top of page

நவம்பர் 28ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் 'அஞ்சான்'

  • mediatalks001
  • 6h
  • 3 min read

ree

“11 வருடத்திற்கு முன்பு திட்டியதை விடவா இப்போது திட்டப் போகிறார்கள் ?” ; அஞ்சான் ரீ ரிலீஸ் குறித்து இயக்குநர் லிங்குசாமி


தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி ஹீரோக்கள் பலர் சில வருடங்களுக்கு முன்பு நடித்த சூப்பர்ஹிட் படங்கள் சமீபகாலமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த 2014ல் என்.லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் 4k தொழில்நுட்பத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வரும் நவம்பர் 28ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அது மட்டுமல்ல இப்படம் தற்போது மறு படத்தொகுப்பு ( RE Edit ) செய்யப்பட்டு படத்தின் நீளம் கணிசமாக குறைக்கப்பட்டு வெளியாக இருக்கிறது.


சூர்யா, சமந்தா, வித்யுத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பில் உருவான இப்படத்தை தயாரிப்பாளர் என்.சுபாஷ் சந்திரபோஸ் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் - யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தது.


இப்படம் தற்போது ஏன் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது, எதற்காக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த பல விவரங்களை இந்த படத்தின் பத்தரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் லிங்குசாமி பகிர்ந்து கொண்டார்.


இயக்குநர் என்.லிங்குசாமி பேசும்போது,


“இப்படம் முதலில் எடுத்தபோது 2 மணி நேரம் 36 நிமிடம் ஓடும் விதமாக இருந்தது. இப்போது 36 நிமிடங்கள் குறைத்துள்ளோம். நீளத்தை குறைத்தால் மட்டுமே ஒரு படம் நன்றாக வந்து விடாது. அதேசமயம் நீளத்தை குறைப்பதும் நமது நோக்கம் அல்ல. ஆனால் படத்தைப் பார்க்கும்போது அதன் அவசியம் உங்களுக்கு தெரிய வரும். இந்த படத்தை தற்போது மறு படத்தொகுப்பு செய்து ரீ ரிலீஸ் செய்வதற்கு காரணம் 11 வருடங்களுக்கு முன்பு இந்த படம் வெளியான சமயத்தில் முதன்முதலாக அதிகப்படியான ட்ரோல்களில் சிக்கியது இந்த படம் தான்.


அதே சமயம் இப்படத்தை உண்மையாக ரசித்த பல பேர் இப்போது பார்த்தாலும் இந்த படத்தை ஏன் அப்படி திட்டினார்கள் என தனித்தனியாக என்னிடம் கூறியிருக்கிறார்கள். சினிமாவை புரட்டிப்போடும் உலக மகா கதை என்றெல்லாம் நான் இதை சொல்லவில்லை.. இது ஒரு படம். அவ்வளவுதான். சூர்யா ரசிகர்கள் சூர்யாவை எப்படி எல்லாம் திரையில் பார்க்க ஆசைப்பட்டார்களோ, அதெல்லாம் இந்த படத்தில் வந்திருக்கிறது, திருப்பதி பிரதர்ஸ் போஸ் பின்னணியில் பக்கபலமாக இருந்ததால் தான் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை உருவாக்க முடிந்தது. மும்பை, கோவா பகுதிகளில் மட்டுமே 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.


அந்த சமயத்தில் திருப்பதி பிரதர்ஸ் கோலி சோடா, மஞ்சப்பை, கும்கி என தொடர்ச்சியாக பல படங்களாக கொடுத்து வந்தது, தொடர் வெற்றி கூட ஒரு சிலருக்கு கோபம், வெறுப்பு, பொறாமை இவற்றையெல்லாம் கூட ஏற்படுத்தி விடும். முதன்முதலில் அப்படி எங்களை அடித்தவர்கள், இப்போது தயவு தாட்சண்யம் இன்றி எல்லா படங்களையும் அடிக்கிறார்கள். எனக்கு இப்போது பயமே இல்லை. 11 வருடத்திற்கு முன்பு திட்டியதை விடவா இப்போது திட்டப் போகிறார்கள் ? தவிர ட்ரோல் செய்வதால் மட்டுமே ஒரு படத்தின் வெற்றியை தடுத்து விட முடியாது. ரன், சண்டக்கோழி படங்கள் அப்போது வந்திருந்தால் இந்த ட்ரோல்கள் என்ன செய்திருக்கும் ? மக்கள் விரும்பினால் படத்தின் ஓட்டத்தை தடுக்க முடியாது.


