top of page

‘மாண்புமிகு பறை’ - விமர்சனம்

  • mediatalks001
  • 19 hours ago
  • 1 min read

ree

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் “மாண்புமிகு பறை”. இந்தப் படத்தில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காயத்ரி ரெமா நாயகியாக நடித்துள்ளார். மேலும் அரியன், கஜராஜ், ரமா, அசோக்ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயக்குமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


பறை இசைக்கலைஞர்களான லியோ சிவகுமாரும், ஆரியனும், ஆதிபறை என்ற பெயரில் இசைக் குழு ஒன்றை நடத்தி வருவதோடு, அழிந்து வரும் பறை இசையை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அந்த கலையை வளர்க்கும் முயற்சியிலும், அக்கலையின் பெருமையை உலகறிய செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தப் பறை இசையை தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மட்டுமல்லாது, மற்ற சாதியைச் சேர்ந்த சிறுவர்களும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறார்கள். இது ஆதிக்க சாதியை சேர்ந்த சாதி வெறியர்களுக்கு பிடிக்காமல் போகிறது.அதே சமயம், பறை இசையை மட்டும் இன்றி அந்த இசைக் கலைஞர்களையும் இழிவாகப் பார்க்கும் சிலரால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து மீண்டு அவர்கள் நினைத்ததை சாதித்தார்களா ? இல்லையா ?, என்பதை சொல்வது தான் ‘மாண்புமிகு பறை’


நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவக்குமார், பறை இசைக்கலைஞர் வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பதற்காக நிறைய மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.ஒருசில காட்சிகளில் மிக நேர்த்தியாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.


நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆரியனும் பறை இசைக்கலைஞர் வேடமேற்று அதற்குத் தக்க நடிக்க விழைந்திருக்கிறார்.


நாயகியாக காயத்ரி ரெமா நடித்திருக்கிறார்.ஏற்றுக் கொண்ட வேடத்தை முழுமையாக உள்வாங்கி உணர்ச்சிப்பூர்வமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.


கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் ஆகியோரும் குறைவின்றி நடித்து படத்துக்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறார்கள்.


ஆர்.கொளஞ்சிகுமாரின் ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகளும் பறைஇசை அதிர்வுகளும் கண்களை நிறைத்து மனதிலும் நுழைகின்றன.


தேவாவின் இசையில் பாடல்கள் ஆட்டம்போட வைக்கின்றன.பின்னணி இசையில் பறையின் பெருமிதம்.


சி.எஸ்.பிரேம்குமாரின் படத்தொகுப்பு சீராக இருக்கிறது.


பறை இசையின் பின்னணியை,வலியை,பெருமையைச் சொல்லும் படைப்பாக இப்படத்தைக் கொடுக்க முனைந்திருக்கும் அறிமுக இயக்குநர் எஸ்.விஜய்சுகுமார்,படத்துக்கு வைத்திருக்கும் பெயர் மூலமே பாதிவெற்றி பெற்றிருக்கிறார்.படத்தில் மீதி வெற்றி கிடைத்திருக்கிறது.


ரேட்டிங் - 3 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page