‘கர’ - விமர்சனம்
- mediatalks001
- Apr 30
- 2 min read

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 'கர'
தனுஷ், மமிதா பைஜூ, கே எஸ் ரவிக்குமார், கருணாஸ், சுராஜ் வெஞ்சாராமூடு, ப்ரித்வி பாண்டியராஜன் , ஸ்ரீ ஜா ரவி ஆகியோர் நடித்துள்ளனர் .
விவசாயி கே எஸ் ரவிக்குமாரின் மகனான நாயகன் தனுஷ் 16 வயதில் அவரது பணத்தை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடி திருட்டு தொழில் செய்து வருகிறார்.
நாயகி மமிதா பைஜூவை காதலிப்பதால் திருட்டு தொழிலை விட்டு விலக நினைக்கும் தனுஷ் அவரை திருமணம் செய்வதற்காக கடைசியாக ஒரு முறை திருட செல்கிறார் .
இந்நிலையில் திருவெறும்பூரில் இருக்கும் எம்.எல்.ஏ வீட்டில் பிரித்வி பாண்டியராஜுடன் தனுஷ் கொள்ளை அடிக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக போலீசிடம் தனுஷ் சிக்கிக் கொள்ள பிரித்வி பாண்டியராஜ் தப்பித்து விடுகிறார் .
போலீஸ் அதிகாரியான சுராஜ் வெஞ்சாரமூடு பொய் வழக்குகளை போட்டு தனுஷை சிக்க வைக்க முயலும் நேரத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பித்து செல்கிறார்.
சில மாதங்களுக்கு பிறகு திருட்டு தொழிலை கை விட்டு ஆந்திராவில் உள்ள ஓட்டலில் மனைவி மமிதா பைஜூவுடன் வேலை பார்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் சொந்தமாக ஓட்டல் தொழில் தொடங்க முடிவு செய்து பணத்திற்காக தனது அப்பா கே எஸ் ரவிக்குமாரை பார்க்க இராமநாதபுரத்திற்கு செல்கிறார்.
இராமநாதபுரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நிலத்தின் பத்திரங்களை வைத்து கடன் வாங்கி டிராக்டர் வாங்கி விடுகிறார் . இதே சமயம் வங்கி கடனை கட்டாததால் வங்கியில் இருந்து கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஜப்தி செய்ய நோட்டீஸ் வருகிறது.
சொந்த தொழிலுக்காக நிலத்தை விற்று பணம் தருமாறு கே.எஸ்.ரவிக்குமாரிடம் தனுஷ் கேட்க பூர்வீக நிலத்தை விற்க மறுக்கும் கே.எஸ்.ரவிக்குமார் மன உளைச்சலில் இறந்து விடுகிறார்.
இச் சுழலில் அப்பா கே.எஸ்.ரவிக்குமார் பிணத்தை அவரது நிலத்தில் அடக்கம் செய்ய தனுஷ் முற்படும்போது வங்கி கடனால் ஜப்தியில் இருக்கும் நிலத்தில் அடக்கம் செய்ய கூடாது என வங்கி அதிகாரிகள் பிரச்சனை செய்கின்றனர் .
அடமானத்தில் இருக்கும் நிலத்தை மீட்டு கே.எஸ்.ரவிக்குமாரின் உடலை அடக்கம் செய்ய கடன் கொடுத்த வங்கியின் கிளைகளில் கருணாஸுடன் சேர்ந்து கொள்ளை அடிக்க முடிவு செய்கிறார் தனுஷ்.
திட்டமிட்டபடி வங்கியின் ஒரு கிளையில் கருணாஸுடன் சேர்ந்து தனுஷ் கொள்ளை அடிக்க, இந்த வழக்கில் கொள்ளையனை கைது செய்யும் பொறுப்பை போலீஸ் உயரதிகாரி சுராஜ் வெஞ்சாரமூடுவிடம் மேலிடம் ஒப்படைக்கிறது .
இறுதியில் வங்கியில் கொள்ளையடித்த பணத்தில் நிலத்தை மீட்டு அப்பா கே.எஸ்.ரவிக்குமாரின் உடலை தனுஷ் அடக்கம் செய்தாரா? போலீஸ் உயரதிகாரி சுராஜ் வெஞ்சாரமூடுவின் பிடியில் தனுஷ் சிக்கினாரா? இல்லையா ? என்பதுதான் ‘கர ’ படத்தின் மீதிக்கதை.
கரசாமி கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் தனுஷ் கதையுடன் இணைந்து அனைத்து காட்சிகளிலும் நடிப்பில் அசுரனாக உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
குணச்சித்திர கதாபாத்திரத்தில் தனுஷ் அப்பாவாக நடித்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மனதை கலங்க வைக்கும் அழுத்தமான நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் .
தனுஷ் மனைவியாக நடித்திருக்கும் மமிதா பைஜூ கதைக்கேற்றபடி சிறப்பாக நடிக்கிறார் .
மிரட்டலான நடிப்பில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சுராஜ் வெஞ்சாரமூடு , வங்கி அதிகாரியாக நடித்திருக்கும் ஜெயராம், தனுஷின் அம்மாவாக வரும் ஸ்ரீ ஜா ரவி, மாமாவாக வரும் கருணாஸ் , ப்ரித்வி பாண்டியராஜன் என படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை, பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு தரம் .
ஏழை விவசாய மக்களை ஏமாற்றி பிழைக்கும் வங்கிகளின் கதையை
மையமாக கொண்டு விவசாய மக்கள் கடனாக வங்கிகளில் வாங்கிய பணத்தை கட்ட முடியாமல் அவதிப்படுவதை அழுத்தமாக சொல்வதுடன் மறைமுகமாக வங்கி அதிகாரிகள் மக்களின் பணத்தை சூறையாடுவதை தோலுரித்து காட்டுவதோடு ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் பார்வையாளர்கள் அனைவரும் ரசிக்கும் பரபரப்பு நிறைந்த படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் ராஜா
மொத்தத்தில் ‘கர ’ – கலங்கும் விவசாயிகளின் காவலன்
ரேட்டிங் : 4.3 / 5





Comments