அதேசமயம் என் பக்கமும் தவறு இருக்கிறது. 100% சரியான படத்தை கொடுத்துவிட்டு அதை மக்கள் புறக்கணித்து விட்டார்கள் என அவர்கள் மீது பழி போட விரும்பவில்லை. அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நானும் சில தவறுகளை இந்த படத்தில் செய்திருக்கிறேன். அதை பல மடங்கு அவர்கள் பெரிதாக ஆக்கிவிட்டார்கள்.. ரசிகர்களை ஏமாற்றுவதற்காக படம் எடுக்கவில்லை. சில நேரங்களில் நாங்களே ஏமாந்து விடுகிறோம்.


அஞ்சான் வெளியான சமயத்தில் நான் ஒரு பேட்டியில் ரொம்பவே தன்னம்பிக்கையுடன் சொன்ன வார்த்தைகளை அந்த சமயத்தில் சிலர் வேறு விதமாக பூதாகரப்படுத்தி விட்டார்கள். அப்படி செய்தது யார் என்றும், செய்ய சொன்னவர் யார் என்றும் எனக்கு தெரியும்.

தனியாக கிராமத்தில் இருந்து கிளம்பி இங்கே சினிமாவுக்கு வந்து வெற்றிகளை பெற்ற ஒருவன் இந்த அளவுக்கு கூட தன்னம்பிக்கையுடன் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது ? சிலர் மறுபடியும் தோற்பதற்காக இப்போது இந்த படத்தை மீண்டும் ரிலீஸ் செய்கிறீர்களா என்று கேட்கிறார்கள். இதை வெற்றி தோல்வியை மனதில் வைத்தொ, யாருக்கும் சவால் விடுவதர்காகவோ ரீ ரிலீஸ் செய்யவில்லை.


இந்தப் படத்தை ரொம்பவே விரும்பி தான் எடுத்தேன். அதே சமயம் எல்லா படங்களுமே ரன், ஆனந்தம், சண்டக்கோழி போல வெற்றியை தொட்டு விடுவதில்லை. மணிரத்தினம், ஷங்கர் போன்றவர்களுக்கு கூட மிக பெரிய அளவில் நெகட்டிவ் கருத்துக்களை பரப்புகிறார்கள். ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ், எங்களது திருப்பதி பிரதர்ஸ் இப்படி பல நிறுவனம் இருந்தபோது நல்ல படங்களாக கொடுத்தோம். புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தினோம்.


அஞ்சான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த சமயத்தில்.. இந்த படத்தின் இரண்டு பகுதிகளையும் சேர்ந்த மாதிரி பார்த்து வேலை செய்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. என்னுடைய எல்லா நண்பர்களுக்கும் இந்த படத்தை திரையிட்டு காட்டினேன். ஒருவர் தொடர் வெற்றியில் இருக்கும்போது, அவரை சுற்றி இருப்பவர்கள் கூட, அவருக்கு ஏன் அறிவுரை சொல்ல வேண்டும், அவருக்கு தெரியாததா என்று ஒதுங்கி விடுவார்கள். அதுதான் எனக்கும் நடந்தது. அஞ்சான் வெளியான சமயத்தில் பத்திரிகையாளர்கள், ரசிகர்களிடமிருந்து கிடைத்த விமர்சனங்கள் மற்றும் நிறை குறைகளை மனதில் வைத்து தான் இந்த டிஜிட்டல் வெர்ஷனை மறு படத்தொகுப்பு செய்து உருவாக்கியுள்ளோம். இதில் இடம்பெற்ற எந்த ஒரு நடிகர்களின் கதாபாத்திரங்களையும் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என கணக்கிட்டு நீக்கவில்லை. கதையின் சீரான ஓட்டத்திற்கு ஏற்ப மீண்டும் படத்தொகுப்பு செய்திருக்கிறோம்.


ஓடிடியில் ஏற்கனவே இந்த படத்தை வாங்கியவர்கள், விரும்பினால் தற்போது இந்த புதிய டிஜிட்டல் வெர்ஷனை ஒளிபரப்பலாம். சிவகுமார் சார் குடும்பத்துடன் வந்து படம் பார்த்தார். சூர்யா ரசிகர்களும் பார்த்து ரசித்தார்கள். சூர்யா தற்போது ஊட்டியில் படப்பிடிப்பில் இருப்பதால் விரைவில் இந்த படத்தை வந்து பார்ப்பார் என நம்புகிறேன்.


வாரியர் படத்தை தெலுங்கில் இயக்கினேன். அப்படியே தமிழிலும் டப்பிங் செய்தோம். அதன்பிறகு மகாபாரதத்தை படமாக எடுப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டு வருடம் அதிலேயே போனது. அதன் பட்ஜெட், நடிகர்கள் என காலம் நீட்டித்துக் கொண்டே போவதால்.. அடுத்ததாக தற்போது பிப்ரவரியில் புதிய படத்தை இயக்க தயாராகி விட்டேன். இந்த படத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் கதாநாயகனாக நடிக்கிறார்” என்று பேசினார்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page