இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்த மெகாஸ்டார் சிரஞ்சீவி !
- mediatalks001
- 16 minutes ago
- 1 min read



மெகாஸ்டார் சிரஞ்சீவி, இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்தார்!
ஆசியக் கோப்பையில் புரிந்த சாதனைகளுக்காக, “மன சங்கர வர பிரசாத் காரு” படப்பிடிப்பு தளத்தில் சிறப்பு பாராட்டு விழா!
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய திரைப்படம் “மன சங்கர வர பிரசாத் காரு”, இயக்குநர் அநில் ரவிபுடி இயக்கத்தில் மிக வேகமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், சிரஞ்சீவி தனது படப்பிடிப்பிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, இந்தியாவின் இளம் கிரிக்கெட் சென்சேஷனான திலக் வர்மாவை சந்தித்து அவரைக் கௌரவித்தார். சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியில் திலக் வர்மாவின் தீவிரமான ஆட்டமும், மிக அழுத்தமான நேரத்தில் காட்டிய நிதானமும் முக்கிய பங்காக இருந்தது.
இயல்பிலேயே மிகச்சிறந்த பாராட்டும் மனம்கொண்டவராக கொண்டாடப்படும் சிரஞ்சீவி, திலக் வர்மாவை அன்புடன் வரவேற்று, கௌரவிக்கும் விதமாக அவரின் தோளில் சால்வை போர்த்தி, அவரது மாட்ச்-வின்னிங் தருணத்தை பதிவு செய்த, சிறப்பான புகைப்படத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். மேலும் சிரஞ்சீவி, திலக் வர்மாவின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, அஞ்சாத மனநிலை ஆகியவற்றை பாராட்டி, “இவை வாழ்க்கையிலும் வெற்றிக்கான அடித்தளங்கள்” எனக் கூறி உற்சாகமூட்டினார்.
இந்த நிகழ்வு, சிரஞ்சீவியின் புதிய தலைமுறை திறமைகளை மதிக்கும் மனப்பான்மையையும், எல்லா துறைகளிலும் சிறந்தவர்களை கௌரவிக்கும் அவரது பாராட்டும் குணத்தையும் இயல்பையும் வெளிப்படுத்தியது.
இந்த சிறப்பு தருணத்தில், நடிகை நயன்தாரா, இயக்குநர் அநில் ரவிபுடி, தயாரிப்பாளர்கள் சாஹு கரப்பாட்டி மற்றும் சுஷ்மிதா கோனிடேலா ஆகியோரும் பங்கேற்று, திலக் வர்மாவின் சாதனையைப் பெருமையுடன் பாராட்டினர்.
தனது சாதனைக்கு மெகாஸ்டாரிடமிருந்து கிடைத்த இந்த அங்கீகாரம், திலக் வர்மாவுக்கு மறக்கமுடியாத தருணமாக அமைந்தது. ரசிகர்களுக்கு இது, சிரஞ்சீவியின் மனிதநேயமும், தாழ்மையும், ஊக்கமூட்டும் தன்மையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்திய சிறப்பு நிகழ்வாக இருந்தது.
இந்த மனமகிழ்ச்சியான செயல் மூலம், சினிமாவின் வழியிலோ அல்லது வேறெந்த வழியிலுமோ “உண்மையான மகத்துவம் என்பது பிறரைப் பாராட்டி உயர்த்துவதில் தான் இருக்கிறது” என்பதை சிரஞ்சீவி மீண்டும் நிரூபித்துள்ளார்.