிரபுவுடன் இசை தொடர்பாக விவாதிப்போம்.


நான் அண்மைக்காலமாக பணியாற்றியதில் சிறந்த பட தயாரிப்பு நிறுவனம் இதுதான் என்று உறுதியாக சொல்வேன். இந்த நாளில் இந்த தளத்தில் படப்பிடிப்பு நடக்கும் என்றால் அது உறுதியாக நடக்கும். அவர்கள் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். நம் நேரத்தையும் வீணடிக்க மாட்டார்கள். நேரத்திற்கு மதிப்பளிப்பவர்கள். இதனால் இந்த நிறுவனத்துடன் தொடர்ந்து பணியாற்றுவேன் என உறுதியாக நம்புகிறேன்.


நடிப்பை பொறுத்தவரை கௌரி கிஷன், மதும்கேஷ் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.


இந்தப் படம் குறித்து இயக்குநருக்கு ஒரு கற்பனையான காட்சி அமைப்பு இருந்தது. ஃபியூச்சரஸ்டிக்.. மல்டிவெர்ஸ்.. இதையெல்லாம் எழுதுவதற்கு எளிதாக இருக்கும். எப்படி காட்சிப்படுத்தப் போகிறீர்கள் என்று கேட்டேன். ஆனால் அதை எல்லாம் அவர்கள் நேர்த்தியாக காட்சிப்படுத்தி வியக்க வைத்திருக்கிறார்கள்.

ஜஸ்டின் பிரபாகரன் அருமையான இசை ஆல்பத்தை வழங்கி இருக்கிறார். இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும்.'' என்றார்.


Comments


bottom of page