top of page

‘ஐ , நோபடி’ ( I,Nobody) - விமர்சனம்

  • mediatalks001
  • 2 days ago
  • 2 min read

பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் & E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் சார்பில் சுப்ரியா மேனன், முகேஷ் ஆர். மேத்தா, சி.வி. சாரதி தயாரிப்பில் இயக்குநர் நிசாம் பஷீர் இயக்கத்தில் ‘ஐ , நோபடி’ I,Nobody


பிருத்விராஜ் சுகுமாரன்,பார்வதி திருவோத்து,ஹக்கிம் ஷாஜகான் ,அசோகன்,விஜயராகவன், மதுபால்,

சங்கர் ராமகிருஷ்ணன்,நக்ஷத்ரா ஆகியோர் நடித்துள்ளனர் .


ஒரு அரசு ஊழியராக பணிபுரியும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பிருத்விராஜ் சுகுமாரன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் மனைவி பார்வதி திருவொத்து மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார் .


இந்நிலையில் பார்வதி திருவொத்துக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை தெரிந்து கொள்ளும் பிருத்விராஜ் சுகுமாரன் அவரை மிரட்டுவதற்காக அவர் வேலை செய்யும் வங்கிக்கு துப்பாக்கியுடன் செல்கிறார்.


அதே சமயம் அந்த வங்கிக்குள் கொள்ளை கும்பலை சேர்ந்த மூன்று திருடர்கள் நுழைந்து 17 கோடி ரூபாயைக் கொள்ளையடிக்கிறார்கள்.


மூன்று திருடர்களும் வங்கிக்குள் இருக்கும் பிருத்விராஜ் சுகுமாரனை தாக்கி முகத்தை மூடி பிணைக் கைதியாக தங்களுடன் அழைத்துச் சென்று வழியில் அவரை இறக்கி விடும்போது, மூன்று பேரில் ஒருவரது ஆதாரம் பிரித்விராஜ் சுகுமாரனிடம் கையில் சிக்குவதோடு, ஒரு கட்டத்தில் சாலை விபத்தில் சிக்கி மூன்று பேரும் இறக்கிறார்கள்.


பிரித்விராஜ் சுகுமாரனுக்கு கிடைத்த ஆதாரத்தினால் திருடர்கள் யார் ? என்பதை போலீஸ் கண்டுப்பிடிப்பதுடன் அவர்கள் இறந்துவிட்டதால், அவர்கள் கொள்ளையடித்த பணத்தை கைப்பற்ற முடியாமல் போலீசார் திணறுகிறார்கள் .


இந்நேரத்தில் இணைய தள ஊடகங்கள் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு இந்த கொள்ளையில் சம்மந்தம் இருக்கிறது என அவதூறான செய்திகளை பரப்புவதால் பிரித்விராஜ் சுகுமாரனுடன் அவரது குடும்பத்தாருக்கும் பல சிக்கல்கள் ஏற்படுகிறது.

மேலும் போலீசாரும் பிரித்விராஜ் சுகுமாரன் மீது சந்தேகப்பட்டு அவரை விசாரிக்க தொடங்குகின்றனர் .


இச் சுழலில் பிரித்விராஜ் சுகுமாரனுடன் சேர்ந்து இந்த வழக்கினால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கான்ஸ்டபிள் ஹக்கிம் ஷாஜகான் கொள்ளை கும்பல் கொள்ளையடித்த பணத்தை மறைத்து வைத்த இடத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் .


இந்நிலையில் சாலையின் அருகே பெரிய உண்டியலிருந்து பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கிறது .


இறுதியில் மிக பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்ட பிரித்விராஜ் சுகுமாரன் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்தது எப்படி ? போலீசுக்கு தெரியாமல் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கைப்பற்றியது யார் ? என்பதை சொல்லும் படம்தான் ‘ஐ , நோபடி’ (I,Nobody).


கதையின் நாயகனாக நடித்திருக்கும் பிரித்விராஜ் சுகுமாரன் அமைதியான நடிப்பில் வீக்கமடைந்த கண்களோடு அறிமுகமாகும்போதும் , எதிரான சிக்கல்களில் இருந்து விடுபட பணம் பறிக்கும் கும்பலிடமிருந்து போராடும்போதும் , அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளிலும் கதாபாத்திரத்துடன் இணைந்து மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


பிரித்விராஜ் சுகுமாரனின் மனைவியாக நடித்திருக்கும் பார்வதி திருவோத்து இயல்பான நடிப்பில் அனைத்து உணர்வுகளையும் உள்வாங்கி நடிப்பில் சிறந்த நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.


காவலர் கதாபாத்திரத்தில் கொள்ளை பணத்தை தேடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹக்கிம் ஷாஜகானின் எதார்த்த நடிப்பு கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.


ஜேக்கப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசோகன், முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜயராகவன், டி.எஸ்.பியாக நடித்திருக்கும் சங்கர் ராமகிருஷ்ணன், வங்கி கொள்ளை வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு அதிகாரியாக நடித்திருக்கும் மதுபால், பிரித்விராஜின் மூத்த மகளாக நடித்திருக்கும் ஜியா மற்றும் இளைய மகளாக நடித்திருக்கும் சிறுமி அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் பிரமிக்கும்படியான ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் .


இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் இசையுடன் பின்னணி இசை காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து பயணித்திருகிறது .


வங்கியில் நடக்கும் கொள்ளை சம்பவத்தை மையமாக கொண்ட கதையுடன் ஒரு இயல்பான மனிதனின் வாழ்க்கை போராட்டத்துடன் அவர் எதிர்கொள்ளும் குடும்ப சிக்கல்களை பதட்டம் கொண்ட பரபரப்பான காட்சிகளுடன் ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்புடன் கதையை நகர்த்தி அனைவரும் ரசிக்கும் கிரைம் திரில்லராக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் நிசாம் பஷீர்.


மொத்தத்தில், ‘ஐ , நோபடி’ (I,Nobody) பரபரப்பான மாஸ் கிரைம் திரில்லர்


ரேட்டிங் - 4.2 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page