top of page

தமிழ் சினிமாவின் அடுத்தத் தலைமுறை நடிகர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் ஏகன்

  • mediatalks001
  • 2 days ago
  • 2 min read

ree

ree

ree

தெலுங்கு மற்றும் மலையாளத் திரைத்துறையின் சென்சேஷனல் முன்னணி நடிகைகளுடன் நடிகர் ஏகன் இணைகிறார்!


புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்துவின் விஷன் சினிமா ஹவுஸ், தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. நம்பகத்தன்மை, உணர்வுப்பூர்வமான கதைகள் மற்றும் புதிய திறமையாளர்களை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக விஷன் சினிமா ஹவுஸ் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இடத்தைப் பிடித்துள்ளது.


டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இருவரும் இளம் திறமையாளர்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கி தருவதற்கு பெயர் பெற்றவர்கள். ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்ற ‘ஜோ’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தது விஷன் சினிமா ஹவுஸ். தரமான கதை மற்றும் சிறந்த நடிப்பிற்காக பாராட்டப்பட்ட அந்தப் படம் திரையரங்குகளில் 52 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன் மற்றும் யோகி பாபு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த ’கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தை தயாரித்து பார்வையாளர்களின் நம்பிக்கையை தக்கவைத்தது இந்நிறுவனம்.


தற்போது விஷன் சினிமா ஹவுஸ் மீண்டும் நடிகர் ஏகனுடன் இணையும் ’புரொடக்‌ஷன் நம்பர் 3’ படத்தை அறிவித்துள்ளது. ‘ஆஹா கல்யாணம்’ பட புகழ் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கும் இந்தப் படம் எளிமையான பூஜையுடன் தொடங்கியது. புதிய திறமையாளர்களுடன் பார்வையாளர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தைக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்தப் படம்.


‘ஜோ’, ‘கோழிப்பண்னை செல்லதுரை’ ஆகிய படங்கள் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் பிரபலமான நடிகர் ஏகன் இந்தப் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரங்கள், ஆழமான நடிப்பு ஆகியவற்றிற்காக பெயர் பெற்ற ஏகன் தமிழ் சினிமாவின் அடுத்தத் தலைமுறை நடிகர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார்.



‘கோர்ட்: ஸ்டேட் vs எ நோபடி’ தெலுங்கு படம் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பான் இந்திய ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி இந்தப் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். ‘புரூஸ் லீ பிஜி’ படத்தில் அறிமுகமாகி, மலையாளத்தில் ப்ளாக்பஸ்டர் ஹிட் படமான ‘மின்னல் முரளி’, ‘தீப்பொறி பென்னி’ மற்றும் ’சேஷம் மைக்கேல் ஃபாத்திமா’ படங்களில் சிறப்பாக நடித்த ஃபெமினா ஜார்ஜ் இந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார்.


தரமான கதைகளை தயாரிப்பது மற்றும் திறமையாளர்களை ஊக்குவிக்கும் தனது நிலைப்பாட்டை முன்னெடுத்து செல்லும் வகையில், விஷன் சினிமா ஹவுஸ் அர்ப்பணிப்புடன் தனது மூன்றாவது படத்தை தயாரித்து வருகிறது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page